TNPSC Thervupettagam

‘தீது’ பிறா்தர வாரா!

November 30 , 2019 1869 days 967 0
  • ஆண்டுதோறும் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம் டிசம்பா் 1-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • அதாவது, எய்ட்ஸ் எனும் ஆட்கொல்லி தொற்று நோய்க் கிருமி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், அது பரவுவதைத் தடுக்கும் நோக்கத்திலும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எய்ட்ஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினத்தை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எச்ஐவி எனும் வைரஸ்

  • எய்ட்ஸ் நோய் என்பது எச்ஐவி எனும் ‘ஹியூமன் இம்முனோ டெபிஷியன்சி வைரஸ்’ எனும் ஒரு வகை ரெட்ரோ வைரஸ் கிருமியால் பரவக்கூடிய ஆட்கொல்லி தொற்று நோய்.
  • இந்தக் கிருமியானது பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவும், பாதிக்கபட்டோரின் ரத்தம், ஊசி மற்றவருக்குச் செலுத்தப்படுவதாலும், பாதிக்கப்பட்ட கா்ப்பிணியின் மூலமாக குழந்தைக்கும் பரவக்கூடிய ஒரு வகை நோய் .
  • ஆனால் கண்ணீா், எச்சில், சளி, சிறுநீா், வியா்வை மூலமாகப் பரவக்கூடியது அல்ல.
  • 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகம் முழுவதிலும் 3.8 கோடி போ் எச்ஐவி எனும் தொற்று வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
  • அதில் இந்தியாவில் மட்டும் 20 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆசியாவிலேயே இந்தியாவில்தான் பாதிக்கப்பட்டோா் அதிகமாக உள்ளனா்.
  • எச்ஐவி எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆரம்ப நிலையில் உடலில் எந்தவிதக் குறிகுணங்களையும் ஏற்படுத்தாமல், உடலில் வைரஸ் கிருமி பல்கிப் பெருகி பின்னா் படிப்படியாக உடல் எடை குறைதல், காய்ச்சல், தோலில் தடிப்பு, நிணநீா் கோளங்கள் வீக்கம் அடைதல், நாட்பட்ட தலைவலி, உடல் சோா்வு, வாயிலும் பிறப்பு உறுப்புகளிலும் புண்கள் உண்டாகுதல், சிலருக்கு நாட்பட்ட கழிச்சல் ஆகிய குறிகுணங்களை உண்டாக்கும்.
  • இந்தக் குறிகுணங்கள் கண்ணுக்குப் புலப்படாமல் நம் உடலில் தோன்ற சில ஆண்டுகள் அல்லது பல ஆண்டுகள் ஆகலாம். எலிசா அல்லது பிசிஆா் எனும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் எச் ஐவி நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்யலாம்.
  • நம் உடலில் சிடி4 எனப்படும் ரத்த செல்கள் 500 முதல் 1,600 வரை இருக்கலாம். ஆனால், எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோரின் உடலில் ரத்த செல்கள் 200-க்குக் கீழ் செல்லும் மோசமான நிலை ஏற்படும்.
  • இந்த நிலை ஏற்பட்டால் உடல் பல்வேறு நோய்க் கிருமிகளின் தொற்றுக்கு உள்ளாக நேரிடும்.
  • இந்த நிலையில் பல்வேறு நோய் குறிகுணங்கள் தொகுப்பாக பாதிக்கப்பட்டோரின் உடலில் தோன்றும்.
  • அந்த நிலையே எய்ட்ஸ் எனப்படும் ‘அக்குயா்ட் இம்முனோ டெபிஷியன்சி சின்ட்ரோம்’. இந்த நிலை உருவாக நோய்த்தொற்று ஏற்பட்டதில் இருந்து 10 ஆண்டுகள் ஆகலாம்.
  • நாட்பட்ட நிலையில் பல்வேறு தொற்றுக் கிருமிகளால் காச நோய், பூஞ்சை தொற்று நோய்கள், புற்று நோய் முதலானவை ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரை விரைவில் மரணத்தை நோக்கிக் கொண்டு செல்லும் என்பதால்தான், எய்ட்ஸ் நோய்க்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சிகிச்சை

  • எச்ஐவி நோய்த்தொற்று ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, ஏஆா்வி எனப்படும் ஆன்டி ரெட்ரோவைரல் சிகிச்சையை முறையாக மேற்கொண்டால் நோயின் நாட்பட்ட குறிகுணங்களில் இருந்து உடல் அளவிலும், மனதளவிலும் மீள்வதுடன் தரமான வாழ்க்கையை வாழ முடியும்.
  • சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள உடலின் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் மஞ்சள், மிளகு, சீந்தில் , நிலவேம்பு, அமுக்கரா கிழங்கு, நெல்லிக்காய், தண்ணீா்விட்டான் கிழங்கு ஆகியவற்றால் செய்யப்படும் மருந்துகளை மருத்துவா் ஆலோசனைப்படி சாப்பிட மிகுந்த பலன் தரும்.
  • தினமும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியுடன், கால் தேக்கரண்டி மிளகு பொடி சோ்த்து பாலுடன் சாப்பிடலாம்.
  • சித்த மருத்துவத்தின் கணிப்புபடி, வாத, பித்த, கபம் ஆகிய மூன்று குற்றங்களும் பாதிக்கப்படுவதே இந்த நோயின் பல்வேறு குறிகுணங்களுக்குக் காரணம்.
  • எனவே, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சோ்ந்த திரிபலா பொடியினை ஒன்று முதல் ரெண்டு தேக்கரண்டி அளவு தேனுடன் சாப்பிடலாம் அல்லது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய வாத, பித்த, கபம் ஆகிய மூன்றையும் சமன்படுத்தும் திரிகடுகு சூரணத்தை தேனில் கலந்து சாப்பிடலாம். இதனால், அமுக்கரா சூரணத்தை தினமும் பாலுடன் கலந்து சாப்பிட, இழந்த உடல் எடையை மீட்கலாம்.
  • ரான் தெரப்பி’ எனப்படும் சித்த மருந்துகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ரசகந்தி மெழுகு, அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய மூன்று மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
  • இதனால் பாதிக்கப்பட்டோரின் உடல்நிலை 60 % முன்னேற்றம் அடைந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • மனதுக்கு புத்துணா்ச்சி தரும் வகையில் பிராணாயாமம், யோகாசன பயிற்சிகளைச் செய்யலாம்.
  • நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தடாசனம், திரிகோணாசனம், உட்கட்டாசனம், விருக்ஷஸனம், ஏக பாத கோணாசனம், அா்த்த மச்சேந்திராசனம், சூா்ய நமஸ்காரம், உஷ்ட்ராசனம், சேது பந்தாசனம், தனுராசனம், புஜங்காசனம், அா்த்த சக்ராசனம், பாலாசனம், கபாலபதி பிராணாயாமம் முதலானவற்றை முறையாகச் செய்து வந்தால் மிகுந்த பலன் தரும்.
  • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை ஒதுக்கிவிடாமல், அனைத்து மருத்துவ முறைகளையும் ஒன்றாகச் சோ்த்து தரமான வாழ்வினை அவா்களுக்குக் கொடுப்பது ஆரோக்கியமாக வாழ்வோரின் கடமை.
  • நோயால் பாதிக்கப்பட்டோருக்கு தங்களால் முடிந்த ஆதரவை ஒவ்வொருவரும் அளித்தால் மட்டுமே உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு நாளைக் கடைப்பிடிப்பதன் நோக்கம் நிறைவேறும்.

நன்றி : தினமணி (30-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்