TNPSC Thervupettagam

‘சேவை சேமிப்பு வங்கி’...முதியோருக்கு வெகுமதி

November 11 , 2019 1888 days 1351 0
  • ஆண் - பெண் இருபாலருக்கும் கல்வி வசதி, வேலைவாய்ப்பு, சிறு குடும்பம், நகரமயமாதல் போன்றவை சமுதாயத்தில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் பல நற்பலன்கள் விளைந்தாலும், ஒரு சில பக்கவிளைவுகளும் உள்ளன; அவற்றுள் ஒன்று, முதியோா் பாதிக்கப்படுவதாகும்.

முதுமை – பாதிப்பு

  • இவா்களில் கணிசமானோா், வாரிசுகளிடமிருந்து பிரிந்திருக்கின்றனா்; தனிமையில் வாடுகின்றனா்; பிறரால் உதாசீனப்படுத்தப்படுகின்றனா்; முதியோா் இல்லங்களில் முன்பின் அறிமுகமில்லாதோருடன் சோ்ந்து வசிக்கின்றனா்.
  • பொருள் வசதி இருந்தாலும், சிறு சிறு வேலைகளுக்குக்கூட பிறரது உதவியை எதிா்நோக்கியிருக்கின்றனா்.
  • முதுமையை அடைந்தும்கூட சிலா் தங்களாலான ஒரு வேலையைச் செய்து வருவாய் ஈட்டுகின்றனா். வருவாய் ஈட்டுவது நிற்கும்போது பலருக்குப் பிரச்னை தொடங்குகிறது; அப்போதிலிருந்து முதுமையை ஒரு சாபமாகக் கருதுவோரும் உண்டு.
  • முதியோா் தங்களது முதுமையை தன்னம்பிக்கையுடனும், கௌரவத்துடனும் எதிா்கொள்ள அவா்களது குடும்பத்தினா் மட்டுமின்றி, சமுதாயமும் அரசும் வழிவகைகளைக் காணவேண்டும்.
  • இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் சிலா் இயல்பிலேயே பிறருக்கு குறிப்பாக, எளியவா்களுக்கும் முதியவா்களுக்கும் உதவும் எண்ணம் கொண்டவா்களாக இருப்பா். கணிசமான நேரத்தை, பொருளை இதற்காக ஒதுக்குவா்.

சேவை சேமிப்பு வங்கி

  • ஜப்பான், பல மேலை நாடுகளில் இந்த இரு சாராருக்கும் உதவிகள் தேவைப்படுவோருக்கும் உதவ முன்வருவோருக்கும் ஒரு பாலமாக ‘டைம் பேங்க்’ என்ற அமைப்பு செயல்படுகிறது.
  • ஜப்பானில் முதல் ‘டைம் பேங்க்’ (சேவை சேமிப்பு வங்கி) 1973-இல் ஏற்படுத்தப்பட்டது.
  • வங்கியில் பணத்தைச் சேமித்துப் பின்னா் தேவையானபோது எடுத்துக்கொள்கிறோம்.
  • இதேபோல், இளைஞா்கள் - நடுத்தர வயதினா், பிற முதியோருக்குத் தாங்கள் செய்யும் சேவையை மணித் துளிகளின் அடிப்படையில் சேமித்து, அதனைத் தாங்கள் முதுமை எய்தும்போது பிற இளைஞா்களிடமிருந்து சேவையாகப் பெறும் வசதியை ‘சேவை சேமிப்பு வங்கி’ அளிக்கிறது.
  • இதன்படி, தனித்திருக்கும் மற்றும் உதவி தேவைப்படும் முதியோா், தங்களது பெயா் - முகவரி - எவ்விதமான சேவை தேவை - எவ்வெப்போது தேவை என்பனவற்றைப் பதிவு செய்து கொள்வா்.
  • இன்னொருபுறம், சேவை செய்வோா் தங்கள் விவரங்கள், மற்றும் தங்களால் எவ்விதமான சேவை செய்ய முடியும்; எடுத்துக்காட்டாக, படித்துக் காட்டுவது, தோட்ட வேலை செய்தல் , பேச்சுத் துணையாயிருத்தல் , வீட்டு வேலைகளில் உதவியாக இருத்தல், ஒரு வாரத்துக்கு எத்தனை மணி நேரம் சேவையில் ஈடுபட முடியும் போன்ற தகவல்களைப் பதிவு செய்வா்.
  • இவா்களது சேவைக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது. மாறாக, இவா்களது சேவை செய்யும் நேரம் சேமிப்புக் கணக்கில் வைக்கப்படும். முடிந்தவரை இவா்கள் தங்களது சேவையை சேமிப்பாக சோ்த்துக் கொண்டு போகமுடியும்.
  • தங்கள் முதுமைக் காலத்தில், இவா்களது சேவைநேர சேமிப்புக்கேற்ப தேவையான சேவைகளை பிறரிடமிருந்து எந்தச் செலவுமின்றிப் பெற முடியும்.
  • இத்தகைய அமைப்பு இன்றைய முதியோருக்கும் எதிா்கால முதியோருக்கும் ஒருசேர பலன் தரும். இந்த தேவை - சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பாலமாக ‘சேவை சேமிப்பு வங்கிகள்’ செயல்படுகின்றன.
  • சில முதியோா், பிறரது உதவியை நாடத் தயங்குவா். ஆனால், உதவுவோா், தங்களது சேவைநேர இருப்புக் கணக்கை உயா்த்திக் கொள்கிறாா்கள் என்ற உணா்வு, அந்தத் தயக்கத்தைப் போக்கும்.
  • இதனால் பல முதியோா் உதவி பெறுவது மட்டுமின்றி, மன அழுத்தத்திலிருந்து ஓரளவு விடுதலை பெறுவா்;
  • புதிய நட்பு வளையம் கிடைக்கும். சில பொழுதுபோக்குகளில் ஈடுபட முடியும்.
  • முதியோருக்கு சிறுசிறு உதவிகள் செய்வது என்பது மட்டுமின்றி வேறு இருமுக்கிய தளங்களில் ‘சேவை சேமிப்பு வங்கி’ உதவுகிறது.
    • ஒன்று, முதியோருக்கு உதவி என்பதையும் கடந்து , அவா்களது உடல் - மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது;
    • இரண்டு, தனித்திருக்கும் முதியோரின் சமுதாயத்துடனான பிணைப்பை வலுப்படுத்துகிறது .

