‘நீட்’ தேர்வை ஒழித்து விடாதீர்கள்!
- பள்ளிக்கூட படிப்பு முடிந்தவுடன் மருத்துவம், பொறியியல் பட்டம் பெற கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மாணவர்களின் எதிர்பார்ப்பு. பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளில் சேர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் கனவு காண்பார்கள். இவற்றுக்கான தேர்வுகளை எழுதும் அனைவருமே அதில் வெற்றிபெற்றுவிடுவதில்லை என்பது உண்மையாக இருந்தாலும், நேர்மையான தேர்வுமுறை இருந்தால் தகுதியுள்ள மாணவர்களின் ஆசைகள் நிறைவேற நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன.
- மருத்துவக் கல்விக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வில் (நீட்) வினாத்தாள்கள் சில ஊர்களில் கசிந்ததைப் பார்த்தோம். உடனே பல மாநிலங்களிலிருந்து, ‘நீட்’ தேர்வையே ரத்துசெய்துவிட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. இந்தக் கோரிக்கைகள் மாணவர்களிடமிருந்து நேரடியாக வருவதைவிட, பல அரசியலர்களிடமிருந்துதான் ஆவேசமாக வெளிப்பட்டது சுவாரசியம்.
- இந்த முறையை ரத்துசெய்துவிட்டால், வேறு எப்படி மாணவர்களைத் தேர்வுசெய்வது? ‘நீட்’ தேர்வு வருவதற்கு முன்னால் நாட்டிலிருந்த நடைமுறை என்ன? அதிலிருந்த நிறைகள் – குறைகள் என்ன? ‘நீட்’ தேர்வுக்கு அவசியம் ஏன் ஏற்பட்டது? பழைய முறையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் சேர்க்கப்படலாம் என்று முடிவுசெய்தால், அதன் பலன் யாருக்கு அதிகம் கிடைக்கும்? மருத்துவப் படிப்பில் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் சேர்வதற்கான நடைமுறை ‘நீட்’ வந்ததற்குப் பிறகு இயல்பாக இருக்கும் நிலையில், ‘நீட்’ தேர்வின் நன்மை, தீமைகளையும் விருப்பு–வெறுப்பு இல்லாமல் ஆராய்வது நல்லது.
யுபிஎஸ்சி
- வினாத்தாள் கசிவது ‘நீட்’ தேர்வில் மட்டுமல்ல, ஒன்றிய அரசு நடத்தும் ஒன்றிய பொதுத் தேர்வாணையத் தேர்விலும் (யுபிஎஸ்சி) சில வேளைகளில் - சில இடங்களில் நடக்கிறது. நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தச் சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்காக ‘நீட்’ தேர்வே கூடாது என்பது முறையா என்று முதலில் ஆராய வேண்டும்.
முந்தைய கதை என்ன?
- ‘நீட்’ தேர்வு அறிமுகமாவதற்கு முன்னால், மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்தியது. ஒன்றிய, மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 15% இடங்கள், இந்தத் தேர்வில் தேறிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. ‘நீட்’, ‘யுபிஎஸ்சி’ தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது உண்மையே. அரசு உடனே இந்தத் தேர்வுகளைச் சில இடங்களில் ரத்துசெய்துவிட்டு, மாற்றுத் தேர்வுக்கு ஏற்பாடுசெய்தது, கசிவுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.
- இனி வினாத்தாள்கள் கசியாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க உத்தரவிட்டிருக்கிறது. எந்தவொரு உயர்கல்விக்கும், வேலைக்கும் இரண்டு வகையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதலில் எழுத்துத் தேர்வும், பிறகு ‘வாய்மொழித் தேர்வாக’ நேர்காணல்களும் நடக்கின்றன. சிலவற்றில் ஒன்று மட்டுமேயும், சிலவற்றுக்கு இரண்டும் சேர்ந்தும் நடத்தப்படுகின்றன.
- கல்வி நிலையங்களில் சேர்க்க, எழுத்துத் தேர்வுதான் சிறந்தது. எனவே, தேசியக் கல்வி நிறுவனங்களும் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களும் இதையே கடைப்பிடிக்கின்றன.
