- ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவரையும் (Chief Executive) அதன் சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வுசெய்வதில் ஏற்கெனவே ஜனநாயகத்துக்கு விரோதமான நிலை நிலவுகிறது.
- இந்நிலையில், சீன அரசு சமீபத்தில் இந்த நடைமுறைகளில் செய்திருக்கும் தீவிரமான மாற்றங்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனென்றால், எதிர்ப்பின் முறைகள், ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வாளர்கள் என்ற முறையில் இந்த மாற்றங்கள் அழிவை நோக்கி இட்டுச்செல்லக் கூடியவை என்று நாங்கள் கருதுகிறோம்.
மக்களின் குரலுக்குச் செவிமடுத்தல்
- தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளில் ஒன்று சீனத் தன்மை கொண்ட ஜனநாயகம் எனும் நீண்ட மரபைக் கருத்தில் கொள்வதாகும்.
- இந்தக் கருத்தாக்கம் இரண்டு சீன சித்திர எழுத்துக்களின் சேர்க்கையால் வெளிப்படுத்தப்படுவது. இது ‘ஜனநாயகம்’ என்று பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டாலும் வெறும் தேர்தல் பிரச்சாரங்கள், வாக்களிப்பு, நிறுவனமயப்பட்ட அரசியலின் பிற அம்சங்களையும் தாண்டிய பொருள் கொண்டது.
- சீன மொழியின் ஒரு வகையான கேன்டோனிஸில் இந்தச் சொல்லின் எழுத்துக்கள் ‘மன்ஸியூ’ என்று உச்சரிக்கப்படுகின்றன.
- மக்களும் ஆட்சியும் என்று இது பொருள்படும். ‘ஸியூ’வில் (ஆட்சியில்) இருப்பவர்கள் ‘மன்’னின் (மக்களின்) குரலுக்குச் செவிமடுத்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுக்கும் ஒரு அமைப்பு என்ற பொருளையும் ‘மன்ஸியூ’ உணர்த்தும்.
- இதுபோன்று மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்துக்கு முக்கியமானவை எவை என்றால், பொறுப்பேற்புத் தன்மைக்கான அமைப்புகள்தான். இவை, தங்கள் எதிர்ப்பைத் தேர்தல்களின் மூலம் மட்டும் வெளிப்படுத்தும் வழிமுறைகளைத் தாண்டியும் சில அம்சங்களை உள்ளடக்கியிருக்கின்றன.
- போராட்ட கோஷங்களைக் கேட்பது, மனுக்களைப் படித்துப்பார்ப்பது, சமூகக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற பல்வேறு வகைகளில் ஆட்சியாளர்கள் மக்கள் குரலுக்குச் செவிமடுக்கலாம்.
- மக்களுக்குச் சுதந்திரத்தை வழங்கும் அமைப்புகளையும் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போடும் அமைப்புகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் கலப்பு ஆட்சியின் கீழ் ஹாங்காங் இருக்கிறது.
- 2003-லும் 2012-லும் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் போராடியதால் அந்தத் திட்டங்களை உள்ளூர் அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.
- எந்த அளவுக்கு மக்கள் அவர்களுடைய திட்டங்களை வெறுத்தார்கள் என்பது அப்போது மிகத் தெளிவாகத் தெரிந்தது. தேசியப் பாதுகாப்பு, தேசத் துரோகம் ஆகியவை தொடர்பான சட்டங்களை ஹாங்காங் அரசு நிறைவேற்ற வேண்டுமென்று சீனா விரும்பியது.
- மக்களின் போராட்டங்களுக்குப் பிறகு அந்தச் சட்டங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன.
- சீனாவில் இருப்பதுபோல் ஹாங்காங் பள்ளிகளில் தேசப்பற்று தொடர்பான கல்வியை 2012-ல் அறிமுகப்படுத்த முயன்றபோது மாணவர்கள் போராடியதால் அதே மாதிரி நடந்தது.
- சீனா கொண்டுவந்திருக்கும் புதிய தேர்தல் விதிமுறைகளாலும், கடந்த ஆண்டிலிருந்து போராட்டங்களையும் பிற எதிர்ப்பு வடிவங்களையும் நசுக்கியிருப்பதாலும் மக்கள் எதிர்ப்பு காரணமாக ஹாங்காங்கின் எதிர்காலச் செயலாட்சித் தலைவர் ஆட்சியிலிருந்து அகற்றப்படும் ஆபத்தானது அவருக்கு இனி இருப்பதாகத் தெரியவில்லை.
- ‘மன்’ (மக்கள்) ஆற்றக்கூடிய எதிர்வினைகளைப் பற்றிப் பெரிதும் கவலையின்றித் தற்போது ‘ஸியூ’ (ஆட்சி) ஹாங்காங்கை ஆளலாம். 2003, 2012 ஆகிய ஆண்டுகளில் உருவானதுபோன்ற இயக்கங்கள் உருவாவதற்குத் தற்போது அரசியல் வெளியில் மிகக் குறைவான வாய்ப்பே இருக்கிறது.