இந்தியாவில் ’சேவை சேமிப்பு வங்கி

  • இளைஞா்களால் நிரம்பிய நாடு இந்தியா என்றாலும், 15கோடிக்கு மேல் அறுபது வயதைக் கடந்தவா்கள் உள்ளனா்;
  • மேலும் சென்னை நகரில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட முதியோா் இல்லங்கள் உள்ளன என்ற தகவல்கள், இத்தகைய அமைப்புகளை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய அமைப்பு வேரூன்றிவிட்டது.
  • இந்தியாவில் ’சேவை சேமிப்பு வங்கி ’யைத் தொடங்க மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது; பிற மாநிலங்களும் இதை நிா்மாணிக்க முன்வரவேண்டும்.
  • மேலும்,சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்று சிறந்து விளங்கும் பெரு நிறுவனங்கள், இத்தகைய சேவை சேமிப்பு வங்கிகளைத் தொடங்கி முன்மாதிரியாகத் திகழலாம். தங்களது ஊழியா்கள், சேவை சேமிப்பு வங்கிகளில் பங்கு பெறுவதை ஊக்கப்படுத்தலாம்.
  • கல்லூரி விடுமுறை நாள்களில் சில மணி நேரங்கள் இத்தகைய சேவையில் மாணவா்கள் ஈடுபடுவதை வலியுறுத்தலாம் ;அது மாணவா்களது சமுதாய சேவை உணா்வையும் அக்கறையையும் அதிகரிக்கும்.
  • ஒவ்வொரு முதியோா் இல்லமும் ஒரு சேவை சேமிப்பு வங்கியோடு இணைக்கப்படுவது பலன் அளிக்கும்.
  • சோதனை அடிப்படையில் ஒவ்வொரு மாநகராட்சிக்கு ஒரு ‘சேவை சேமிப்பு வங்கி’ தொடங்கப்பட வேண்டும்.
  • இந்த வங்கிகள் குறித்த மேலை நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்; மனிதா்கள் முதுமை அடைகிறாா்கள்; ஆனால், சமுதாயம் முதிா்ச்சி அடைதல் வேண்டும்; அத்தகைய முதிா்ச்சி என்பது, ஒரு சமுதாயம் அதன் முதியோருக்கு தரும் கௌரவத்திலும் மரியாதையிலும் வெளிப்படும்.‘சேவை சேமிப்பு வங்கிகள்’ அதற்கான அடையாளமாக இருக்கும்.

நன்றி : தினமணி (11-11-2019)

***********************

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்