சிறந்த வரலாற்றாசிரியர், நாடாளுமன்றவாதி, வழக்கறிஞர் என்று பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர் இடதுசாரித் தலைவர் ஹிரேன் முகர்ஜி.
ஹிரேன் முகர்ஜி
ஆங்கிலம், வங்காளம் இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். அபார நினைவாற்றல் கொண்டவர். பி.சி. ஜோஷி, ரொனேன் சென், சோம்நாத் லகிரி, பவானி சென், முசாஃபர் அகமது, அப்துல் ஹலீம் போன்ற சமகால கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பணியாற்றியவர்.
1907 நவம்பர் 23-ல் கொல்கத்தாவில் பிறந்த ஹிரேன் முகர்ஜி, பள்ளி, கல்லூரிக் கல்வியை அங்கே முடித்தார். வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் வாங்கினார். சட்டமும் பயின்றார். கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். லண்டனில் படித்தபோது கம்யூனிஸத்தால் ஈர்க்கப்பட்டார். இந்தியா திரும்பிய பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி’ உறுப்பினரானார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த நிலையில், 1936-ல் அதில் சேர்ந்தார். 1948, 1949-ம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டார். விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டார்.
விருதுகள்
கொல்கத்தா வட கிழக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து ஐந்து முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். 1990-ல் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. காந்தி, ஜவாஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகியவை குறித்தும் பிற தலைப்புகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
இறுதி நாட்களில் கல்வித் துறையிலும் ஈடுபட்டார். 2004-ல் தனது 96-வது வயதில் காலமானார். கட்சி எல்லை கடந்து அனைத்துக் கட்சியினராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் ஹிரேன் முகர்ஜி!