TNPSC Thervupettagam
June 15 , 2019 2037 days 1263 0
  • வரலாற்றில் எப்போதும் கண்டிராத போராட்டத்தையும், வன்முறையையும் எதிர்கொண்டுள்ளது ஹாங்காங். கடந்த 1997-ஆம் ஆண்டு ஹாங்காங்கை சீனா விடம் பிரிட்டன் ஒப்படைத்தபோதே, சீனாவின் ஆதிக்கத்தால் பல்வேறு பிரச்னைகளை ஹாங்காங் எதிர்கொள்ளும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இப்போது ஹாங்காங்கில் கொண்டு வர உத்தேசித்துள்ள குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்துக்கு எதிராகப் பெரும் போராட்டம் உருவெடுத்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களை குற்ற விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்ப வழி வகை செய்கிறது.
  • இதுவே இந்த சட்ட மசோதாவுக்கு ஹாங்காங் மக்கள் அதிதீவிர எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு முக்கியக் காரணம். ஹாங்காங் நீதித் துறையை ஒட்டுமொத்தமாக சீனாவிடம் அடகு வைப்பதற்கு இது சமம் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்ப்புக்குரலாக உள்ளது. அதே நேரத்தில், ஹாங்காங்கில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலை நாட்டத் தடையாக இருப்பவர்களை தங்கள் இடத்துக்குக் கொண்டுவந்து தண்டிக்க வேண்டும் என்ற சீனா மறைமுகத் திட்டமே இது என்பது பல்வேறு சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
போராட்டம்
  • இந்த அச்சம்தான் பல லட்சம் ஹாங்காங் மக்களை போராட்டக் களத்தில் குதிக்க வைத்துள்ளது. தாங்கள் இது நாள் வரை அனுபவித்து வந்த சுதந்திரத்தை சீனாவிடம் அடகு வைக்க விரும்பாத ஹாங்காங் மக்களின் தொடர் போராட்டம், பேரணிகள் நகரின் முக்கிய வீதிகளை உலுக்கி  வருகின்றன.
  • "ஒரே நாடு - இரு நிர்வாகம்' என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது. அதாவது, ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதி; ஆனால், சீனாவில் உள்ள ஆட்சி-நிர்வாக முறையை ஹாங்காங்கில் அமல்படுத்த முடியாது. ஹாங்காங் பகுதிக்கென்று தனியாக சிறிய அரசமைப்புச் சட்டம் உண்டு.
  • அங்கு உரிமைகளும், சுதந்திரங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். ஹாங்காங்கின் நீதித் துறை சுதந்திரம், அரசியல் நிர்வாகம், பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் தலையிடக் கூடாது என்பதும் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டபோது சீனாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்.
  • அதே நேரத்தில் ஹாங்காங்கின் பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களை சீனா கையாள உரிமை உண்டு.
நிர்வாகம்
  • ஆனால், ஹாங்காங்கின் இப்போதைய நிர்வாகம் முழுமையாக சீனாவின் கைப்பாவையாகிவிட்டது. ஹாங்காங் தலைமை நிர்வாகியான கார்ரி லாம், சீனாவுக்கு ஆதரவான, நாடு கடத்தும் சட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார். ஆனால், இந்தச் சட்டம் ஹாங்காங் மக்களுக்கு மட்டுமல்லாது, ஹாங்காங் வரும் வெளிநாட்டவருக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது. ஏனெனில், இந்தச் சட்டம் மூலம் ஹாங்காங்குக்கு வரும் வெளிநாட்டவரையும் சீனாவுக்கு நாடு கடத்த முடியும். சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் கிடைக்காது. இந்த அச்சம் காரணமாக ஹாங்காங் வருவதை வெளிநாட்டு தொழிலதிபர்கள் நிறுத்தினால் அப்பகுதியின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
  • சீனாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2017-இல் சீனாவுடன்  ஹாங்காங் இணைந்ததன் 20-ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஹாங்காங் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது குடைகளுடன் வீதியில் திரண்ட மக்கள் சீன அதிபரின் வருகையை எதிர்த்து  போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தச் சூழ்நிலையிலும் பலத்த பாதுகாப்புடன் ஹாங்காங் வந்த ஷி ஜின்பிங், ஹாங்காங் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே பேசினார்.
இரு பிரிவுகள் 
  • ஹாங்காங்கில் அரசியலே சீன ஆதரவாளர்கள் மற்றும் சுதந்திர ஆதரவாளர்கள் என்ற இரு பெரும் பிரிவாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் ஹாங்காங் தலைமை நிர்வாகியை நேரடியாகத் தேர்வு செய்யும் உரிமையை ஹாங்காங் மக்களுக்கு அளிப்பதாகக் கூறிய சீனா, பின்னர் அதனை தர மறுத்தது என்பதையும், தங்கள் ஆதரவு நியமனக் குழுவினர் தேர்வு செய்து அளிப்பவரில் இருந்து ஒருவரே தலைமை நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாகத் திணித்தது என்பதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டியுள்ளது.
  • ஹாங்காங் சிறப்பு நிர்வாகத்தின் சட்ட அவையில் இரு நாள்களுக்கு முன்பு, சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டம் விவாதத்துக்கு வந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான மக்கள் சட்ட அவையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது, ஏற்பட்ட வஹன்முறையில் போராட்டக்காரர்கள் மீது  ரப்பர் குண்டுகள் மூலம் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹாங்காங் வரலாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியது இதுவே முதல் முறை.
  • இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் ஹாங்காங்கில் அரசுஅலுவலகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை மெல்ல மெல்ல கை மீறிச் செல்வது கண்கூடாகவே தெரிகிறது.
  • கடந்த ஒருவார காலமாக ஹாங்காங் போராட்டம் குறித்து பெரிதாக கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்துவந்த சீனா, இப்போது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. முக்கியமாக,""ஹாங்காங்கில் நடைபெற்று வருவது அமைதிப் போராட்டமல்ல, திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை'' என்று கண்டித்துள்ளது.
  • இனி வரும் நாள்களில் போராட்டம் மேலும் தீவிரமானால், அதற்கு எதிரான அடக்குமுறை பல மடங்கு அதிகமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வன்முறை அதிகரிப்பதைக் காரணமாகக் கூறியே ஹாங்காங் மீதான தனது பிடியை சீனா மேலும் இறுக்குமே தவிர, தளர்த்துவதற்கு எவ்வித வாய்ப்புகளும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.

நன்றி: தினமணி (15-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்