தனியாரில் சர்ச்சை
- தனியார் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை என்பது சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. ‘நீட்’ தேர்வு வருவதற்கு முன்னால் ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குச் சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்தின. தேர்வில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமல்லாமல், வேறு காரணங்களுக்காகவும் கல்லூரிகளில் பயில இடங்கள் வழங்கப்பட்டன. இது பெரிய தொழிலாகவே விரிந்து ஏராளமான இடைத்தரகர்களும் உருவானார்கள். பணம் படைத்தவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், முதுகலை மருத்துவப் படிப்புகள் எளிதில் கிடைத்தன.
- நல்ல படிப்பாளியாக இருந்தாலும், நடுத்தர வர்க்க மாணவர்கள் இடம் கிடைக்காமல் வேறு படிப்புக்குச் செல்ல நேர்ந்தது. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. கர்நாடகத்தில் இந்தத் தேர்வுகளை மிகுந்த நேர்மையாகவே நடத்தினர். சில தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதவே மிகப்பெரிய காப்புத்தொகையைச் செலுத்த வேண்டும் என்ற முன்நிபந்தனைகளும் நிலவின. பணக்காரர்களின் குழந்தைகளுக்கு இடம் கிடைப்பதற்காகவே பல முறையற்ற வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
2012இல் அரசின் முடிவு
- வெவ்வேறு மாநிலங்களிலும் தனியார் கல்லூரிகளிலும் கணக்கில்லாமல் நடைபெற்றுவந்த இந்த நுழைவுத் தேர்வுகளை நிறுத்திவிட்டு, நாடு முழுவதற்கும் பொதுவாகவே தேர்வுகளை நடத்துவது என்று ஒன்றிய அரசு முடிவுசெய்தது. தனியார் கல்லூரிகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அரசே இப்படிப் பொது நுழைவுத் தேர்வை நடத்துவது தனியார் கல்வி நிலையங்களின் உரிமைகளில் குறுக்கிடுவது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஐஎம்சி, டிசிஐ வழக்கு
- நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, இந்திய மருத்துவப் பேரவையும் (ஐஎம்சி), பல்மருத்துவ இந்தியப் பேரவையும் (டிசிஐ), பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக நீதிமன்றம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 2013இல் மனு அளித்தன. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த மனுவை விசாரித்து, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னர் பிறப்பித்த தீர்ப்பை ரத்துசெய்தது, பொது நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டப்படிச் செல்லத்தக்கது என்று தீர்ப்பு வழங்கியது.
தகுதி அடிப்படையில்
- இப்போது ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்ல, தனியார் கல்லூரி – பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் பரம ஏழை மாணவர்களால்கூட மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது. இந்த ஜனநாயக நடைமுறை மாணவர்களிடையே கல்வி பெறுவதில் ‘சமத்துவ’த்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- அரசுக் கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. இப்போதும்கூட முறையற்ற வழிகளில் நன்கொடை அல்லது கட்டாயக் கொடை பெறுவதும் தொடர்கிறது என்ற புகார்கள் வருகின்றன, இவையெல்லாம் பணம் படைத்தவர்களுக்குச் சாதகமானவை.
- ‘நீட்’ தேர்வுக்குப் பிறகு, முறையற்ற வழிகளில் கோடிக்கணக்கில் பலர் சம்பாதித்துக்கொண்டிருந்த வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன. வினாத்தாள் கசிவுக்குப் பிறகு மீண்டும் ‘நீட்’ எதிர்ப்பு கோஷங்களை, சுயநலமிக்க சிலர் - அதிலும் சொந்தமாக மருத்துவக் கல்லூரிகளை நடத்துவோர் ஊக்குவித்துவருகின்றனர். அவர்கள் கோரும்படி மருத்துவக் கல்லூரி இடங்களை அவரவர்களே நிரப்பிக்கொள்ள அனுமதித்தால் மீண்டும் இடங்களைக் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கும் முறையற்ற நடைமுறைகளே ஆதிக்கம் செலுத்தும்.
நன்றி: அருஞ்சொல் (29 – 09 – 2024)