TNPSC Thervupettagam

ஹமாஸ் ஆட்டம் ஆரம்பம்

October 23 , 2023 446 days 290 0
  • இரண்டாயிரத்து ஓராம் ஆண்டின் இறுதியில் பாலஸ்தீன் அத்தாரிடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைக் கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹமாஸின் முன்னணித் தலைவர்கள் பலரை விடுதலை செய்யச் சொல்லி யாசிர் அர்ஃபாத் உத்தரவிட்டார். உண்மையில் அதில் அவருக்கு ஒரு சதவீத விருப்பமும் இல்லை. ஆனால் மக்கள் அளித்த நெருக்கடி சிறிதல்ல. விட்டால் அர்ஃபாத்துக்கு எதிராக ஒரு சிறிய இண்டிஃபாதா தொடங்கி விடுவார்கள் போல இருந்தது.
  • பாலஸ்தீனர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு அமைதி முயற்சியும் எடுபடாத நிலையில், இனியும் இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. காரணம், அந்தக் காலக் கட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தபட்சம் நூறு பாலஸ்தீனர்களாவது மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு பலியாகிக் கொண்டிருந்தார்கள். அரபுக் குடியிருப்புகளில் ‘ரெய்ட்’ என்பது அவர்களது அன்றாட கடமை ஆகிவிட்டிருந்தது.
  • ஒரு நாளைக்கு ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். சில நூறு ராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் உள்ளே நுழைவார்கள். என்ன என்று கேட்க யாராவது எதிரில் வந்தால் கூட சுட்டுவிடுவது. அப்படி கேட்க யாரும் வராத பட்சத்தில் வீடுகளுக்குள் புகுந்து பரிசோதனை என்ற பெயரில் அனைத்தையும் போட்டு உடைத்து விளையாடுவது. வசிப்போரை வெளியேற சொல்வது. மறுத்தால் முதலில் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்னங்கழுத்தில் அடிப்பார்கள். ஆவேசமடைந்து குரல் உயர்த்தினால் துப்பாக்கியின் முன்புறம் பேசும்.
  • விளையாட்டல்ல. மிகையல்ல. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அரபுக் குடியிருப்பிலும் இது நடந்தது. ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியத்தில் எதிரி ராணுவம் எப்படி இப்படியொரு அத்துமீறல் செய்யலாம்? ஆட்சியாளர்கள் அதை எப்படி அனுமதித்து, வேடிக்கை பார்க்கலாம்? கேட்கத் தோன்றுமல்லவா? மக்கள் கேட்டார்கள். அர்ஃபாத்தால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில், இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனத்து மண்ணில் நுழைந்து செய்யும் அத்துமீறல்கள் குறித்து அவர் என்ன பேசியும் இஸ்ரேலிய அரசு காது கொடுத்துக் கேட்கவேயில்லை.
  • அவர் அனுப்பிய கடிதங்களாலும் பேச்சுவார்த்தை தூதுவர்களாலும் எதையும் சாதிக்க முடியவில்லை. அவரே இஸ்ரேலிய பிரதமருடன் பேசுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் பயனற்றுப் போயின. கிட்டத்தட்ட படுதோல்வி என்பது உறுதியான பின்புதான், வேறு வழியின்றி அவர் ஹமாஸ் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தார். குறைந்தபட்சம் மக்களாவது தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட தாகத் திருப்தி கொள்ளட்டும் என்ற எண்ணம் காரணம். அதன் பிறகு ஹமாஸ் தனது வேலையை ஆரம்பித்தது.
  • உண்மையில் இண்டிஃபாதாவின் தொடக்க ஆண்டில் ஹமாஸ் முழுதாக ஈடுபடாததற்கு அதன் முக்கியத் தலைவர்கள் பலர் சிறையில் இருந்ததும் காரணம் என்று சொல்வோர் உண்டு. ஆனால் ஹமாஸை ‘வடிவமைத்த’ ஷேக் அகமது யாசின் அதைக் கடுமையாக மறுப்பார். அந்தத் தருணத்தில் அல்ல. அதற்கு முன்னரும் பின்னரும் பலமுறை மறுத்திருக்கிறார். ஒரு போராளி இயக்கம் என்பது எந்த ஒரு தனி நபரையும் சார்ந்தோ, எதிர்பார்த்தோ இருக்காது; இருக்கக் கூடாது என்பது அவரது சித்தாந்தம். நீயல்ல, உன் செயலே முக்கியம் என்பது அவர்களுடைய சித்தாந்தம்.
