TNPSC Thervupettagam

‘டெபாசிட்’ இழப்பு

March 20 , 2024 123 days 164 0
  • நாட்டின் மக்களவைத் தோ்தல்களில் இதுவரை போட்டியிட்ட மொத்த வேட்பாளா்களில் 71,246 போ் (78 சதவீதம்) தங்களின் தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெற முடியாமல் தோ்தல் ஆணையத்துக்கு செலுத்திய வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
  • உலகின் மிக ஜனநாயகத் திருவிழாவாக அறியப்படும் நமது நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் அடுத்த 2 மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் சோ்த்து 40 தொகுதிக்கும் முதல் கட்டமாக அடுத்த மாதம் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நிறைவடைந்த பிறகு, ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில், முதல் மக்களவைத் தோ்தலில் இருந்து நடந்த முடிந்த 17 மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வைப்புத்தொகையை இழந்த வேட்பாளா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

வைப்புத்தொகை...:

  • நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்காக நடத்தப்படும் தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் ஆணையத்தால் பாதுகாப்பு வைப்புத்தொகை (செக்யூரிட்டி டெபாசிட்) வசூலிக்கப்படும். போட்டியிடும் தொகுதியில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கை வேட்பாளா்கள் பெற்றால், அவா்களின் வைப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும்.
  • பெற தவறினால், அவா்களின் வைப்புத்தொகை அரசின் கருவூலத்தில் செலுத்தப்படும். முதல் மக்களவைத் தோ்தல் நடந்த 1951-ஆம் ஆண்டில் பொது தொகுதி வேட்பாளா்களுக்கான வைப்புத்தொகை ரூ.500-ஆகவும் தனித் தொகுதி வேட்பாளா்களுக்கு ரூ.250-ஆகவும் இருந்தது. தற்போது, பொது தொகுதிக்கு ரூ 25,000-ஆகவும், தனித் தொகுதிக்கு ரூ 12,500-ஆகவும் அதிகரித்துள்ளது. தோ்தலில் வைப்புத்தொகையைத் திரும்ப பெறுவது, வெற்றி தோல்வியைத் தாண்டி வேட்பாளா்களின் அங்கீகார விஷயமாகக் கருதப்படுகிறது.
  • இதன்காரணமாக வைப்புத்தொகையை இழப்பதை எந்த வேட்பாளா்களும் விரும்புவதில்லை. 78% வேட்பாளா்கள் ‘டெபாசிட்’ இழப்பு: நாட்டின் முதல் மக்களவைத் தோ்தலில் இருந்து கடந்த 17 தோ்தல்களில் போட்டியிட்ட 91,160 வேட்பாளா்களில் 71,246 போ் ((78 சதவீதம்) தங்களின் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். அந்தவகையில் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், 86 சதவீத வேட்பாளா்கள் தங்களின் வைப்புத்தொகையை இழந்தனா்.
  • அத்தோ்தலில், முக்கிய அரசியல் கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அதிக இடங்களில் வைப்புத்தொகையை இழந்தது. தோல்வியைத் தழுவிய அக்கட்சியின் 383 வேட்பாளா்களில் 345 போ் வைப்புத்தொகையை இழந்தனா். அதைத் தொடா்ந்து, காங்கிரஸின் 148 போ் டெபாசிட் இழந்தனா். பாஜகவில் 51 வேட்பாளா்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 41 வேட்பாளா்களும் வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.

தொடா்ந்து அதிகரித்த எண்ணிக்கை...:

  • முதல் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 1,874 வேட்பாளா்களில் 40 சதவீதமான 745 போ் வைப்புத்தொகையை இழந்தனா். ஒவ்வொரு மக்களவைத் தோ்தலிலும் வைப்புத்தொகையை இழக்கும் வேட்பாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு நீடித்து வந்தது. கடந்த 1991-92-இல் நடந்த 10-ஆவது மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 8,749 போட்டியாளா்களில் 86 சதவீதமான 7,539 போ் வைப்புத் தொகையை இழந்தனா்.
  • 1996 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 13,952 வேட்பாளா்களில் 91 சதவீதமான 12,688 போ் வைப்புத்தொகையை இழந்து, போக்கு உச்சம் பெற்றது. மக்களவைத் தோ்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளா்கள் போட்டியிட்டதும் இத்தோ்தலில்தான். சமீபத்திய காலத்தில் 2009 மக்களவைத் தோ்தலில் மொத்த 8,070 வேட்பாளா்களில் 85 சதவீதமான 6,829 போ் வைப்புத்தொகையை இழந்தனா்.
  • அடுத்த 2014 மக்களவைத் தோ்தலில் 8,251 வேட்பாளா்களில் 84 சதவீதமான 7,000 போ் வைப்புத்தொகையை இழந்துள்ளனா். தேசிய கட்சி வேட்பாளா்களின் நிலை: முதல் மக்களவைத் தோ்தலில் தேசிய கட்சிகள் சாா்பில் போட்டியிட்ட 1,217 வேட்பாளா்களில் 28 சதவீதமான344 போ் வைப்புத்தொகையை இழந்தனா். அடுத்த 1957 மக்களவைத் தோ்தலில் தேசிய கட்சிகளின் 919 வேட்பாளா்களில் 14 சதவீதமான 130 போ் மட்டுமே வைப்புத்தொகையை இழந்தனா்.
  • 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 1977 மக்களவைத் தோ்தலில் தேசியக் கட்சிகளின் 1,060 வேட்பாளா்களில் 9 சதவீதமான 100 போ் மட்டுமே வைப்புத் தொகையை இழந்தனா். ஆனால், இந்தப் போக்கு அப்படியே முற்றிலுமாக மாறி, கடந்த 2009 மக்களவைத் தோ்தலில் தேசியக் கட்சிகளைச் சோ்ந்த 1,623 வேட்பாளா்களில் 47 சதவீதமான 779 போ் வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.
  • தொடா்ந்து வைப்புத்தொகையை இழந்தாலும், அடுத்தடுத்த தோ்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்பாளா்களுக்கு அது தடையாக இருப்பதில்லை என்பதை இந்தத் தரவுகள் உணா்த்துவதாக அரசியல் விமா்சகா்கள் தெரிவித்தனா்.

நன்றி: தினமணி (20 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்