TNPSC Thervupettagam

‘கொடுக்கல் – வாங்கல்’ அரசு!

July 28 , 2024 168 days 131 0
  • சாதாரண சமயங்களில் மக்களிடையே, ‘கொடுக்கல் – வாங்கல்’ நடைமுறைகளைப் பார்க்கிறோம். இரண்டு மனிதர்களுக்கிடையேயும் இரு சமூகங்களுக்கிடையேயும் இந்த ‘கொடுக்கல் – வாங்கல்’ உறவு எந்த அடிப்படையிலானது? ‘நான் உனக்கு இதைத் தருகிறேன், நீ எனக்கு அதைக் கொடு’ என்பதுதான். கொச்சையாகச் சொல்வதானால் - கைமாற்று!
  • அரசு வேலைகளுக்கு லஞ்சம் கொடுப்பது கொடுக்கல் - வாங்கலே; பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிவும் கொடுக்கல் – வாங்கலே. இந்தக் கொடுக்கல் வாங்கலை மோடி தலைமையிலான அரசு மிக உயர்ந்த அளவுக்குக் கொண்டுசென்றது: ‘தேர்தல் நன்கொடை பத்திரங்கள்’ என்று அழைக்கப்பட்ட அவை, அரசு சலுகைகளைப் பல்வேறு வகைகளிலும் தொழிலதிபர்களுக்கு அள்ளி வழங்குவதற்கானது.
  • தேர்தல் நன்கொடை பத்திரங்களின் அடிப்படை நோக்கங்களை இப்போது எல்லோருமே புரிந்துகொண்டுவிட்டார்கள். உச்ச நீதிமன்றம், வெகு தாமதமாக – சரியாகப் புரிந்துகொண்டு, அந்த வகை பரிமாற்றங்களையே ரத்துசெய்தது. ஆனால், அந்தத் திட்டம் தொடர்பாக வெளிப்படையாக விமர்சனம் எதையும் வைக்கவில்லை.

நாற்காலியைக் காப்பாற்ற…

  • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்தக் கொடுக்கல் – வாங்கலை இந்த ஆண்டு ஜூலை 23ஆம் நாள் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் மேலும் புதிய – உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய குறிக்கோளே, புதிய ஒன்றிய அரசை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான். ‘இது நாற்காலியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட்’ (நிதிநிலை அறிக்கை).
  • இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்த திருமதி நிர்மலா சீதாராமன் சற்றும் வருத்தமில்லாமல் இதைச் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு அவரும் நிதியமைச்சக செயலர்களான உயர் அதிகாரிகளும் அளித்த விளக்கங்கள், இரண்டு தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான குரூரமான முயற்சியே இந்த நிதிநிலை அறிக்கை என்பதை அம்பலப்படுத்திவிட்டன. ஆந்திரத்தில் தெலுங்கு தேசக் கட்சியின் 16 வாக்குகள், பிஹாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் 12 வாக்குகள் ஆதரவைப் பெறுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • பிஹாரில் தொழிலுற்பத்திப் பேட்டைகள், போக்குவரத்துத் தொடர்பு வசதிகள் (சாலை – ரயில் - ஆகாய மார்க்கம்), மின்னுற்பத்தி திட்டங்கள், ஆந்திரத்துக்கு போலாவரம் பாசன திட்டம், தொழில் உற்பத்திக்கான பேட்டைகள், சமூக – பொருளாதாரரீதியாக பின்தங்கிய ஆந்திர மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மானியங்கள் ஆகியவை வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களுடன் கூறியுள்ள இன்னொரு வாக்குறுதி மிகவும் முக்கியமானது, ‘தேவைப்படும் அயல் உதவிகள் விரைவாக வழங்கப்படும் அல்லது ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்பதாகும். அதாவது, வானத்திலிருந்து குதிக்கப்போகிறது (உலக வங்கி, ஐஎம்எஃப் போன்றவற்றின்) உதவி!
  • ஒன்றிய அரசு பிஹார் – ஆந்திர மாநில அரசுகளுக்கு இடையிலான இந்தப் பெரிய பேரம் காரணமாக, 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவை முற்றாகப் புறக்கணித்த மாநிலங்கள், திட்டங்கள் ஏதுமில்லாமல் ஒதுக்கப்பட்டுவிட்டன. அந்த மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கருத்துப்படி - மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், மஹாராஷ்டிரம், பஞ்சாப், டெல்லி (மத்திய ஆட்சிப்பகுதி) ஆகியவை அந்த மாநிலங்கள்.