  • ஹமாஸ் தாக்கத் தொடங்கிய பின்பு இஸ்ரேல் ராணுவத்தின் மேற்குக் கரை ‘ரெய்டு’கள் கணிசமான அளவில் குறைய ஆரம்பித்தன. ஏனெனில், ஹமாஸ் ஒரு கணக்கு வைத்துக் கொண்டது. மேற்குக் கரை அல்லது காஸாவில் ஒவ்வொரு நாளும் எத்தனை பாலஸ்தீனர்கள் இறக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். அதைவிட அதிகமான அளவில் அதற்கு மறுநாள் இஸ்ரே லின் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு தாக்குதல் நடக்கும்.
  • அது குண்டுவெடிப்பாக இருக்கலாம். நேரடி துப்பாக்கிச் சூடாக இருக்கலாம். தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம். குண்டுகள் அடைக்கப்பட்ட டிரக்குகளில் பிரேக்கைப் பிடுங்கிவிட்டு அதிவேகத்தில் ஓடச் செய்து எதிலாவது மோதி வெடிக்கச் செய்வதாக இருக்கலாம். தேவாலயங்கள் தகர்ப்பாக இருக்கலாம். ஷாப்பிங் மால்கள், பொதுப் பேருந்துகள், உணவகங்களில் நடத்தப்படும் தாக்குதல்களாக இருக்கலாம். இன்னதுதான் என்று சொல்லவே முடியாது. என்றைக்கு எது நடக்கும் என்பது ஒரு புதிர் என்றால், எங்கே என்ன நடக்கும் என்பது இன்னொரு புதிர். இஸ்ரேல் அரசு அன்றைக்கு ஹமாஸ் தரப்பில் இருந்து அவ்வளவு உக்கிரமான பதில் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
  • ஹமாஸின் செயல்பாடுகளுக்கும் சேர்த்து அவர்கள் யாசிர் அர்ஃபாத்தை குற்றம் சாட்டினார்கள். அவரது அமைதிப் பேச்சுவார்த்தை கோரிக்கைகளை நிராகரிக்க அதையே முதன்மைக் காரணமாகக் காட்டினார்கள். ஆனால், ஹமாஸ் விவகாரத்துக்குள் நுழைவதற்கு முன்னால் அவர் எடுத்த எந்த அமைதி முயற்சிக்கும் ஏன் இஸ்ரேல் தரப்பிலிருந்து பதில் இல்லை என்றால் மட்டும் பதில் வராது.
  • ஒரு விதத்தில் அர்ஃபாத்துக்கும் ஹமாஸுக்கும் இடையிலான விரிசல் பெரிதாவதற்கும் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த உறவு முற்றிலும் அறுந்து போவதற்குமே பின்னாளில் அதுதான் காரணமாக இருந்தது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் ஹமாஸை அவர் நேரடியாகக் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, இண்டிஃபாதாவில் ஹமாஸ் நுழைந்து இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கி, அதைத் தீவிரப்படுத்தி, இஸ்ரேல் முழுவதையும் பதற்ற நிலைக்குக் கொண்டு சென்ற போதும் அர்ஃபாத் அது குறித்து வாய் திறக்கவில்லை.
  • அவர் இஸ்ரேலைக் கண்டித்தார். பொதுவாக வன்முறை வேண்டாம் என்று சொன்னார். ஆயுதங்கள் இனி உதவாது என்று சொற்பொழிவாற்றினார். ஆனால் ஹமாஸ் செய்வது தவறு, தாக்குதலை நிறுத்துங்கள் என்று நேரடி அறைகூவல் ஏதும் விடவில்லை. இஸ்ரேலின் இயல்பை நன்கறிந்தவர் என்பதால் அந்த ஒரு நெருக்கடி சிறிது காலத்துக்கு அவர்களுக்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்திருக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்