- ‘இயற்கைப் பேரிடர்’ என்பது பொருத்தமான சொற் பிரயோகம் அல்ல. ஏனெனில், அதில் மானுட அம்சமும் உள்ளது. 1844இல் மார்க்ஸ் எழுதினார்: ‘நமது வாழ்க்கை இயற்கையிலிருந்து பெறப்பட்டது. எனவே, நாம் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதனுடன் நாம் இடையறாத உரையாடலைச் செய்ய வேண்டும்.
- நமது பெளதிக, ஆன்மிக வாழ்க்கை இயற்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதன் பொருள், இயற்கை தன்னுடன் தானே பிணைக்கப்பட்டுள்ளது என்பதாகும். ஏனெனில், நாம் இயற்கையின் பகுதி.’
- 1939இல் ஆங்கில மொழியாக்கத்தில் வெளிவந்த ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ என்ற புகழ் பெற்ற நூலுக்கான குறிப்புரையில், ஃபிரெஞ்சு எழுத்தாளர் அந்துவான் த செந்த்-எக்சுபெரி எழுதினார்: ‘புத்தகங்கள் எல்லாவற்றையும்விட பூமி நமக்கு நிறையவே கற்றுக்கொடுக்கிறது. ஏனென்றால், நம்மை எதிர்க்கும் திறன் அதற்கு இருக்கிறது. தடையை எதிர்கொள்ளும்போதுதான், மனிதன் தன் திறனை அறிகிறான்’ (தமிழாக்கம்: வெ.ஸ்ரீராம்).
அழிவுக்குக் காரணம் யார்?
- ஆனால், மனிதன் தன் திறனைத் தவறாகப் பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவை எங்கெல்ஸ் 1896 இல் சுட்டிக்காட்டினார்: ‘இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு, நாம் அளவுகடந்த தற்புகழ்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இத்தகைய வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது.
- ஒவ்வொரு வெற்றியும் முதல் முறை நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானாலும், இரண்டாவது, மூன்றாவது முறைகளில் நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட விளைவுகளையும் தருகிறது; இவை பல முறை, முதலில் ஏற்பட்ட விளைவைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.’ இன்னொரு கருத்தையும் 1844-லேயே அவர் கூறியிருந்தார்: ‘நமது வாழ்க்கைக்கான முதல் நிபந்தனையாக உள்ள ஒரே ஒரு புவி மண்டலத்தை முதலாளியம் கூவி விற்கப்படக்கூடிய ஒரு வணிகப் பொருளாக்கியுள்ளது.’
- இதே கருத்தை இருபதாம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுத் தத்துவவாதி ழான் பால் சார்த்தரும் தனது மொழியில் கூறினார்: ‘அழிவு என்பது அடிப்படையில் மனிதன் சம்பந்தப்பட்ட விஷயம்... நிலநடுக்கங்களின் மூலம் நகரங்களை அழிப்பவன் மனிதன்தான். இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாமல் இருப்பார்களேயானால், நிலநடுக்கம் பெளதிக இயற்கையின் அர்த்தமற்ற செயல்களில் ஒன்றாகவே இருக்கும்.
- ஆனால், நகரங்களைக் கட்டும் மனிதனின் திட்டத்துக்கு அவை ஊறு விளைவிக்கையில்தான், அவை பேரிடராகின்றன.’ இங்கு ‘மனிதன்’ என்று அவர் கூறுவது முதலாளி வர்க்கத்தையும் அதைக் கட்டிக் காக்கும் அரசியலையும்தான்.
- கேரளத்தைப் பொறுத்தவரை கல் குவாரி உரிமையாளர்கள் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். சில அரசியல்வாதிகளுக்கு ‘பினாமி’ முறையில் சொந்தமான கல் குவாரிகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இயற்கைப் பேரிடர்களுக்கு ஆளாகும் மலைப்பகுதிகளில், அதுவும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில், கல் குவாரிகளை அமைக்கக் கூடாது, நெல் பயிரிடப்படும் வயல்களை ‘ரியல் எஸ்டேட்’ வணிகத்துக்காகக் கூறுபோடக் கூடாது என்கிற நியதிகள் தளர்த்தப்பட்டு, அவற்றுக்கு விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன.
- சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் இடங்களில் வீடுகளையும் பங்களாக்களையும் கட்டுவதற்கு அனுமதி தரப்படுவதுடன், அங்கு புதிய தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவையும்கூட அடிக்கடி நிகழும் நிலச்சரிவுகளுக்குக் காரணம். சில ஆண்டுகளாக கேரளத்தில் முன்அனுபவம் இல்லாத அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டுவதற்குக் காலநிலை மாற்றம்தான் காரணம் என்றால், அதற்குச் சுயநலம் மிக்க உலக முதலாளி வர்க்கம்தான் முதன்மைக் காரணம். எனவே, காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சினையாகிவிட்டது.
இது முடிவா?
- கேரளத்தில் பொழிந்த மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளங்களின் காரணமாக, 2019 ஆகஸ்ட் 8ஆம் தேதி காவலப்பற, மலப்புரம் பகுதியில் சிக்கி 59 பேரும் வயநாடு மாவட்டத்தில் உள்ள புதுமலையில் 17 பேரும் இறந்தனர். 2010 ஆகஸ்ட் 6ஆம் தேதி இடுக்கி மாவட்டத்தில் 70 பேர் உயிரிழந்தனர்; 2021 அக்டோபர் 16இல் கோட்டயம் மாவட்டத்தில் 13 பேரும், இடுக்கி மாவட்டத்தில் 7 பேரும் நிலச்சரிவுக்குப் பலியாகினர். ஏராளமான வீடுகளும் வாகனங்களும் சிதைந்துபோயின.
- இவற்றிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை. இந்த அலட்சிய மனப்பான்மையும்கூடக் கடந்த ஜூலை 30, 31இல் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நெஞ்சைப் பிளக்கும் பேரழிவுக்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- இதுவரை கிடைத்த தகவல்களின்படி, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கிராமங்களும் அதிலிருந்த மனிதர்களும் மண்ணில் புதைந்தனர். மண்ணில் புதைந்தவர்கள், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாண்டவர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
- இவர்கள் போக, மேலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கக்கூடும். இறந்தவர்களில் கணிசமானோர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நல்ல வசிப்பிடப் பகுதிகள் அவர்களுக்கு இல்லாததால், தாழ்வான பகுதிகளில் குடிசைகள் போட்டு அவர்கள் வாழ்ந்துவந்தனர். நெஞ்சைப் பிளக்கும் இந்த மானுட அவலத்துக்குப் பிறகேனும் எங்கெல்ஸும் சார்த்தரும் விடுத்த எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படுமா?
- இது ஒருபுறமிருக்க.. நீலகிரி மாவட்டமும் பெருமளவு மாறிப்போயிருக்கிறது. மரங்களே இல்லாத, வெறும் கான்கிரீட் கட்டிடங்கள் மட்டுமே உள்ள உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதால், மலைகளின் தாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் அவற்றுக்கான காரணிகள் பற்றியும் ஒரு புத்தகமே எழுதலாம். வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 08 – 2024)