TNPSC Thervupettagam

‘தற்செய’லாகப் பீறிடும் சாதிவெறி!

September 15 , 2024 73 days 87 0

‘தற்செய’லாகப் பீறிடும் சாதிவெறி!

  • ‘தங்களுக்குச் சாதி உணர்வெல்லாம் கிடையாது’ என்று ‘சிறப்புரிமை பெற்ற’ முற்பட்ட சாதியினர் அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள்; இடஒதுக்கீட்டுச் சலுகைக்காகவும், அரசிடமிருந்து பல சலுகைகளைப் பெறுவதற்காகவும் பட்டியலின மக்கள் மட்டுமே தங்களுடைய சாதிகளைப் பற்றிய உணர்வுகளோடு வாழ்வதாகவும் கூறுவார்கள்.
  • இது ‘எதிர்-சாதிய’ உணர்வாகும்; சாதி பற்றிய நினைவுகளோடு வாழ்வது பட்டியலினம் என்றும், பிராமணர்கள் தங்களுடைய சாதி பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்வதாகவும் சித்தரிக்க முயல்வார்கள். அவர்கள் கடைப்பிடிப்பது ‘தற்செயலான சாதியம்’ என்ற புதிய ஆயுதமாகும்.

தற்செயலான சாதி உணர்வு

  • ‘சாதி உணர்வற்ற நிலை’ எது என்பதில் நிலவும் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுடைய சாதிப் பெருமையை சர்வசாதாரணமாக பேச்சிலும் செய்கையிலும் சாடைகளிலும் காட்டிவிடுவார்கள். தற்செயலாக, சாதிய உணர்வு வெளிப்பட்டுவிட்டதைப் போல நடந்துகொள்வார்கள். பிற சாதியினரை மட்டம் தட்டவும், சிறுமைப்படுத்தவும் பேச்சிலும் செயலிலும் தங்களுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவார்கள்.
  • ‘தற்செயலான சாதியம்’ என்பது, அதற்குரிய எதிர்வினைகளுக்கோ, தண்டனைகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ வழியில்லாமல் – அதேசமயம் தேவைப்படுகிற அளவுக்குச் சேதத்தை ஏற்படுத்தும் – சாதி சார்ந்த செயலாகும். சில வகை செயல்கள், செய்கைகள், தனிப்பட்ட வகையிலான பேச்சுவழக்கு, சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் குறும்பு, முக பாவம், உடல்மொழி என்று சாதியுணர்வைப் பல வழிகளிலும் வெளிப்படுத்துவார்கள். 
  • இவையெல்லாம் அன்றாட வாழ்க்கையில் ‘தற்செயலானவை’ என்பதால் இதற்கு எதிராக சட்டரீதியிலும் நடவடிக்கை எடுக்க முடியாது, பெரிதாக வாக்குவாதத்திலும் ஈடுபட முடியாது. ‘இது தற்செயலானது’ என்பதால் - அனைவரும் அன்றாட வாழ்க்கையில் பார்ப்பவைதான், உணர்பவைதான் என்பதால் அவற்றைப் பற்றிக் குறை காணவும் முடியாது. ‘தற்செயலான சாதியுணர்வு’ என்பதால் எந்தவொரு குடிமகனும் தார்மிக அடிப்படையிலோ அறம் சார்ந்தோ அதைத் தண்டிக்கவும் முடியாது.

