மேல் துண்டும் பிரியாணி விருந்தும்
- இஸ்லாமியர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது அவர்களிடத்தில் கூடுதல் அன்னியோன்னியமாக நடந்துகொள்வார் அண்ணா. தேசப் பிரிவினைக்குப் பின் இஸ்லாமியர்களைப் பொதுவெளியில் தனித்து ஒதுக்கும் போக்கு நாடு முழுக்க இருந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டிலும் அது கொஞ்சம் பிரதிபலித்தது. அப்போது முதலில் அவர்களை அரவணைத்துத் தோளோடு தோள் நின்றவர் அண்ணா. “காலங்காலமா மாமன் மச்சானா வாழ்றவங்க நாம. யாரும் நமக்குள்ளே பிளவைக் கொண்டுவர முடியாது” என்பவர் மிகுந்த உரிமையோடும் அவர்கள் மத்தியில் பழகுவார். “இஸ்லாமிய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர் அண்ணா. குறிப்பாக, பிரியாணியும் சிக்கன் பொரியலும். நாங்கள் தயாரித்துவைத்த உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு, தனது மேல் சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு, தரையில் அமர்ந்து ஒரு துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு சொந்த வீட்டில் சாப்பிடுவதுபோல உட்கார்ந்து உரிமையுடன் சாப்பிடுவார். கொண்டுவந்திருக்கிற வேட்டி ரொம்ப அழுக்காகிவிட்டது என்றால், நம் வீட்டில் உள்ள துவைத்த வேட்டியை, அது பழையதாக இருந்தாலும்கூடத் தயங்காமல் கட்டிக்கொண்டு மேடையேறிவிடுவார்” என்று சினிமா தயாரிப்பாளர் எஸ்.எம்.உமர் பதிவுசெய்திருக்கிறார்.
“இன்னொரு தமிழன் காமராஜர் நிலைக்கு வர ஆயிரம் ஆண்டுகள் ஆகும்!”
- 1967 தேர்தல் முடிவு வெளிவந்தவண்ணம் இருக்கிறது. நுங்கம்பாக்கத்திலுள்ள அண்ணாவின் வீட்டிலோ பெரும் குதூகலம். விருதுநகரில் காமராஜரை, திமுக வேட்பாளர் சீனிவாசன் தோற்கடித்துவிட்டார் என்ற தகவல் வரும்போது கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அண்ணா கடும் கோபத்தோடு வெளியே வருகிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக் கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் அவர் இருந்த இடத்துக்கு வருவதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்குரியது அல்ல. அது நம்முடைய தோல்வி” என்று சொல்லிவிட்டு அறைக்குள் செல்கிறார். காமராஜரை வெற்றி கண்ட விருதுநகர் சீனிவாசன் வருகிறார் அண்ணாவிடம் வாழ்த்து பெற. மொழிப் போரில் முன்னின்ற மாணவர் தலைவர் அவர். அண்ணா அவரிடம் சொல்கிறார், “வாழ்த்துகள் சீனிவாசா. தவறாக எண்ணாதே! உன்னுடைய வெற்றி தரும் மகிழ்ச்சியைவிட காமராஜரின் தோல்வி என்னை அதிகம் அழுத்துகிறது!”
வேலைக்குப் போ...
- பொறியியல் பட்டம் முடித்த கையோடு அரசியலில் ஈடுபடும் ஆசையோடு அண்ணாவைச் சந்தித்தார் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், 1959-ல். “அரசியல் உனக்கு இப்போது வேண்டாம். நன்கு படித்திருக்கிறாய். நீ வேலையில் சேர்ந்துவிடு. ஒருவேளை நாம் ஆட்சிக்கு வரும்போது, நிர்வாக அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படலாம். அப்போது அழைத்துக்கொள்கிறேன்” என்றார் அண்ணா. மின்வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ராமச்சந்திரன். 1967 தேர்தல் நேரத்தில், மீண்டும் அவர் அண்ணாவைச் சந்தித்தபோது, “வேலையை ராஜிநாமா செய்துவிடு” என்றார் அண்ணா. இயக்கத்தில் காலடி எடுத்துவைத்தார் ராமச்சந்திரன். அண்ணாவைப் பொறுத்த அளவில், அவர் ஒரு அரசியல்வாதியாகச் சிந்தித்ததைக் காட்டிலும், தலைவராகச் சிந்தித்ததே அதிகம். தன் நலனுக்காக அல்ல; சமூகத்தின் நலனுக்காகத் தொண்டர்களைப் பயன்படுத்திக்கொள்வதே அவரது குணமாக இருந்தது.
நன்றி: இந்து தமிழ் திசை (03-07-2019)