- ரஃபா எல்லைக் கடப்புப் பிராந்தியம்அப்படிப்பட்டதல்ல. மிகச் சுருக்கமாகப் புரிய வேண்டுமென்றால் கணக்கிட முடியாத பணம் பல்வேறு வடிவங்களில் உள்ளே புகுந்து வெளியேறும் பகுதி அது. ஹமாஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலத்தில், இந்த எல்லைக் காவல் பொறுப்பை எகிப்து அரசும் பாலஸ்தீன அத்தாரிடியும் இணைந்து மேற் கொண்டிருந்தன. அப்போதைய பாலஸ்தீன அத்தாரிடி என்றால் ஃபத்தா.எனவே, ஆட்சி மாறியதும் இதுவும் மாற வேண்டியதுதான் அல்லவா? அங்கேதான் மோதல் உருவானது.
- இதற்கு ஒரு பின்னணி உண்டு. பிப்ரவரி 2005-ல் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசா எல்லைப் பகுதியில்உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளையும் ராணுவத்தின் ஒரு பிரிவினரையும் திரும்ப அழைத்துக் கொள்வது என்பதே அது.
- இதன் நேரடிப் பொருள், காசாவில் இஸ்ரேலின் ஆதிக்கம் இருக்காது என்பது. மற்றபடி வழக்கமான மேஸ்திரி வேலைகளை மட்டும் அவர்கள் இஸ்ரேலில் இருந்தபடி பார்ப்பார்கள்.
- காசா எக்காலத்திலும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனவே,இஸ்ரேலியத் துருப்புகளும் வம்படியாகக் குடியமர்த்தப்பட்ட யூதர்களும்இப்போது வெளியேறும் போது எல்லைக் கட்டுப்பாட்டை எப்படியாவதுதன் பொறுப்பில் எடுத்துக் கொண்டுவிட வேண்டும் என்று ஃபத்தா துடித்தது.ஹமாஸுடன் மல்லுக்கட்டி, எப்படியோ அதை சாதித்தும் கொண்டார்கள். இதன் மூலம், காசா மக்கள் ஹமாஸின் கட்டளைக்குப் பணிவோராக இருந்தாலும் ஒட்டுமொத்த பாலஸ்தீன அத்தாரிடி என்பது ஃபத்தாவின் பிடியில்தான் உள்ளது என்று உலகுக்குத் தெரியப்படுத்தினார்கள்.
- ரஃபா எல்லையின் எகிப்துப் பக்கம்இனி எப்போதும் 750 எகிப்திய வீரர்கள்காவலுக்கு இருப்பார்கள். சாதாரணமக்கள் போக்குவரத்து, வர்த்தகப் போக்குவரத்துகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் ஆயுதக் கடத்தலுக்கோ, இதர சட்ட விரோத நடவடிக்கைகளுக்கோ இடம்தரப்படாது என்று எகிப்தும் இஸ்ரேலும் முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.
- எகிப்தில் இருந்து காசாவுக்கு அதிகாரப்பூர்வமாக வருகிற சரக்குகளில் பெரும்பாலும் கட்டுமானப் பொருட்கள் இருக்கும். அதற்கு அடுத்தபடி உணவுப் பொருட்கள். விவசாயமோ, தொழில் வளமோ அறவே அழிந்து போன பாலஸ்தீனத்துக்கு வெளியில் இருந்து ஏதாவது வந்தால்தான் உண்டு. அப்படியென்றால் தெற்கே எகிப்து தவிர அவர்களுக்கு வேறு போக்கிடமில்லை. அதுதான் நெருக்க மானதும் எளிதானதுமான வழி.
- பொது மக்களுக்கு மட்டுமல்ல. ஹமாஸ் உள்ளிட்ட அத்தனை பாலஸ் தீன இயக்கங்களுக்கும் ஆயுதம் உள்ளிட்ட அனைத்தும் வருகிற வழிஅதுதான். அந்த வழியின் கட்டுப்பாட்டு உரிமை பாலஸ்தீன தரப்பில் தன்னிடம்தான் இருந்தாக வேண்டும் என்று ஃபத்தா நினைத்தது.
- ஆனால், ஜூன் 2007-ல் ஹமாஸ்அந்தப் பணியைத் தன் பொறுப்பில்எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.இதுதான் விபரீதத்தின் தொடக்கமானது.
- காசா முழுவதும் ஹமாஸின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்றானதும் எகிப்து அரசு, ரஃபா கிராஸிங்கை மூடிவிட்டது. இனி போக்குவரத்தே கிடையாது. கொதித்துப் போன ஃபத்தாவினர் ஹமாஸுடன் நேரடி மோதலுக்குத் தயாரானது அப்போதுதான். கொடூரமான மோதல் அது.
- இரு தரப்பிலும் நிறைய இழப்புகள். ஏகப்பட்ட சமரச பேச்சுகள்,சமாதான நடவடிக்கைகளுக்குப் பிறகும் பல்வேறு இடங்களில் வேறுவேறு பிரச்சினைகளை முன்வைத்து இரு தரப்பும் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். இஸ்ரேல் சந்தோஷமாக வேடிக்கை பார்த்தது.
- ஒருவாறாக இரு தரப்புத் தலைவர்களும் சந்தித்துப் பேசி, அரை மனதுடன் ஓர் இடைக்கால ஏற்பாட்டுக்கு முன்வந்தார்கள். இஸ்மாயில் ஹனியா தமது அமைச்சரவையைச் சிறிது மாற்றி அமைத்தார். இம்முறை கூட்டணி அமைச்சரவை. ஃபத்தாவுக்கும் இடம் உண்டு.
- ஆனாலும், நிலைமை சரியாகவில்லை. அடிப்படை விரோத உணர்வு அப்படியே இருந்ததால் அடிதடி தொடரவே செய்தது. காசாவில் பணியில் இருந்த ஃபத்தா அரசு அதிகாரிகளை, ஹமாஸ் மொத்தமாக அகற்றியது. ஜூன் 14, 2007 அன்று ஜனாதிபதி மம்மூத் அப்பாஸ் பாலஸ்தீனம் முழுவதற்கும் அவசர நிலைப் பிரகடனம் செய்துவிட்டு இஸ்மாயில் ஹனியாவின் அமைச்சர வையைக் கலைப்பதாக அறிவித்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 - 11 – 2023)