தாற்காலிக சாதியம்

  • ‘தாற்காலிக சாதியம்’ என்பதை எப்படி அடையாளம் காண்பது என்றால், முற்பட்ட சாதியினர் அதை எப்படி கடைப்பிடிக்கிறார்கள் என்று அருகிலிருந்து கூர்ந்து கவனித்தால்தான் புரியும். பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், வேலைசெய்யும் அலுவலகங்கள், பொது வேலைக்காக சந்தித்துக்கொள்ளும் இடங்கள், சமூக வட்டங்கள் ஆகியவற்றின்போது அதை நேரிலேயே பார்க்கவும் முடியும்.
  • பள்ளி – கல்லூரி நண்பர்கள், ஒரே நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள், ஒரே பகுதியில் குடியிருப்பவர்களிடையே இந்தச் சாதிய வன்மத்தைக் காணலாம். ஒரு செயலைப் பற்றியோ விளைவைப் பற்றியோ பேசும்போது, ‘தாங்கள்தான் அனைத்தும் தெரிந்தவர்கள் என்பதைப்போலவும், தங்களைத் தவிர வேறு எவராலும் அதையெல்லாம் செய்ய முடியாது என்றும்’ பெருமையாகப் பேசும்போது சாதிப் பெருமையை அப்படியே வெளிக்காட்டுவார்கள்.
  • தற்செயலான சாதிவெறி தெளிவில்லாதது, பிரித்துப் பார்க்க முடியாதது. எனவே, முற்பட்ட சாதிக்காரர் பேசியதும் செய்ததும் சாதிய மேலாதிக்க உணர்வில்தான் என்பதை எப்படி நிரூபிப்பது? அது சாதாரணமல்ல, சாதிய வெறியில் செய்ததுதான் என்பதை முடிவுசெய்வது யார்? 
  • பட்டியல் இனத்தவருடன் முற்பட்ட சாதிக்காரர் தனியாகச் சந்திக்கும் வேளைகளில், தற்செயலான சாதிவெறி தலைதூக்குகிறது. ‘சொன்ன வேலையை விட்டுவிட்டு வேறு எதையோ செய்திருக்கிறாய், நான் சொன்னதைச் செய்யவில்லை, இந்த வேலைக்கே தகுதியில்லை, பொதுவெளியிலோ – தனிப்பட்ட இடங்களிலோ தலைகாட்டக்கூட தகுதியில்லை’ என்றெல்லாம் வசைபாடுவார்கள்.
  • ‘பட்டியல் இனத்தவர்களா, பார்க்கவே சகிக்காது, சரியாகப் பேசத் தெரியாது, சொன்னதைச் செய்யத் தெரியாது, கலை – கலாச்சார நிகழ்ச்சிகள் நிகழ்த்தத் தெரியாது, பிற்போக்கான எண்ணம் கொண்டவர்கள், எல்லோருடனும் இயல்பாகக் கலந்து பழகமாட்டார்கள், திறமையற்றவர்கள், எதற்கும் பயன்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் பொதுஇடங்களிலேயே தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். ‘தற்செயலான சாதியம்’ என்பது முற்பட்ட சாதிகளில் பிறந்த அனைவருமே புத்திசாலிகள், திறமைசாலிகள் என்பதாகவும் பட்டியல் இனத்தவர்கள் அதற்கு நேர்மாறானவர்கள் என்றும் சித்தரிக்கும்.

எப்படி இருக்கிறது கல்வி நிலையங்கள்?

  • இன்றைய உயர்கல்வி வளாகங்களில் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து படிக்கின்றனர். வெவ்வேறு சாதியினர் சேர்ந்து பழகும்போது தங்களைவிட குறைந்த சமூக மதிப்புள்ள சாதியினர் என்று கருதுகிறவர்களுடன் சகஜமாக இருக்க முடியவில்லை என்பதை முற்பட்ட சாதி மாணவர்கள் பல வகைகளில் வெளிப்படுத்திவிடுவார்கள். பார்வையிலேயே ஓர் ஏளனம் தெரியும், பேசும்போது யார் – எவர் என்று ஆழம் பார்ப்பார்கள், படிப்பைப் பற்றியோ நிறுவனத்தைப் பற்றியோ பேசத் தொடங்கினால் தனக்குதான் எல்லாம் தெரியும் என்று காட்ட முற்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடமாக இருந்தால், இந்த வேலை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பார்கள். இடஒதுக்கீட்டால்தானே இந்த வேலைக்கு வந்தாய் என்ற குத்தல் அதில் இருக்கும். பட்டியல் இனத்தவர் என்ற தெரிந்துவிட்டால் பேச்சை நிறுத்திவிடுவார்கள், எதையோ செய்ய வேண்டிய அவசரம் இருப்பதைப் போல அந்த இடத்தைவிட்டே அகன்றுவிடுவார்கள். சாதாரணமாகப் பேசும்போது சாதியப் பின்புலத்தைக் குறிவைத்து ஏளனம் செய்வார்கள் அல்லது தவறுகளை சொல்லிச் சிரிப்பார்கள். பட்டியல் இனத்தவருக்குத் தெரியாதவற்றையெல்லாம், அவர்களுடைய மாபெரும் குறைகளைப் போல எள்ளி நகையாடுவார்கள்.
  • தற்செயலான சாதிய உணர்வு என்பது பொதுத்தன்மையை மீறுகிறது. இதெல்லாம் சகஜம்தான் என்ற கண்ணோட்டம் - தார்மிக நெறியற்ற, முறையற்ற சிந்தனைகளும் செயல்களும்கூட தவறில்லைதான் என்று நியாயப்படுத்துவதாகத் தொடர்கின்றன. இவையெல்லாம் தீங்கற்ற, நகைச்சுவையான கலந்துரையாடல் என்பதாகவும் பார்க்கப்பட வேண்டும் என்கின்றனர். பட்டியல் இனத்தவருக்கும் இதனால் குழப்பமே நேர்கிறது; நாம்தான் சாதாரணமான உரையாடல்களைக்கூட தவறான கண்ணோட்டத்தில் பார்த்து மனம் வருந்துகிறோமா அல்லது அந்தப் போர்வையில் நம்மைத் தொடர்ந்து தாக்குகிறார்களா என்று.

நன்றி: அருஞ்சொல் (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்