- உலகின் முக்கியமான இதழ்களுள் ஒன்றான ‘தி கார்டியன்’ தனது இருநூறு ஆண்டுகளை நிறைவுசெய்ததைச் சமீபத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் கொண்டாடியிருந்தது.
- தற்போது, ‘மும்பை சமாச்சார்’ என்ற குஜராத்தி நாளிதழ் தனது 200-வது ஆண்டில் நுழைந்திருக்கிறது. ஆசியாவிலேயே நீண்ட காலமாக அச்சில் இருக்கும் பத்திரிகை அது தான் என்பது கூடுதல் சிறப்பு.
- உலகெங்கும் அச்சு இதழ்கள் சரிவைக் கண்டுவருகின்றன என்று சொல்லப்படும் வேளையில், ‘மும்பை சமாச்சார்’ படைத்திருக்கும் வரலாறு பெரிய நம்பிக்கை வெளிச்சமாகும்.
- அதுவும் பிராந்திய மொழியைச் சேர்ந்த இதழ் ஒன்று இவ்வளவு ஆண்டுகள் நீடித்திருப்பது இதழியலில் பிராந்திய மொழிகளுக்கு வலுவான எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
- ஆசியாவின் முதல் செய்தித்தாளான ‘ஹிக்கிஸ் பெங்கால் கெஸட்’, 1780-ல் தொடங்கப் பட்டு இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்டது.
- ‘சமாச்சார் தர்ப்பன்’ என்ற இதழ்தான் ஆங்கிலம் அல்லாத, இந்திய மொழிகளின் முதல் இதழ். இது 1818-ல் தொடங்கப்பட்டது. இதற்கு அடுத்துத் தொடங்கப்பட்ட இதழ் ‘மும்பை சமாச்சார்’.
- 1822-ல் ஜூலை 1 அன்று மும்பையில் ஃபர்தூன்ஜீ மர்ஸபான் என்ற பார்சி இனத்தவரால் தொடங்கப் பட்டதுதான் ‘பாம்பே சமாச்சார்’ (பின்னாளில் ‘மும்பை சமாச்சார்’) இதழ்.
- இந்த இதழ் தொடங்குவதற்கு முன்பே, அச்சகம் ஒன்றை அவர் நடத்திக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் வார இதழாகத்தான் ‘மும்பை சமாச்சார்’ நடத்தப்பட்டது.
- வணிகம் தொடர்பான செய்திகள், சொத்து விற்பனை, கடல் வழி வணிகம் போன்றவற்றையும், இறப்புச் செய்திகளையும் மட்டுமே அந்த இதழ் வெளியிட்டது.
- 1932-லிருந்து வாரம் இருமுறை இதழாக மாற்றமடைந்தது. 1855-லிருந்து இந்த இதழ் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது.
- மும்பை நகரத்தில் ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பிருந்தே குஜராத்திகள் செல்வாக்கு அதிகம். இப்போதும் அந்த நகரத்தின் பொருளாதாரம், தொழில் துறை, கலை போன்றவற்றில் குஜராத்திகளின் ஆதிக்கம் நீடிக்கவே செய்கிறது.
- ஆகவே, அங்குள்ள குஜராத் இந்துக்கள், பார்ஸிக்கள், ஜெயின்கள், மேமன்கள் போன்ற சமூகங்கள் விரும்பிப் படிக்கும் இதழாக ‘மும்பை சமாச்சார் அப்போதும் சரி... இப்போதும் சரி இருந்துவருகிறது.
- பின்னாளில், 1960-ல் மஹாராஷ்டிரத்திலிருந்து குஜராத் பிரிக்கப்பட்டாலும் ‘மும்பை சமாச்சார்’ இதழின் வாசகர் வட்டம் குறையவில்லை.
