TNPSC Thervupettagam

ஸ்பானிஷ் ஃப்ளூ மறுஅலை: ஒரு பாடமும் நம்பிக்கையும்!

April 26 , 2021 1191 days 455 0
  • மனித குல வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய விஷயங்களில் முதலிடம் வகிக்கும் ஸ்பானிஷ் ஃப்ளூவின் இரண்டாம் அலைக்கும், இப்போது நாம் எதிர்கொண்டுவரும் கரோனா இரண்டாம் அலைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நமக்குப் பாடங்களும் இருக்கின்றன.
  • முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்த 1918-ன் தொடக்கத்திலிருந்து போர் முடிவுக்கு வந்த பிறகும்கூட ஸ்பானிஷ் ஃப்ளூ தன் கோர தாண்டவத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தது.
  • உலக வரைபடத்தின் மேற்கு எல்லையில் உள்ள அலாஸ்கா முதல் கிழக்கு எல்லையில் உள்ள சமோவா தீவு வரை மனிதர்கள் உள்ள எந்தப் பகுதியையும் ஸ்பானிஷ் ஃப்ளூ விட்டுவைக்கவில்லை.
  • 50 கோடிக்கும் மேற்பட்டோருக்குத் தொற்றிய இந்த நோய், 5 கோடிக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்தது. அப்போதைய உலக மக்கள்தொகையில் இது 2.7%. இன்றைய மக்கள்தொகையில் அந்த விகிதத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் இறப்பு எண்ணிக்கை 20.25 கோடியைத் தொடும்!
  • உலக அளவில் இந்தியாவில்தான் அப்போது அதிக பாதிப்பு ஏற்பட்டது. 1.25 கோடிப் பேர் உயிரிழந்தார்கள். இரண்டு உலகப் போர்களாலும் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட ஸ்பானிஷ் ஃப்ளூவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

எப்படி எதிர்கொண்டார்கள்?

  • நாடுகளின் எல்லைகளை இந்தப் பெருந்தொற்றுக் காலகட்டம் மதிக்கவே இல்லை. இதற்குப் பிரதான காரணம், உலகப் போரால் பல இடங்களுக்கும் பல நாடுகளுக்கும் போர் வீரர்கள் இடம்பெயர்ந்ததுதான்.
  • அவர்கள் தங்களுடன் நோய்க் கிருமிகளையும் கொண்டுசென்றார்கள். மேலும், ‘அவ்வப்போது வரும் காய்ச்சல்போலவே இதுவும்’ என்று அலட்சியமாகக் கருதியதும் ஒரு காரணம்.
  • விளைவாக, ஸ்பானிஷ் ஃப்ளூ பூதாகரமாக உருவெடுத்தது. போர்க் காலத்தில் ஊரடங்கு, தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் தங்கள் தரப்பு பலவீனமாகிவிடும் என்று அஞ்சியே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால், ஸ்பானிஷ் ஃப்ளூ கட்டுக்கடங்காமல் பரவியது.
  • இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை காந்தியில் ஆரம்பித்து, டி.எஸ்.எலியட், ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஃப்ரன்ஸ் காஃப்கா, டி.எச்.லாரன்ஸ், வால்ட் டிஸ்னியை உள்ளடக்கி துருக்கியின் முதல் அதிபர் முஸ்தஃபா கெமால் அதாதுர்க் வரை நீளும்.
  • பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர், லெனினின் வலக்கரமாகத் திகழ்ந்த யாக்கோவ் ஸ்வெர்த்லோவ், ஆர்தர் கோனான் டாய்லின் மகன், டொனால்டு ட்ரம்ப்பின் தாத்தா என்று மாண்டவர்களின் பட்டியலும் நீளம்.

மறுஅலை

  • ஸ்பானிஷ் ஃப்ளூவின் முதல் அலை 1918-ன் முதல் காலாண்டில் ஏற்பட்டபோது அதன் வீரியம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. தீவிரமான காய்ச்சல், பிற அசௌகரியங்கள் என்று மூன்று நாட்களுக்கு நீடித்தது. மரணங்களும் மற்ற காய்ச்சலால் ஏற்படும் அளவே இருந்தன.
  • இன்னும் சொல்லப்போனால் முதல் அலை ஓய்ந்ததும் ‘அவ்வளவுதான், முடிந்துவிட்டது’ என்று உலகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால், ஆகஸ்ட் வாக்கில் அதிக வீரியம் பெற்ற வைரஸ் பரவத் தொடங்கியபோது உலகம் நடுங்கியது.
  • வைரஸ் தொற்று ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் வீரியம் இருந்தது.
  • உலகப் போரின் களத்தில் இருந்தவர்களும் அவர்களால் தொற்று ஏற்பட்ட சாதாரண மக்களும் கொத்துக்கொத்தாக மடிந்தார்கள். மிக மோசமான வலியைத் தொடர்ந்து மரணத்தை ஏற்படுத்திய நோய் அது.
  • பிரேதப் பரிசோதனையில், இறந்தவர்களின் நுரையீரல் நீல நிறத்திலும் திரவத்தால் நிரம்பியதுபோலவும் காணப்பட்டிருக்கிறது. நீரில் மூழ்கி இறந்தால் நுரையீரல் எப்படி இருக்குமோ அப்படி இருந்திருக்கிறது.

பாடமும் நம்பிக்கையும்

  • உலகம் முழுவதும் ஒரு வைரஸ் பரவுகையில், மொத்த உலகமும் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து எதிர்கொள்ளாததும், நோயை எதிர்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்காமல், நோய் பாதிப்பை மறைப்பதை ஒரு வியூகமாக்கிப் பல அரசுகள் செயல்பட்டதுமே ஸ்பானிஷ் ஃப்ளூ அவ்வளவு பேரைச் சூறையாடக் காரணமாக அமைந்தது.
  • ஒரு பெருந்தொற்றுக் காலத்திலேனும் சமூகமானது ஒருமித்த சிந்தனையோடும், அரசானது சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்தும் செயல்பட வேண்டும் என்பது நமக்கான பாடம். அவ்வளவு கொடிய கிருமியையும் கீழே தள்ளித்தான் இன்றைய இடத்துக்கு மனித குலம் வந்திருக்கிறது என்பது நமக்கான நம்பிக்கை!

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 04 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்