- அந்த இயக்கங்களின் தலைவர்கள் பலரும், அதைப் போலவே 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பெரிய போராட்டங்களில் கலந்துகொண்ட முக்கியமான பங்கேற்பாளர்கள் பலரும் தற்போது சிறையிலோ அல்லது நாடு கடத்தப்பட்டோ இருக்கிறார்கள்.
- அரசாங்கத்தின் உயர் பதவியில் இருப்பதைத் தீர்மானிப்பது என்பது எப்போதுமே தேர்தல்களைவிட தேர்வுசெய்தல் என்ற நடைமுறையைச் சார்ந்ததாகவே இருந்துவந்திருக்கிறது.
- ஹாங்காங் காலனிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது, பிரிட்டன் நாடாளுமன்றமே ஹாங்காங் ஆளுநர்களைத் தேர்ந்தெடுத்ததே தவிர, அந்த நகரத்தின் குடிமக்களுக்கு அந்த நடைமுறையில் எந்தப் பங்களிப்பும் அளிக்கப்படவில்லை.
- ஹாங்காங், சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிராந்தியமாக ஆகும் விதத்தில் அந்த நகரம் 1997-ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து 1,200 உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் குழுவினராலேயே ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகிறார்.
- அந்த உறுப்பினர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சீனாவால் முன்கூட்டியே அனுமதி கொடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள். அதேபோல் வேட்பாளர்களின் பட்டியலுக்கும் சீனாவின் ஒப்புதல் தேவைப்பட்டது.
புதிய விதிமுறைகள்
- தற்போதைய ஏற்பாடானது சட்டமன்றத்துக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களை 35-லிருந்து (அதாவது தற்போது இருக்கும் 70-ல் பாதி) 20 என்ற அளவில் குறைத்திருக்கிறது, அல்லது விரிவாக்கப்பட்ட சட்டமன்றத்தில் உள்ள 90 இடங்களில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு என்ற அளவில்.
- மீதமுள்ள 70-ல் 30 இடங்கள் வெவ்வேறு தொழில்களைச் சார்ந்தோருக்குப் பிரித்தளிக்கப்படும், 40 இடங்களுக்கான பிரதிநிதிகள் தற்போது 1,500 என்ற எண்ணிக்கையில் இருக்கும் தேர்தல் குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- சட்டமன்றத்துக்குப் போட்டியிடும் யாராக இருந்தாலும் அவர்கள் ஹாங்காங் அரசால் பரிசோதிக்கப்படுவார்கள். அவர்களிடம் போதுமான அளவுக்கு ‘தேசபக்தி’ இயல்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக இந்த நடைமுறை.
- தேசபக்தி இல்லாதவர்கள் (எடுத்துக்காட்டாக, சீனாவை விமர்சிப்பவர்கள்) தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்யக் கூடாது.
- தேசபக்தியின் அடிப்படையில் ஒரு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், அரசியல்ரீதியிலான கருத்துரிமையின் பாதுகாவலர்களாக முன்பு இருந்த ஹாங்காங் நீதிமன்றங்களால்கூடத் தற்போது உதவிக்கு வர முடியாது.
- தேர்தல்களுக்கு அப்பாற்பட்டும் புதிய விதிமுறைகள் செல்வாக்கு கொண்டிருக்கின்றன. காலனிய ஆட்சியின் இறுதிக் காலத்திலும் சரி, பிரிட்டனிடமிருந்து சீனாவுக்குக் கைமாறியதிலிருந்து கடந்த ஆண்டு வரையிலும் சரி, ஹாங்காங் கருத்து வேறுபாடுகளுக்கும் எதிர்க் கருத்துகளுக்கும் இடமளிக்கும் நகரமாகவே இருந்தது.
- முன்பு சட்டபூர்வமானவை என்று கருதப்பட்ட பேரணிகள் தற்போது தொடர்ச்சியாகத் தடைசெய்யப்படுகின்றன.
- ஹெட்லைனர் என்ற தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டுவந்த, செயலாட்சித் தலைவரைக் கேலிசெய்யும் நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
- சீன கம்யூனிஸக் கட்சி மீதும் ஹாங்காங் அரசு மீதும் விமர்சனம் செய்ய முடியாத வகையில் மாணவர் அமைப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருகிறது.
- இவை எல்லாமே மேலும் எதேச்சதிகாரமான, மக்களின் குரலுக்குச் செவிமடுக்காத ஒரு யுகத்தின் வரைவுக்குக் கட்டியம்கூறுகின்றன. இந்த யுகத்தில் ‘மன்’ (மக்கள்) தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே செய்வார்கள், ஆனால் நுட்பமான வழிமுறைகளில்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 - 04 – 2021)