- தமிழ்ப் பதிப்புலகில் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் பிரதி மேம்படுத்தலிலும் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவரும், தற்காலத் தமிழுக்கு என்று அகராதியை உருவாக்கியவருமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (76) கரோனா தொற்றின் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்புகளால் மறைந்தது தமிழ்ச் சமூகத்துக்கு இந்த ஆண்டு நேர்ந்திருக்கும் பேரிழப்புகளில் ஒன்றாகும்.
- வருமானம் கொழிக்கும் விளம்பரத் துறையிலிருந்து பதிப்புத் துறை நோக்கி ராமகிருஷ்ணன் நகர, தமிழ் மீது அவர் கொண்ட அக்கறையே காரணமாக இருந்தது.
- தமிழைக் காட்டிலும் ஆங்கிலத்தில் கூடுதல் ஆளுமை கொண்டிருந்தவரும் உலகளாவியப் பார்வை கொண்டவருமான ராமகிருஷ்ணன் தமிழ்ப் பதிப்புலகத்தைத் தேர்ந்தெடுத்தது தமிழ்ச் சமூகம் செய்த பேறு.
- இந்த முடிவின் விளைவாகத் தன்னுடைய வாழ்நாள் நெடுகிலும் பொருளாதாரச் சிரமத்தை எதிர்கொண்டார் ராமகிருஷ்ணன். இந்தியாவுக்கே உரித்தான அமைப்பு சார்ந்த தடைகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும், அவருடைய கனவுகளையோ முயற்சிகளையோ எது ஒன்றாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
- கடந்த காலப் பெருமிதங்களிலிருந்து தமிழை எதிர்கால மாட்சிமைக்குக் கடத்தும் தணியாத தாகம் ராமகிருஷ்ணனுக்கு இருந்தது.
- காம்யு, காஃப்கா தொடங்கி யானிஸ் வருஃபாகிஸ் வரை பல்வேறு இலக்கியம், பொருளாதாரம், விவசாயம், மருத்துவம் என்று பலவகை பொருள்களைத் தொட்டும் அவர் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகள் ‘க்ரியா’வின் அடையாளமாகவே ஆகிப்போனதும், நவீன தமிழின் எல்லைகளை விஸ்தரிக்கத் தலைப்பட்ட மௌனி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, ஐராவதம் மகாதேவன், சி.மணி உள்ளிட்ட முன்னோடிகளுடனான ‘க்ரியா’வின் உறவும் இதன் வெளிப்பாடே ஆகும்.
- தன்னுடைய தோழி ஜெயலட்சுமியுடன் இணைந்து அவர் தொடங்கிய ‘க்ரியா பதிப்பகம்’ மட்டும் அல்லாது, இன்றைக்குத் தமிழ்ச் சமூகத்தின் மொழி – பண்பாட்டு வெளியில் காத்திரமான பங்காற்றியிருக்கும் ‘கூத்துப்பட்டறை’, ‘மொழி அறக்கட்டளை’, ‘ரோஜா முத்தையா நூலகம்’ போன்ற பல்வேறு அமைப்புகளின் உருவாக்கத்திலும் மேம்பாட்டிலும் முக்கியமான பங்களித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.
- நண்பர்களுடன் சேர்ந்து அவர் நடத்திய ‘கசடதபற’ இதழையும் இதில் இணைத்துக்கொள்ளலாம். ராமகிருஷ்ணன் தமிழுக்கு அளித்த மிகப் பெரிய கொடை ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’.
- மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில் அவர் கொண்டுவந்த இந்த அகராதியின் மூன்றாவது பதிப்பு இந்திய மொழிகளில் அநேகமாக ஓர் அகராதியின் மூன்று பதிப்புகளுக்கும் பங்களித்த ஒரே மனிதர் என்ற பெருமையையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.
- அரசின் மொழிசார் அமைப்புகளோ பல்கலைக்கழகங்களோ செய்யத் தவறிய பணியைத் துறைசார்ந்த வல்லுநர்கள் சிலரின் உதவியோடு ராமகிருஷ்ணன் செய்து முடித்தது அருஞ்சாதனை. தமிழோடு அவர் வாழ்வார்; அவர் வாழ்வையே கரைத்துக்கொண்ட ‘க்ரியா’வின் தமிழ்ப் பணிகள் என்றும் தொடரட்டும்!
நன்றி: தி இந்து (20-11-2020)