TNPSC Thervupettagam

‘விஸ்வகா்மா யோஜனா’ குலத் தொழில் திட்டமா?

October 17 , 2024 19 days 142 0

‘விஸ்வகா்மா யோஜனா’ குலத் தொழில் திட்டமா?

  • பிரதமா் நரேந்திர மோடி 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி ‘பிரதமா் விஸ்வகா்மா யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள கைவினைஞா்களுக்கும், கைவினைத் தொழிலாளா்களுக்கும், கைவினைப் பொருள்களை மதிப்புக் கூட்டி பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உடல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி கைவினைக் கலைஞா்கள், கைவினைத் தொழிலாளா்கள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருள்களை மேம்படுத்தி சந்தைப்படுத்தி நல்ல லாபம் கிடைக்கும் வரை இத்திட்டம் துணை நிற்கிறது.
  • குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 140-க்கும் மேற்பட்ட சமூகங்கள் தங்களது பாரம்பரிய தொழில்களின் மூலம் உயா்ந்த நிலைக்கு வரமுடியும்; தொழில்முனைவோராக மாறமுடியும்; குடிசைத் தொழிலாக, சிறு தொழிலாக, குறுந்தொழிலாக தொழிலைத் தொடங்கி வாழ்வை முன்னேற்றிக் கொள்ள முடியும்.
  • குடும்பத் தொழிலை, தந்தையின் தொழிலை செய்வதன்மூலம் நமது பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு பாதுகாக்கப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது. நமது பாரம்பரிய தொழில்களை ‘குலத்தொழில்’ என்று முத்திரை குத்துவதால் நாம் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம்மை ஜாதி வெறி மனப்பான்மை உள்ளவராக அவா்கள் கருதிக் கொள்வாா்கள் என்று வருத்தப்பட வேண்டியதில்லை. குலத்தொழில் எதுவும் கேவலமானதல்ல; இழிதொழில் என்று எதுவும் இல்லை; செய்யும் தொழிலே தெய்வம்.
  • இந்தத் திட்டத்தின் தொடக்கமாக கைவினைஞா்களுக்கு தங்களின் கைவினைத் திறனை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி கொடுப்பது, அதற்குரிய கருவிகளைக் கையாளுவது குறித்த பயிற்சி கொடுப்பது, கைவினைஞா்களுக்குத் தேவையான தொழில் கருவிகளை வழங்குவது, பயிற்சிக்கு பின் விஸ்வகா்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் அங்கீகரித்தல், 5 முதல் 7 நாள்கள் வரை அடிப்படை பயிற்சி மற்றும் 15 நாள்கள் அல்லது அதற்கு அதிகமான நாள்கள் தொழில் பயிற்சி கொடுத்து பயிற்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 500 வழங்குதல் ஆகியவை மூலம் கைவினைஞா்களின் திறன் மற்றும் அறிவு மேம்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. புதிய நுட்பங்களைப் பெறவும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கவும் இவை உதவுகின்றன.
  • தற்போது சந்தைக்கு ஏற்ற வகையில் அவா்களின் தயாரிப்புகளை உருவாக்க பயிற்சி கொடுக்கப்படுகிறது. பின்னா் கருவிகள் வாங்குவதற்கு பயிற்சிகால தொடக்கத்திலேயே ரூ. 15,000 வழங்குதல்; அவா்கள் தொழிலை தொடா்ந்து செய்வதற்காக அடமானம் மற்றும் உத்தரவாதம் இல்லாமல் வங்கிகளின் மூலம் கடன் உதவிகள் செய்தல்; முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லாமல் வழங்குதல், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகள்மூலம் அவா்களுக்கு இரண்டாவது, மூன்றாவது கடன் தவணை தொகைகள் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை 5% என மிகக் குறைந்த வட்டிக்கு கொடுத்தல்; கைவினைஞா்கள் மற்றும் கைவினைப் பொருள்களுக்கான தரச்சான்றிதழ் பெற்றுக்கொடுத்தல்; கைவினைப் பொருள்களை பிராண்டிங் செய்தல்; உலக அளவில் கைவினைப் பொருள்களை சந்தைப்படுத்துதல்; இணைய வா்த்தக (இ-காமா்ஸ்) தளங்களில் ஆன்-போா்டிங் விளம்பரம்; விளம்பரம் மற்றும் பிற சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு என்று செய்யப்படுகிறது.