வஞ்சிக்கப்பட்ட இளைஞர்கள்

  • மாநிலங்கள் மட்டுமல்ல, சமூகத்தின் பெரும்பான்மை மக்களும் இரக்கமின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மிகவும் மோசமாக வஞ்சிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது. இளைஞர்கள் செய்வதறியாது விரக்தியிலும் கோபத்திலும் உள்ளனர்.
  • சிஎம்ஐஇ அறிக்கைப்படி 2024 ஜூன் மாதம் வேலையில்லாத் திண்டாட்டம் 9.2%. பட்டாதரிகளிடையே அது 40%. பிஎல்எஃப் ஆய்வறிக்கையின்படி தொழிலாளர்களில் 20.9% பேர் மட்டுமே நிரந்தர வேலையில் சம்பளம் பெறுகின்றனர். மிகக் குறைவான கல்வித் தகுதி உள்ளவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டமும் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது!
  • வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு (இஎல்ஐ) மூலம் 290 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது. அதாவது இவ்வளவு பேரை வேலைக்கு வைத்துக்கொள்ளும் தொழில் நிறுவன நிர்வாகங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு அரசு தொடர்ந்து ரொக்க ஊக்குவிப்பு வழங்கும். 20 லட்சம் இளைஞர்களுக்குத் தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படும். 500 பெரிய தொழில் நிறுவனங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும். இந்த மாபெரும் எண்ணிக்கையெல்லாம், தேர்தல் முடிந்த பிறகு கூறப்படும் மிகப் பெரிய பொய் (ஜூம்லா)!
  • ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளிலும் அரசுத் துறை நிறுவனங்களிலும் நிரப்பப்படாமல் உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் பற்றி சிறிய முணுமுணுப்புகூட நிதிநிலை அறிக்கையில் இல்லை. வேலைவாய்ப்புகளைப் புதியதாக வழங்கும் நிறுவனங்களுக்கு ரொக்க ஊக்குவிப்பு தரும் திட்டத்தின் பயனை யாராலும் அளந்து சொல்ல முடியாது, எனவே நாளடைவில் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டாலும் யாருக்கும் தெரியாது.
  • உயர்கல்விக்கு வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏராளமான குடும்பங்கள் அவதிப்படும் நிலையில், அந்தக் கடன்களை முழுதாக ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நிதிநிலை அறிக்கையில் ஒரு வார்த்தையும் கிடையாது. ராணுவத்தில் சேரும் இளைஞர்களிடையே ஊதியம் – சலுகைகளில் வேறுபாடு காட்டும் அக்னிபாத் முறை ஆளெடுப்பை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பதில் கிடையாது.

