‘மிஷன் மெளசம்’ வானிலைத் திட்டம்
- இந்தியாவில் நிலவும் காலநிலை தொடர்பான சிக்கலான விஷயங்களைப் பகுப்பாய்வு செய்யவும், கணிக்க முடியாமல் போகும் வானிலை மாற்றங்களைச் சமாளிக்கவும், அதிதீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே அறியவும் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் ‘மிஷன் மெளசம்’ (Mission Mausam) என்கிற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2024 செப்டம்பர் 11ஆம் தேதி அன்று இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
காலத்தின் கட்டாயம்:
- தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2022இல் மட்டும் இந்தியாவில் விபத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 35% இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்டவை என்பது தெரியவந்தது. இதில் வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களைவிட மின்னல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், பருவமழை முன்னறிவிப்பை மேம்படுத்தவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
- ஏற்கெனவே, 2012ஆம் ஆண்டு ‘பருவமழைத் திட்டம்’ (Monsoon Mission) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்த இந்திய வானிலை ஆய்வு மையம், பருவமழை முன்னறிவிப்பைக் கணிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. எனினும், வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி இந்தியாவைத் தாக்கியபோது, அவற்றைச் சரியாகக் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை.
- எண்ணியல் அடிப்படையிலான வானிலை முன்கணிப்பு மாதிரியால் (NWP) இப்பணியைத் திறம்படச் செய்ய முடியாமல்போனது ஒரு முக்கியக் காரணம். இதனால், இந்தியாவின் கைவசம் இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்புக் கருவிகளை, ‘சென்சார்’களை அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்துவது அவசியமாகிறது. அதற்காகத்தான் தற்போதைய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
திட்டம் என்ன?
- கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலைகள், கனமழை, நிலச்சரிவு, நீரிடி (cloudburst) போன்ற அனைத்துமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளைப் பாதிக்கத் தொடங்கிவிட்டன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘மிஷன் மெளசம்’ திட்டத்தில், இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பு சார்ந்த பணிகளில் முக்கியப் பங்காற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), நடுத்தர நிலை வானிலை முன்னறிவிப்புத் தேசிய மையம் (NCMRWF), இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் (IITM) ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பணியாற்ற உள்ளன.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக, தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் 70 டாப்ளர் ரேடார்கள், காற்றின் அளவைக் கணிக்கும் 10 காற்றுத் தகவல்சேகரிப்புக் கருவிகள், 10 கதிர்வீச்சுமானிகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
- மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, சீனாவில் 217 டாப்ளர் ரேடார்களும் 128 காற்று தகவல்சேகரிப்புக் கருவிகளும், அமெரிக்காவில் 160 ரேடார்களும், 100 காற்றுத் தகவல்சேகரிப்புக் கருவிகளும் இயங்கிவருகின்றன. இரண்டாம் கட்டமாக, வானிலை மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து தகவல் திரட்டுவதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பொருந்திய செயற்கைக்கோள்களும் விமானங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
பயன்கள்:
- அதிநவீன வானிலை முன்கணிப்புத் தொழில்நுட்பத்தால் பருவமழை, காற்று மாசு, தீவிர வானிலை நிகழ்வுகள், புயல் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பதோடு, நிகழ்நேரத் தகவல்களைப் பெறவும் முடியும். வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்து, சுற்றுலாத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குத் துல்லியமான வானிலை முன்கணிப்பு பயனுள்ளதாக அமையும்.
- புணே நகரில் உள்ள இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையத்தில் மேகத்தின் தன்மையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ள மேக விதைப்பு (Cloud seeding) முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
- ஏற்கெனவே தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களில் மேக விதைப்பு முறை சோதனை செய்யப்பட்டாலும், அது அடுத்த கட்டத்தை எட்டவில்லை. பல நாடுகளிலும் இந்த மேக விதைப்பு முறையின் செயல்திறன் முழுமை அடையாமலும் சோதனைக் கட்டத்தைத் தாண்டாமலும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- டெல்லியைப் போன்று காற்று மாசு அதிகமாகக் காணப்படும் நகரங்களில் மேக விதைப்பு முறையில் வேதிப் பொருள்களை மேகங்களில் விதைத்து, காற்றில் அழுத்தத்தை அதிகரித்து செயற்கையாக மழையைப் பெய்ய வைத்து, காற்று மாசைக் குறைப்பதற்கான வழிகளையும் முயன்றுபார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்படாமல் தடுக்க செயற்கை முறையில் மழையைத் தடுக்கும் முறையையும் சோதனை செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல ஆண்டுகள் எடுக்கக்கூடிய ‘மிஷன் மெளசம்’ திட்டத்தின் சோதனைகள் வெற்றியடையும்பட்சத்தில், இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பின் துல்லியம் 5இல் இருந்து 10 சதவீதமாக முன்னேற்றம் அடையலாம். பெருநகரங்கள் மட்டுமல்லாது கிராமப்புற அளவிலும், 10 முதல் 15 நாள்களுக்கான வானிலை மாற்றங்களை நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம்.
- முக்கியமாக, இயற்கைப் பேரிடரால் ஏற்படக்கூடிய உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் ஓரளவு தடுக்கலாம். வானிலை, காலநிலை மாற்றங்கள் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவது சவாலான காரியம் என்பதால், தீவிரமான ஆராய்ச்சியும் முயற்சியும் தேவைப்படும் ஒரு திட்டமாகவே இது இருக்கும் எனத் தெரிகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2024)