TNPSC Thervupettagam

‘கோவிட்-19’ சிகிச்சையில் சீனா புகுத்திய புதுமைகள்!

February 28 , 2020 1784 days 760 0
  • சீனாவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தையும் அலற வைத்திருக்கிறது ‘கோவிட்-19’ காய்ச்சல். இது பரவாமல் தடுப்பதற்கும் பரவியவர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு தருவதற்கும் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் முனைப்புக் காட்டிவருகின்றன.
  • இந்த நிலையில், ‘கோவிட்-19’ காய்ச்சலுக்கான சிகிச்சையில் சீனா 80-க்கும் மேற்பட்ட புதிய முயற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ள விவரம் தெரியவந்துள்ளது. அவற்றில் சில வெற்றியும் பெற்றுள்ளன.

காய்ச்சல் பரவல்

  • பத்தே நாட்களில் 2,300 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு புதிய மருத்துவமனைகளை வூஹான் நகரத்துக்கு வெளியில் கட்டி முடித்த சாதனையில் தொடங்குகிறது சீனாவின் புதுமைப் புறப்பாடு. கொத்துக் கொத்தாகப் பரவும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்த நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டியது மிக முக்கியம். அதற்கு ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளில் தனி வார்டுகளை ஒதுக்குவதுதான் பெரும்பாலான நாடுகளின் வழக்கம். அதற்கு மாறாக, ஒட்டுமொத்த நோயாளிகளையும் நகருக்கு வெளியில் கொண்டுவந்து தனித்தனி மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுப்பது ஒரு மருத்துவப் புதுமை. இதற்காக சீனா இரண்டாம் முறையாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
  • இரண்டாவதாக, காய்ச்சலுக்குக் காரணம் ‘கோவிட்-19’ வைரஸ்தான் என்பதை உறுதிசெய்ய நோயாளியின் ரத்தம், மூக்குச் சளி, நெஞ்சுச் சளியைப் பரிசோதிப்பது வழக்கம். முக்கியமாக, ‘ஆர்டி-பிசிஆர்’ (RT-PCR), ‘நேட்’ (NAAT) போன்ற நுட்பமான பரிசோதனைகள் இதற்கு உதவுகின்றன.
  • குறைபாடுகள் என்னவென்றால், இந்தப் பரிசோதனைகளை எல்லா ஆய்வுக்கூடங்களிலும் மேற்கொள்ள முடியாது; சிறப்பு ஆய்வுக்கூடங்கள் தேவை. அப்படியே இருந்தாலும் இவற்றின் முடிவுகள் வெளியாகச் சில நாட்கள் ஆகும். அதுவரை நோயாளிகள் உரிய சிகிச்சைக்குக் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் நோயாளிக்கு நோய்த் தாக்குதல் தீவிரமாகி உயிருக்கு ஆபத்து நேரலாம்.

புதுமை செய்த பிளாஸ்மாதெரபி

  • இந்தக் கொடுமையைத் தவிர்க்க சீன மருத்துவர்கள் ஓர் எளிய வழியைப் புகுத்தினார்கள். நோயாளியின் நெஞ்சு எக்ஸ்-ரேவைப் பார்த்து உடனடியாக நோயை அறிந்து சிகிச்சையைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தார்கள். இது 100% நோயை உறுதிப்படுத்தாது என்றாலும், இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைக்கு வரும் புதிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை தரப்படுவது எளிதானது. இதற்கான செலவும் குறைவு.
  • இந்தப் பரிசோதனை வசதியை ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே மேற்கொள்ள முடியும். மேலும், அங்கு ‘கோவிட்-19’ காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டால், அவசர மேல் சிகிச்சைக்கு உடனடியாக மாவட்ட மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதும் எளிதானது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் சாதாரண வைரஸ் காய்ச்சல் நோயாளியா, ‘கோவிட்-19’ காய்ச்சல் நோயாளியா எனப் பிரித்தறிவதும் சுலபமானது. இதன் மூலம் நோயின் முதற்கட்டத்திலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் அச்சம் அகற்றப்பட்டது.
  • ‘கோவிட்-19’ காய்ச்சலுக்கு மருந்து இல்லை; மாற்று இல்லை என்று உலக நாடுகள் பலவும் கைகளைப் பிசைந்துகொண்டிருந்த நேரத்தில், சீனாவின் தேசிய சுகாதாரக் கழகம் மூன்றாவது முயற்சியைக் கையில் எடுத்தது. எந்தவொரு வைரஸ் நோய்க்கும் அதற்குண்டான நோயெதிர்ப்பொருட்களை (ஆன்டிபயாடிஸ்) செலுத்தினால், அந்த வைரஸ் கிருமிகள் அழியும் என்னும் அறிவியல் அடிப்படையில், ‘கோவிட்-19’ காய்ச்சலிலிருந்து மீண்ட நோயாளிகளின் ரத்தத்தைப் பெற்று, அதிலிருந்து ‘பிளாஸ்மா’ என்னும் திரவத்தைப் பிரித்தெடுத்து, மோசமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புதிய நோயாளிகளுக்குச் செலுத்தினார்கள்.
  • இப்படிச் செலுத்தப்பட்ட பிளாஸ்மாவில் ‘கோவிட்-19’ கிருமிகளை முறியடிக்கும் நோயெதிர்ப்பொருட்கள் கோடிக்கணக்கில் இருந்த காரணத்தால், அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டார்கள். இந்தப் பிளாஸ்மாவை நோய் வரும் முன்னர் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தினால் இன்னும் நல்ல பலனைத் தரும் என்கிற கருத்தும் உள்ளது. இதன் அடிப்படையில், இதற்குத் தடுப்பூசி தயாரிக்கவும் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