- 1930-களின் தொடக்கத்தில் அந்த இதழ் பொருளாதாரரீதியில் தள்ளாட ஆரம்பித்தது. அந்த இதழுக்கு மை, காகிதம் போன்றவற்றை வழங்கிவந்த காமா நார்ட்டன் அண்டு கோ தங்களுக்கு நிலுவைத் தொகையை ‘மும்பை சமாச்சார்’ இதழ் வெகு நாட்களாக வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
- காமா நார்ட்டன் அண்டு கோவுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. அதே நேரத்தில், ‘மும்பை சமாச்சார்’ இதழின் ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற எண்ணத்தில், நீதிமன்றமானது காமா நார்ட்டன் அண்டு கோ நிறுவனத்தையே அந்த இதழை எடுத்துக் கொள்ளும் படி கேட்டுக்கொண்டது. அதன்படி, 1933-ல் அந்த இதழ் காமா குடும்பத்திடம் வந்து சேர்ந்தது.
- மும்பை ஃபோர்ட் பகுதியின் ஹார்னிமன் சர்க்கிளில் இருக்கும் பழமை மாறாத சிவப்புக் கட்டிடம் தான் ‘மும்பை சமாச்சார்’ இதழின் தலைமை அலுவலகம்.
- இந்திய சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தின்போது காந்தி, நேரு, பட்டேல் போன்ற பெருந்தலைவர்கள் அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து, தேநீர் அருந்தியபடி மஞ்சேர்ஜி காமாவுடன் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விவாதிப்பார்கள் என்று மஞ்சேர்ஜியின் பேரன் காமா நினைவுகூர்கிறார்.
- காந்திக்குத் தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை என்றாலும், தேநீர் அருந்துபவர்களுடன் அவர் உரையாடியிருக்கலாம்.
- இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவான ஒரு அணுகுமுறையை ‘மும்பை சமாச்சார்’ மேற்கொண்டிருந்தது என்று தெரியவருகிறது.
மும்பை சமாச்சார்
- 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தினந்தோறும் 15 ஆயிரம் பிரதிகள் விற்ற ‘மும்பை சமாச்சார்’, தற்போது சுமார் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பது என்பது அதன் வளர்ச்சியை உணர்த்துகிறது.
- 1990-கள் வரை மும்பையின் ஒரே குஜராத்தி நாளிதழாக ‘மும்பை சமாச்சார்’ இருந்து வந்தது. தற்போது மும்பையைத் தவிர நான்கு இடங்களில் அந்த இதழுக்கு அலுவலகங்கள் இருக்கின்றன.
- மொத்தம் 200 பேருக்கும் மேல் அந்த இதழில் பணிபுரிகின்றனர். கரோனா காலகட்டத்தின் இக்கட்டான நேரத்தில்கூட ஆட்குறைப்பு செய்யவில்லை என்று அந்த இதழின் உரிமையாளர்களுள் ஒருவரான காமா கூறுகிறார்.
- ஃபேஸ்புக், வாட்ஸப் வதந்திகளின், பொய்ச் செய்திகளின் காலம் இது. தகவல் பரவலை இந்த ஊடகங்கள் எளிதாக்கியதைப் போல தவறான தகவல்களின் பரவலுக்கும் அதனால் ஏற்படும் பெரும் சேதாரத்துக்கும் அவை காரணமாகியுள்ளன.
- இந்தச் சூழலில், உண்மையைத் தெரிந்துகொள்ள மக்கள் அச்சு இதழ்களைத்தான் நாட வேண்டியுள்ளது. இது போன்ற காலத்தில் ‘மும்பை சமாச்சார்’ இதழ் தனது 200-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பது மற்ற இதழ்களுக்கு, முக்கியமாகப் பிராந்திய மொழி இதழ்களுக்கு, ஊக்கம் தரும் செய்தியாகும்.
- இன்னும் பல நூறு ஆண்டுகள் காணட்டும் ‘மும்பை சமாச்சார்’.
நன்றி: இந்து தமிழ் திசை (04 - 07 – 2021)