TNPSC Thervupettagam

ஹெல்த் ட்ரிங்க்ஸ் சர்ச்சை: பரிசோதனைக் கூடமா இந்தியா

April 29 , 2024 257 days 202 0
  • சில தினங்களுக்கு முன்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் போர்ன்விட்டா உட்பட ஆரோக்கிய பானங்கள் என இதுவரை அழைக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு வந்த பானங்களை இனிமேல் அப்படிக் குறிப்பிடக்கூடாது என்று ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • மேலும், ஹெல்த் டிரிங்க்ஸ், எனர்ஜி டிரிங்க்ஸ் என்ற பிரிவுகளை தங்களது இணையதளங்களில் இருந்து அகற்றுமாறு அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பால், தானியங்கள் அல்லது மால்ட் கலந்த பானங்களை ஆரோக்கிய பானங்கள் என்கிற பிரிவின் கீழ் குறிப்பிடக்கூடாது என்ற நெறிமுறையை அனைத்து இ-காமர்ஸ் தளங்களுக்கும் அனுப்பியது.
  • போர்ன்விட்டாவில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாகவும் இதனால், குழந்தைகளின் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுவதாகவும் கூறப்பட்டு வந்தநிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இன்றைக்கு இப்பிரிவின் கீழ் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலிவரின் ஹார்லிக்ஸ் 44%, பூஸ்ட் 11%, சைடஸ் வெல்னஸ் நிறுவனத்தின் காம்ப்ளான் 6%, மொண்டலேஸின் போர்ன் விட்டா 15% என சந்தைப் பங்கைக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு இத்துறை நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.

சர்ச்சையில் போர்ன்விட்டா:

  • சமூக ஊடகத்தில் பரவலாக அறியப்படுகிற 32 வயதான ரேவந்த் ஹிமத்சிங்கா, போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை இருக்கிறது என்று யூடியூப்பில் கடந்த ஆண்டு வெளியிட்ட காணொலி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
  • சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான மாண்லேஸ் குழுமத்தைச் சேர்ந்த காட்பரிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிற குழந்தைகளால் அதிகம் விரும்பி அருந்தப்படும் போர்ன் விட்டாவில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதாகவும் இது குழந்தைகளை நீரிழிவு நோய்க்குத் தயார்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பகிரப்பட்டது.

அதிர்ச்சியளித்த நெஸ்லே:

  • இதைத் தொடர்ந்து இப்போது விவாதத்துக்கும் விசாரணைக்கும் உள்ளாகியிருப்பது நெஸ்லே இண்டியா தயாரித்து சந்தைப்படுத்தி வரும் செரிலாக் என்கிற குழந்தைகளுக்கான உணவுப் பொருளாகும். 2022-ம் ஆண்டில் இதன் இந்திய விற்பனை 250 மில்லியன் டாலர். உலகளவில் விற்பனை 1 பில்லியன் டாலர்.
  • இதில் ஒரு பரிமாறலுக்கான அளவில் 2.2 கிராம் சர்க்கரை கலந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற வளர்ந்த நாடுகளில் விற்பனையாகி வரும் இந்தப் பொருளில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவு என்றும் குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் கொண்ட வளர்ந்து வரும் நாடுகளில் விற்பனையாகும் இப்பொருளில் சர்க்கரை அளவு அதிகம் எனவும் தற்போது சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற தனது பிராண்டுகளில் இருந்து ‘ஹெல்த் ட்ரிங்க்ஸ்’ என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. இவற்றுக்கு ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் (Functional Nutritional Drinks) எனப் பெயரிட்டுள்ளது.

பரிசோதனை கூடமா இந்தியா?

  • இதுகுறித்து மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Third Eyesight நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தேவாங்ஷு தத்தா கூறுகையில், “இந்தியா வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதால் வளர்ந்த நாடுகளில் சந்தைப்படுத்த முடியாத தரம் குறைந்த பொருள்களும் செயல்முறைகளும் இந்தியாவில் புகுத்தப்படுகின்றன.
  • இந்திய நுகர்வோர்கள் சமூக ஆர்வலர்களிடமிருந்து மட்டுமல்லாமல் வளர்ந்த பொருளாதார நாடுகளில் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தகவலைப் பெற்று, கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியமாகிறது” என்றார்.
  • இவ்வளவு நாட்களாக போர்ன்விட்டாவும், செரிலாக்கும் மக்களிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்த தயாரிப்புகள்தாம். இவற்றின் சர்க்கரை அளவை முதலிலேயே அரசு ஆய்வு செய்யவில்லையா? சர்ச்சை ஏற்படும் சமயத்தில் மட்டும்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் பரவலாக முன்வைக்கப் படுகின்றன.
  • நிறுவனங்கள் பொறுப்பில்லாமல், லாபமீட்டுவதை மட்டும் இலக்காகக் கொண்டு தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது மிகவும் மோசமான போக்கு. இந்தப் போக்கை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்றும் இயற் கையான முறையில் கிடைக்கும் பொருள்களை உட்கொள்வது அனைவருக்கும் ஆரோக்கியமானது என்றும் மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல், சிந்தித்து நுகர்வோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்