ரோபோட்டிக் பயன்பாடு

  • சுனாமி வேகத்தில் ‘கோவிட்-19’ காய்ச்சல் பரவும் நோயாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்த நோயாளிகளுடன் மற்றவர்கள் நெருங்குவதைத் தடுப்பது முக்கியம். அதற்கான புதிய முயற்சியாக இந்த நோய் கண்டவர்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொடுக்க சீனாவில் ரோபோட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
  • வூஹான் மாநிலத்தில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் 30 ரோபோட்டுகள் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. நோயாளியின் படுக்கை அறை மற்றும் மருத்துவமனையைச் சுத்தப்படுத்துவதற்கும் மருத்துவமனைக்கு வருபவர்களை வரவேற்கவும் வழிகாட்டவும் ரோபோட்டுகளே பயன்படுகின்றன.
  • இதன் பலனாக, ‘கோவிட்-19’ நோயாளிகளோடு மருத்துவமனைப் பணியாளர்கள் நேரடியாகத் தொடர்புகொள்வது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது; நோய்ப் பரவலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த வைரஸ் காய்ச்சலை வரும் முன்னரே கண்டறிய முடியுமா என்னும் ஆராய்ச்சியில் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த அறிவியலாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
  • மலேரியாவுக்கு சீனாவின் பாரம்பரிய மூலிகையிலிருந்து ஆர்ட்டிமிசினின் (Artemisinin) மருந்து கண்டுபிடிக்கப்பட்டதுபோல் ‘கோவிட்-19’ காய்ச்சலுக்கும் புதிய மருந்தைக் கண்டுபிடிக்க மூலிகை ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
  • தற்போது ‘ஃபேவிலாவிர்’ (Favilavir) மருந்தைக் கொடுத்தால் ‘கோவிட்-19’ காய்ச்சல் கட்டுப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த மருந்தைத் தயாரிப்பதற்கும் நோயாளிகளிடம் பயன்படுத்துவதற்கும் சீனாவின் சுகாதாரத் துறை அனுமதி கொடுத்துவிட்டது.
  • ‘கோவிட்–19’ காய்ச்சலுக்கு அனுமதி பெறப்பட்ட வைரஸ் எதிர்மருந்து இதுதான். மேலும், ‘குளோரோகுயின்’, ‘ரெம்டெஸிவிர்’ என்னும் இரண்டு மருந்துகளையும் சோதனை முறையில் பயன்படுத்தவும் யோசனை சொல்லப்பட்டிருக்கிறது.
  • நாட்டின் பொருளாதார வளத்தை மட்டுமல்லாமல் ராணுவ பலம், மனித வளம், அறிவியல் வளங்களையும் பயன்படுத்திப் போராடியதால் சீனாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த ‘கோவிட்-19’ சுனாமி தற்போது அடங்கிவருகிறது.

சீனா கற்றுக்கொடுத்தது என்ன?

  • சீனாபோல் 10 நாட்களில் 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய மருத்துவமனைகளைக் கட்டுவது, ரோபோட்டுகளைப் பயன்படுத்துவது போன்ற அசாத்திய வழிகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற நாடுகளிலும் எதிர்பார்க்க முடியாது. என்றாலும், இந்த வைரஸ்களின் கொடுங்கரங்கள் நம் கழுத்தை இறுக்கும் இக்கட்டான சூழலில், நோய்க் கண்டுபிடிப்பில் அதிகம் செலவு பிடிக்கும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளுக்கு மாற்றாக மிக எளிய எக்ஸ்-ரே பரிசோதனையைப் பயன்படுத்தலாம் என்னும் ஒரு புதிய வழியை சீனா காட்டியுள்ளது. இந்த வழிகாட்டுதலை இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளும் பயன்படுத்த முடியும்.
  • அடுத்ததாக, விபத்துகளின்போது உயிர்காக்க உதவும் ரத்தக் கொடைபோல் ‘கோவிட்-19’ காய்ச்சல் வந்தவர்களிடமிருந்து பிளாஸ்மாவைக் கொடையாகப் பெற்று, புதிய நோயாளிகளுக்குச் சிகிச்சை தருவதையும் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்துவதையும் இந்தியாவிலும் பின்பற்ற முடியும்.
  • ஆரம்பத்தில், சீனாவில் சாதாரணமாகத் தெரிந்த ‘கோவிட்-19’ காய்ச்சல், போகப்போகத் தீவிரமடைந்து பெரிய அளவில் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தினாலும் சீனா அதற்கு அசரவில்லை; மற்ற நாடுகளின் உதவிகளையும் கோரவில்லை; உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. அசாத்தியத் துணிச்சலுடன், அரசு இயந்திரங்களை முடுக்கி, நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ‘கோவிட்-19’ எனும் டிராகனைத் தன்னிச்சையாக வீழ்த்திக்கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.

நன்றி: இந்து தமிழ் திசை (28-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்