ஏமாற்றப்படும் ஏழைகள்

  • அடுத்ததாக அதிகம் ஏமாற்றப்படும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஏழைகள். நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாகியாக இருக்கும் அனந்த நாகேஸ்வரனுடைய கருத்தையே நிதியமைச்சர் சீதாராமனும் கொண்டிருக்கிறார் – அது என்ன என்று அறியும் முன்னால் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள் – ‘நாட்டு மக்களில் 5%க்கும் மேல் ஏழைகளே கிடையாது!’
  • குடும்பங்களின் நுகர்வுச் செலவு ஆய்வறிக்கை (எச்சிஇஎஸ்), மாதாந்திர தனிநபர் செலவு (எம்பிசிஇ) எவ்வளவு என்பதை நடப்பு விலை அடிப்படையிலும் பெயரளவிலான விலை அடிப்படையிலும் கணக்கிட்டிருக்கிறது. கிராமங்களானால் சராசரியாக மாதத்துக்கு ரூ.3,094ஆம், நகர்ப்புறமானால் ரூ.4,963ஆம் செலவாகிறதாம்!
  • அப்படியானால் நாட்டில் 71 கோடி மக்கள் அன்றாடம் ரூ.100 முதல் ரூ.150க்குள்ளான வருவாயில் வாழ்கிறார்கள். இதையே மேலும் பகுத்து ஆராய்ந்தால் நிலைமை படுமோசமாக இருக்கிறது. சமூக அடுக்கில் கடைசி 20% இடங்களில் இருக்கிறவர்கள் அன்றாடம் ரூ.70 முதல் ரூ.100க்கும் குறைவாகவும், கடைசி 10% நிலையில் இருப்பவர்கள் அன்றாடம் ரூ.60 முதல் ரூ.90 வரை மட்டுமே செலவிட்டும் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏழைகளா இல்லையா?

நிதியமைச்சர் தரும் நிவாரணங்கள்:

  • நிதியமைச்சர் கூறுகிறார் இப்போதைய பணவீக்கம் குறைவானது, நிலையானது - அரசின் 4% என்ற இலக்கை நோக்கிச் செல்கிறது.
  • மாதாந்திர ஊதியக்காரர்கள் புதிய வரிவிதிப்பு முறையை ஏற்றால் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.17,500 வருமான வரியில் சலுகை அளித்திருக்கிறார், ஓய்வூதியர்களுக்கும் இதே சலுகைதான்.

71 கோடி ஏழைகள்

  • நாட்டு மக்களில் சமுதாயத்தின் கடைசி 50% ஆக இருக்கும் 71 கோடி ஏழைகள் மாதச் சம்பளக்காரர்களும் அல்ல அரசு ஓய்வூதியர்களும் அல்ல. அவர்களுக்கு எந்த நிவாரணம் அளிக்கலாம் என்று நிதியமைச்சர் ஒரு கணமும் சிந்திக்கவில்லை. அவர்களும் நுகர்வோர்கள் என்ற வகையில் மறைமுக வரி ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள். அவர்களிலும் 30 கோடிப் பேர் அன்றாடக் கூலிக்கு வேலை செய்கிறவர்கள், தாற்காலிக வேலையுள்ளவர்கள். அவர்களுடைய ஊதியம் கடந்த ஆறு ஆண்டுகளாக உயராமல் அப்படியே தேங்கிய நிலையிலேயே இருக்கிறது.
  • ஏழைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க நிறைய வழிகள் இருக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உள்பட அனைத்து வேலைகளிலும் தொழிலாளர்களுக்கு அன்றாட குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 தரப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றலாம். இதற்காக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தும், ஆண்டுக்கு 50 நாள்களுக்குத் தரும் வேலையை நூறு நாள்களுக்கு வழங்கியும் செய்துவிடலாம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு மேலும் தீவிரமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • பிரதமரும் நிதியமைச்சரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் ‘வாக்குரிமை’ என்ற சக்திவாய்ந்த ஆயுதம் இருக்கிறது. 2024 மக்களவை பொதுத் தேர்தலில் இதை வைத்து கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு ஜூன் மாதம் நடந்த 13 தொகுதிகள் இடைத் தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு மேலும் பலமாக அறை விட்டார்கள்.
  • அடுத்து மஹாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 2025இல் மேலும் சில மாநிலங்களில் இப்படித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை இளைஞர்களும் ஏழைகளும் மறக்கவே மாட்டார்கள்.

நன்றி: அருஞ்சொல் (28 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்