உலகின் அனைத்து மக்களுக்கும் குறைவில்லாமல் உணவு தருவது நாளுக்கு நாள் சவாலான வேலையாகிக்கொண்டிருக்கிறது.
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாறுதல்களாலும் நகர்மயமாதலின் வேகத்தில், விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு விற்கப்படுவதாலும் உணவு தானிய விளைச்சல்களில் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, வேளாண்மை அமைப்பு (யுஎன்எஃப்ஏஓ) இதைத் தெரிவிக்கிறது.
ஒருவர்கூடப் பட்டினி இல்லை என்ற நிலை ஏற்பட, உணவு விளைச்சல் கொள்கையையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்திப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது.
எல்லா நாடுகளிலுமே மக்கள்தொகை அதிகரித்து வருவதால், சத்துமிக்க உணவுப் பொருள்களை அதிகம் விளைவித்து, வாங்கக் கூடிய விலையில் அனைத்து மக்களுக்கும் அளிக்க வேண்டும்.
ஆனால், இயற்கை வளங்களோ சுருங்கிக்கொண்டிருக்கின்றன. தண்ணீர் வளம், சாகுபடிக்கேற்ற நிலப்பரப்பு, விளைச்சலை அதிகரிக்கச் செய்யக்கூடிய தட்ப-வெப்ப நிலை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்களால் உணவு தானியப் பற்றாக்குறை பெரும்பாலான நாடுகளில் நிலவுகிறது. கிடைக்கும் உணவையும் வாங்கிச் சாப்பிடும் நிலையில் பெரும்பாலான மக்கள் வசதியாக இல்லை.
பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலோ உள்நாட்டுக் கலவரங்கள், போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி இடம்பெயர்ந்து முகாம்களில் அடைபட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82 கோடி. ஐநாவின் உணவு-வேளாண் அமைப்பும் உணவுக் கொள்கை ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து தயாரித்த அறிக்கை இதைத் தெரிவிக்கிறது. உலக நாடுகள் முயன்றால், ஒருவர்கூடப் பட்டினியில்லை என்ற அளவுக்கு உணவு தானியங்களைச் சீராக வினியோகித்துவிட முடியும்.
போர்களும் ஒரு காரணம்
வாங்கக்கூடிய விலையில், சத்துள்ள ஆகாரம் கிடைப்பது கோடிக்கணக்கான மக்களுக்கு இயலாததாகவே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் வறுமை முதல் காரணமாக இருக்கிறது. இனக் கலவரம், மதக் கலவரம், அரசியல் மோதல்கள் காரணமாக வாழிடங்களைவிட்டு லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாவதால் நல்ல உணவு கிடைக்காமல் வலுவிழக்கின்றனர்.
சவூதி தலைமையிலான நாடுகளின் வான் தாக்குதலால் யேமன் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகளை விட்டு முகாம்களிலும் திறந்த வெளிகளிலும் அகதிகளாகத் தங்கியுள்ளனர். ‘குழந்தைகளைக் காப்போம்’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தகவல்கள்படி, ஐந்து வயதுக்குட்பட்ட 85,000 குழந்தைகள் உணவு கிடைக்காமல் பட்டினியாலும் நோய்களாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் இறந்துள்ளனர்.
வறட்சி மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆப்கானிஸ்தானில் 2,50,000 தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை தெரிவிக்கிறது.
பட்டினி, ஊட்டச்சத்துக் குறைவு காரணமாகப் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது மீண்டும் அதிகரித்துவிட்டது என்று எஃப்ஏஓ தலைமை இயக்குநர் ஜோஸ் கிராசியானோ ட சில்வா தெரிவிக்கிறார்.
பட்டினிகளுக்கு எதிராக உலக நாடுகள் இணைந்து போராடி, பல்வேறு முயற்சிகள் மூலம் பெரும்பாலானவர்களுக்கு உணவு அளித்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு ஏராளமானோர் தள்ளப்பட்டிருப்பது கவலையைத் தருகிறது என்று சில்வா வருந்துகிறார். 2013-ல் தேவைப்பட்ட உணவைப் போல 2050-ல் 150% தேவைப்படும் என்று எஃப்ஏஓ மதிப்பிட்டுள்ளது.
விலை உயரும் விளைநிலங்கள்
அதிக விளைச்சல்பெற சாகுபடிப் பரப்பையும் அதிகரிப்பது ஒரு உத்தி. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் விவசாயம் செய்யக்கூடிய நிலங்களின் அளவு உச்சத்தை எட்டிவிட்டது. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இப்போது நகரங்கள் வளர்வதுடன் விவசாய நிலங்கள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் கட்டுவதற்காக அதிகம் விலையாகின்றன.
அப்படியே நிலம் கிடைத்தாலும் உணவு தானிய விளைச்சலைப் பெருக்கிக்கொண்டே போவதும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும். சீனத்தில் மட்டும் ஆண்டுதோறும் 20 கோடி டன் உணவு தானியம் கெட்டுப்போய் வீணாகிறது. இதன் மதிப்பு மட்டும் 260 கோடி டாலர்கள் என்று ஐநா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மண் அரிப்பு, நிலம்-நீர்-காற்று-கடல் மாசுபடுவது அதிகரிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டால் சூழல் பாதிப்படைவது, பூச்சிக்கொல்லிகள் – ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரிப்பு, பல்லுயிரிகளின் இழப்பு ஆகியவையும் உணவு தானிய உற்பத்தி பெருகாமல் தடைகளாகத் திகழ்கின்றன.