ஹர்மன்பிரீத் சிங்: நவீன ஹாக்கியின் ‘கோட்’
- பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கையோடு சீனாவில் நடைபெற்ற ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பையையும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார், இந்திய ஆடவர் அணியின் கேப்டன், 28 வயதான ஹர்மன்பிரீத் சிங். நீண்ட காலமாகத் தனது பழம் பெருமையை இழந்திருந்த ஆடவர் ஹாக்கி அணி, இந்தப் பஞ்சாப் சிங்கின் தலைமையில் மெருகேறி வருகிறது.
- இந்திய ஹாக்கி அணியில் அசைக்க முடியாதவராக வலம் வரும் ஹர்மன்பிரீத் சிங், சிறு வயதில் ஆர்மோனியப் பெட்டியுடன் திரிந்தவர். எங்கு சென்றாலும் ஆர்மோனியப் பெட்டியைக் கேட்டுதான் அடம்பிடிப்பாராம். ஆம், சிறு வயதில் பாடுவதில் வல்லவரான ஹர்மன்பிரீத் சிங், பெரியவனானதும் பாடகராக வருவார் என்றுதான் குடும்பம் எதிர்பார்த்தது.
- ஆனால், பள்ளி விளையாட்டுப் பயிற்சியாளர்தான் ஹர்மன் பிரீத்துக்கு ஹாக்கியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அமிர்தசரஸ் அருகே உள்ள சிறு கிராமத்தில் அப்போது சிறுவர்கள் கிரிக்கெட் மட்டைக்குப் பதிலாக ஹாக்கி மட்டையுடன்தான் திரிவார்கள். அப்படி வளர்ந்தவர்களில் ஹர்மன்பிரீத்தும் ஒருவர்.
சிறு வயதிலேயே சிறந்த வீரர்:
- ஹர்மன்பிரீத்துக்கு 10 வயதாகும்போது ஜான்டியாலாவில் உள்ள ஒரு ஹாக்கி பயிற்சி அகாடமியில் இணைந்து ஹாக்கி நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பிறகு லூதியானாவில் உள்ள ஹாக்கி அகாடமியில் இணைந்து ஹாக்கியில் தேர்ந்தவரானார். பதின் பருவத்தில் ஹர்மன்பிரீத் கட்டுடலுடன் இருந்ததால், அவர் ஹாக்கியில் வலது, இடது பக்கங்களில் ‘ஃபுல்பேக்’கில் விளையாடுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். எனவே, ஹாக்கியில் அப்போதே சிறந்த வீரராக ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார் ஹர்மன்பிரீத்.
- ”ஹாக்கியில் தொடக்கத்தில் ஹர்மன்ப்ரீத் பந்தை நிறுத்துவது, பந்தை இழுத்துச் செல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவருக்கு மிகவும் வலுவான மணிக்கட்டுகள் இருந்தன. அதனால் பந்தை வேகமாக அடிப்பது அவருக்குக் கைவந்த கலை. தொடக்ககாலப் பயிற்சியில் ஹர்மன்பிரீத் ஓர் அமர்வில் 30-40 பந்துகளை அடிக்கத் தொடங்கினார், பின்னர் அது 50-60 பந்துகளாக அதிகரித்தது” என்கிறார் அவருடைய சிறு வயது பயிற்சியாளர் அவதார் சிங்.
விவேகமான வீரர்:
- ஹாக்கியில் குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில அளவில் முக்கிய வீரராக உருவெடுத்தார் ஹர்மன்பிரீத். இதனால், 2014ஆம் ஆண்டில் ஜூனியர் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அப்போது அவருக்கு 18 வயது. பிறகு 21 வயதுக்குள்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்த ஹர்மன்பிரீத், சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பையில் 9 கோல்கள் அடித்து அனைவரையும் ஈர்த்தார். இதேபோல 2015 ஆசியக் கோப்பையிலும் 15 கோல்கள் அடித்து அசத்தினார். இதனால், ஆடவர் தேசிய அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. 2016 ரியோ ஒலிம்பிக் அணியிலும் ஹர்மன்பிரீத் இடம்பிடித்தார்.
- ஹாக்கியில் விவேகமாக விளையாடுவது முக்கியம். அதற்கு உடலை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்திருப்பது அவசியம். அதில் தேர்ந்தவரான ஹர்மன், பந்து வரும் திசைக்கேற்ப உடலைப் பயன்படுத்தி விளையாடுவதில் வல்லவர். கோல் கீப்பருக்கு வலதுபுறமாகப் பந்தை அடிப்பது, பந்தைக் கடத்திச் செல்வது போன்றவற்றில் துல்லியமாகச் செயல் படுவதால், கோல்கள் அடிப்பதிலும் வல்லவரானார்.
- குறிப்பாகத் தடுப் பாட்டத்தில் சிறந்தவரான அவர், ‘ட்ராக் - ஃப்ளிக்கர் ஷாட்’களை அற்புதமாக அடிக்கக்கூடியவர். அதனால்தான் என்னவோ 2022இல் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இந்தியா அடித்த 91 கோல்களில் 38 கோல்களை அடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றார் ஹர்மன்பிரீத் சிங். இவை எல்லாமே டிராக் - ஃப்ளிக்கர் ஷாட்கள்தான்.
அற்புதத்தின் உச்சம்:
- 2023 ஹாக்கி உலகக் கோப்பைக்கு முன்பாக கேப்டன் பதவி ஹர்மன்பிரீத்தைத் தேடிவந்தது. அந்தத் தொடரில் இந்தியா காலிறுதியைத் தாண்டவில்லை. அத்தொடரில் ஹர்மன்பிரீத் 4 கோல்களை அடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. இந்தத் தொடரில் 10 கோல்களை ஹர்மன்பிரீத் அடித்திருந்தார். குறிப்பாக, வெண்கலத்துக்கான போட்டியில் அவர் அடித்த இரண்டு ‘ட்ராக் - ஃப்ளிக்கர்’ ஷாட்கள் அற்புதத்தின் உச்சம். அந்த கோல்கள்தான் இந்தியா வெண்கலம் வெல்லக் காரணமாக இருந்தன.
- இப்போது சீனாவில் நடைபெற்று முடிந்த ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பிலும் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது இந்தியா. இந்தத் தொடரிலும் இந்தியா சார்பில் அதிக கோல்கள் (7) அடித்தவர் ஹர்மன்பிரீத்தான். தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஹாக்கி வீரர்களில் ஹர்மன்பிரீத் சிங்கும் ஒருவர். அதற்கான முழுத் தகுதியும் உடையவர் அவர்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2024)