‘வாலிபப் பெரியார்’ ஏ.வி.பி.ஆசைத்தம்பி
- திராவிடர் கழகத்திலிருந்து அறிஞர் அண்ணா வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கியபோது, அண்ணாவுடன் இருந்து கட்சியைத் தொடங்கிய மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி.
- விருதுநகரில் 24.09.1924 அன்று பழனியப்பன்-நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்தம்பி, மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்புக்கொண்டார். அவ்வியக்கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்துடன் படித்ததோடு, சுற்றுவட்டாரத்தில் இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்புஉணர்வு பெற்றார். 28.05.1944 அன்று பெரியார் தலைமையில் பரமேசுவரி அம்மாளைச் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்.
அரசியல் பயணம்:
- 1957இல் திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்களில், ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்தில் நுழைந்தார் ஆசைத்தம்பி. திமுக ஆட்சியைக் கைப்பற்றிய 1967 சட்டமன்றத் தேர்தலில் ஆசைத்தம்பி எழும்பூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி வெங்கடாசலத்தை எதிர்த்து நின்று மாபெரும் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்றார். அண்ணா மறைந்தவுடன் அரசுப் பொறுப்பேற்ற அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி, ஆசைத்தம்பிக்குச் சுற்றுலாத் துறை வாரியத்தின் தலைவர் பதவியை வழங்கினார்.
- அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது, ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் கடும் சித்ரவதைக்கு உள்ளானவர் ஆசைத்தம்பி. 1977 மக்களவைத் தேர்தலில் திமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக வட சென்னைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மாநில சுயாட்சி, பெண் கல்வி, தமிழ்மொழி வழி அர்ச்சனை ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், தீண்டாமைக் கொடுமை, இந்தித் திணிப்பு, பாலியல் தொழில் தடுப்பு போன்றவற்றுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் ஆசைத்தம்பி எழுப்பிய முழக்கங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
தீரம் மிக்க செயல்வீரர்:
- ‘தனி அரசு’ எனும் இதழினை முதலில் வார இதழாகவும் பின்னர் நாளிதழாகவும் நடத்தியவர். இந்த இதழ் அன்றைய தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1958 முதல் 1963 வரை ‘தனி அரசு’ நாளேட்டின் மூலம் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
- அன்றைய முன்னணி மேடைப்பேச்சாளர்களில் ஒருவர் ஆசைத்தம்பி. அவருடைய மேடைப் பேச்சு நிதானமாக, அழுத்தந்திருத்தமாக, ஆழ்ந்த பொருளில் கேட்போரைச் சிந்திக்கவைக்கும் வண்ணம் பெரியாரின் பேச்சுபாணியில் அமைந்ததால், அன்றைய சுயமரியாதை இயக்கத்தினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அவரை ‘வாலிபப் பெரியார்’ என அழைக்க, பின்னர் அதுவே அவரின் சிறப்புப் பெயராகவும் நிலைபெற்றது. சிறிது காலம் அண்ணாவிடமிருந்து விலகியிருந்தாலும் கட்சி அமைப்புக்குள்ளாகவே செயல்பட்டார்.
- இவர் 24 கதை நூல்களும், 14 வரலாற்று நூல்களும் எழுதியுள்ளார். ‘காந்தியார் சாந்தியடைய’ எனும் நூல் எழுதியமைக்கு காங்கிரஸ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக வரலாற்றில் நூல் எழுதியதற்காக முதன்முதலில் சிறைத் தண்டனை பெற்ற வரலாற்றுப் பெருமை உடையவர். 2007ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, ஆசைத்தம்பியின் நூல்களைச் சட்டமன்றத்தில் நாட்டுடைமை ஆக்கி அறிவித்தார்.
- தமிழினத்தின் சிறப்பைக் கடல்கடந்து பரப்பிட அந்தமான் சென்ற ஆசைத்தம்பி, தலையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் வெடிப்பு காரணமாக 07.04.1979 அன்று அங்கேயே காலமானார்.
- 24.09.2024: ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2024)