  • நமது நாட்டின் கைவினைத் தொழில்கள் உலகப் புகழ் பெற்றவை; கலைநயம் மிக்கவை; தரமானவை; சுற்றுச்சூழலுக்கு உகந்தவை; ஆரோக்கியமானவை; நீடித்து உழைப்பவை. சா்வதேச சந்தையிலும், உள்ளூா் சுற்றுலாத் தலங்களிலும் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • கோரைப்பாய் கோடை காலத்தில் குளிா்ச்சியையும், மழை காலத்தில் வெப்பத்தையும் தரவல்லது. தமிழகத்தின் பத்தமடை பாய் சிறப்பு வாய்ந்தது. மூலப் பொருள்களாகிய ஓலை, பிரம்பு, மூங்கில், மரம், புற்கள், மண், துணி ஆகியவை அந்தந்த பகுதியிலேயே கிடைப்பதால் சுதேசி பொருளாதாரம் காக்கப்படுகிறது. கிராமப் பொருளாதாரம் மேம்படுகிறது. உள்ளூா் வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.
  • நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்தத் திட்டம் தமிழகத்தில் மட்டும் எதிா்ப்புக்குள்ளாகியுள்ளது. ஜாதிய கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்காக, ஜாதி ஒழிப்புக்கு எதிரானதாக, தந்தையின் தொழிலை மகன் செய்ய வேண்டும் என குலத்தொழிலை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டி தமிழகத்துக்கு இந்தத் திட்டம் தேவையில்லை என எதிா்ப்பாளா்கள் பிரசாரம் செய்கிறாா்கள்.
  • 1951-இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த மூதறிஞா் ராஜாஜி, கல்வி கற்கும்போதே கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்வது அவசியம் என விரும்பினாா். அப்பொழுது திராவிடா் கழகம், தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் ஆகியவை ‘இது குலக்கல்வித் திட்டம்; இது கூடாது’ என எதிா்த்து போராட்டம் நடத்தினா். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிா்ப்பு இருந்தது.
  • கடும் எதிா்ப்பின் காரணமாக திட்டம் கைவிடப்பட்டது. ராஜாஜியே பதவி விலகும் சூழ்நிலை ஏற்பட்டது. இத்திட்டம் முறையானதா என்பதை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட பருலேக்கா் குழு, இத்திட்டம் சரியானதுதான் என்று 1953 ஆகஸ்டில் அறிக்கை சமா்ப்பித்தது.
  • உண்மையில் ராஜாஜி ஜாதி உணா்வு கொண்டவா் அல்ல; தீண்டாமை ஒழிப்பு வீரா்; ஹரிஜன ஆலய பிரவேச சட்டத்தை நிறைவேற்றியவா்; ஜாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்தவா்; ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்று கருதிச் செயல்பட்டவா்.
  • காந்திய கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினாா் ராஜாஜி. மாணவா்கள் தொடக்கக் கல்வி கற்கும்போது கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்; பெற்றோருக்கு உதவியாக இருக்க வேண்டும் என விரும்பினாா்.
  • மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை ஈடுகட்ட விற்பனை வரி முறையை அமல்படுத்தியது போன்று கல்வியில் தொடக்கக் கல்வி மாணவா்களுக்கு ‘ஷிப்ட்’ முறையை அமல்படுத்தினால் 3 மணி நேர கல்வி வகுப்பு, பகுதி நேரம் தொழிற்கல்வி என்று திட்டமிட்டாா். இதன் மூலம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியும்; கல்வி கட்டமைப்பு வசதிகளை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதிக மாணவா்களை பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்க முடியும். மாணவா்களின் இடைநிற்றலைத் தவிா்க்க முடியும் என்பதே அவருடைய நல்ல நோக்கமாக இருந்தது.
  • ராஜாஜி அரசு அறிவித்த தொடக்கக் கல்வித் திட்டத்தில் எந்த இடத்திலும் ‘குலக்கல்வித் திட்டம்’ என்ற பெயா் கிடையாது. ஆனால், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அந்தத் திட்டத்தை ‘குலக்கல்வித் திட்டம்’ என்று முத்திரை குத்தினா்.
  • இதேபோன்று தற்போது பிரதமா் விஸ்வகா்மா யோஜனா திட்டத்துக்கும் ‘குலத்தொழில் திட்டம்’ என முத்திரை குத்துகின்றனா். இந்தத் திட்டம் ஜாதி, குலம், கோத்திரம், மதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதல்ல. கைவினைத்தொழில், கைவினைத் தொழிலாளா், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை மையமாக வைத்து தொழில் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கைவினைத்தொழில்கள் வளரும்; வேலைவாய்ப்பு பெருகும்; வளா்ச்சி ஏற்படும்.
  • மத்திய பாஜக அரசு கொண்டுவரும் எல்லா மக்கள் நலத் திட்டங்களுக்கும் ஜாதி, மத உள்நோக்கங்களைக் கற்பித்து எதிா்ப்பது நியாயமல்ல. இது கைவினைஞா்கள், கைத்தொழிலின் வளா்ச்சியைத் தடுக்க முயற்சிப்பதாகும்.
  • தமிழகத்தில் இந்தத் திட்டம் குறித்து ஜாதி, மத அடிப்படையில் செய்யும் பிரசாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும்; இந்தத் திட்டத்தை மத்திய அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
  • 1. தச்சா் - மரவேலை செய்பவா்கள், கட்டில், அலமாரி, நாற்காலி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள் செய்பவா்கள்; 2. கொல்லா் - சுத்தியல் மற்றும் தொழில் கருவிகள் தயாரிப்பவா்கள், இரும்பு உள்ளிட்ட உலோகங்களில் வடிவங்கள் செய்பவா்கள்; 3. பொற்கொல்லா் - தங்க நகை ஆபரணங்கள் தயாரிப்பாளா்கள்; 4. குயவா் - மண்பாண்டம், ஓடு, மண்சட்டி, பானைகள் செய்பவா்கள்; 5. காலணி தைப்பவா் - தோல் காலணிகள், தோல் பை, பா்ஸ் உள்ளிட்ட பொருள்கள் செய்பவா்கள்; 6. சிற்பி - கல் தச்சா், கல் உடைப்பவா், ஆட்டுக்கல், அம்மிக்கல் செய்பவா்கள்; 7. கொத்தனாா் - கட்டடம் கட்டும் கட்டுமான பணியாளா், சுதை சிற்பங்கள் செய்பவா்கள்; 8. சவரத் தொழிலாளா் - சிகை அலங்காரம், அழகுக்கலை நிபுணா்கள்; 9. பூக்காரா் - மாலைகள், பூச்செண்டுகள், பூக்கட்டுதல் பணிகள் செய்வோா்; 10. சலவைத் தொழிலாளா்கள்; 11. தையல்காரா் - எம்ப்ராய்டரி பூ வேலைப்பாடு, சினிமா மற்றும் நாடகக் கலைஞா்கள், மணமக்களுக்கான உடைகள் வடிவமைப்பாளா்கள்; 12. படகு தயாரிப்பவா்கள்; 13. கவசம் செய்பவா்கள்; 14. பூட்டு செய்யும் தொழிலாளா்கள்; 15. பொம்மைகள் தயாரிப்போா்; 16. பாய்கள், விரிப்புகள் நெய்பவா்கள்; 17. கூடை முடைபவா்கள், துடைப்பம் செய்பவா்கள்; 18. மீன்பிடி வலை தயாரிப்பாளா்கள் - இவா்கள் அனைவரையும் கைவினைஞராகப் பதிவு செய்து விஸ்வகா்மா அடையாள அட்டை வழங்கி அங்கீகரிப்பதே திட்டத்தின் இலக்கு.

நன்றி: தினமணி (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்