TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல்

July 6 , 2022 764 days 508 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தாக்க தொழில்களுக்கு உகந்த சூழலை வழங்கும் மாநிலங்களின் தரவரிசை அறிக்கை புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் பல்வேறு மாநிலங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன.
  • "புத்தாக்க தொழில் முன்னெடுப்புக்கான பார்வை மற்றும் இலக்குகளைக் கொண்டிருத்தல்' என்ற பிரிவில் பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், அந்தமான்-நிகோபார், அருணாசல பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களுடன் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. "புத்தாக்க தொழில்களுக்கான சூழலில் சிறந்த முன்னேற்றம்' என்ற பிரிவில் நமது அண்டை மாநிலமான கேரளம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இடம்பெற்றிருப்பது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை எடுத்துரைக்கிறது.
  • "ஸ்டார்ட்அப் இந்தியா' எனப்படும் "புத்தாக்க இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, 2015, ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையின்போது அறிவித்தார். எண்மம், தொழில்நுட்பத்துறை முதல் விவசாயம், உற்பத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் வரை புத்தாக்க தொழில்முனைவோரை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
  • மக்களின் தினசரி வாழ்க்கையை எளிமைப்படுத்தும் புதுமையான யோசனையை தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெற்றிகரமான ஒரு தொழிலாக உருவாக்குவதுதான் புத்தாக்கத் தொழில் முனைவு. ஸ்விகி, úஸாமாட்டோ போன்ற கைப்பேசி செயலிகள் மூலம் விருப்பமான உணவகத்தில் விருப்பமான உணவைத் தேர்வு செய்து வீட்டுக்கே வரவழைப்பது புத்தாக்க முனைப்பில் ஒன்று. இப்போது பல உணவு விடுதிகள், தங்களுக்கான விநியோகச் செயலிகளை உருவாக்குகின்றன. இதே போன்ற முனைப்புதான் ஊபர், ஓலா போன்ற வாடகை வாகனங்களை செயலி மூலம் இயக்கும் புத்தாக்க தொழில் முனைப்பு.
  • உலகம் முழுவதும் புத்தாக்க தொழில்கள் முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியிருந்தாலும் இந்தியா அதில் முன்னணியில் உள்ளது நமக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும். இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு வரை 500-க்குள் இருந்த புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை, அடுத்த எட்டு ஆண்டுகளில் 70,000-ஆக அதிகரித்திருப்பதே இதற்கு சான்று.
  • இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் செயல்படுகின்றன. இந்தியாவின் 625 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புத்தாக்க நிறுவனமாவது செயல்பட்டு வருகிறது என்பது அதன் வீச்சின் அடையாளம்.
  • இதில், ரூ.7,500 கோடி (1 பில்லியன் டாலர்) மதிப்புகொண்ட "யுனிகார்ன்' நிறுவனங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இந்த யுனிகார்ன் நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் கோடி. உலக அளவில் 487 யுனிகார்ன் நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 300 யுனிகார்ன் நிறுவனங்களுடன் சீனா இரண்டாம் இடத்திலும், 100 யுனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளதாக "ஓரியோஸ் வென்சர்ஸ்' ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த யுனிகார்ன் நிறுவனங்களில் பெங்களூரு முதலிடத்திலும், தில்லி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
  • பிரதமர் நரேந்திர மோடி, "புத்தாக்க தொழில்துறை புதிய இந்தியாவின் முதுகெலும்பு; நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றலை அளிக்கும் உந்துசக்தி' என்று குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. இந்தியாவில் இப்போது 55 தொழில்துறைகளில் புத்தாக்க தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
  • "யுபிஐ' எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற அமைப்பின் வெற்றி, புத்தாக்க தொழில்துறையின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோல பிற எண்ம பணப்பரிமாற்ற முறைகளும் புத்தாக்க தொழிலுக்கு உதவுகின்றன.
  • புத்தாக்க தொழில் புரட்சியால் பாரம்பரிய தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்கிற விமர்சனம் எழுப்பப்படுகிறது. ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இணையவழி வர்த்தகம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்குவது குறையாமல் இருப்பதுபோலத்தான் இதுவும். கைப்பேசிகள், எண்ம தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவற்றின் நேரடி விற்பனை வேண்டுமென்றால் சற்று குறைந்திருக்கலாம். மற்றபடி, புத்தாக்க தொழில் மக்களுக்கு அளிக்கும் பயன்கள் ஏராளம்.
  • இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் புத்தாக்க தொழில்முனைவோர் உருவாகி வருவது, சமச்சீராக இந்திய இளைஞர்கள் தொழில்முறை சாதனை புரிந்து வருவதைக் காட்டுகிறது. கல்வி, வணிகம் மட்டுமின்றி விவசாயத்துறையிலும் புத்தாக்க நிறுவனங்கள் கோலோச்சுவதும், அத்துறையில் இந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டை ஈர்த்திருப்பதும் கவனிக்கத்தக்கவை.
  • தொழில்நுட்பங்கள் வளர வளர மக்களின் வாழ்க்கை முறை எளிமையாகிறது. தொழில் நுட்பங்களின் துணையுடன் புதிய சிந்தனையைப் புகுத்தும் புத்தாக்க தொழில்கள், சர்வதேச வரைபடத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கின்றன. நாம் பெருமைப் படலாம்!

நன்றி: தினமணி (06 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்