TNPSC Thervupettagam

அறிவியல் மக்களுக்கானது...

February 28 , 2019 2096 days 1369 0
  • திருச்சி, திருவானைக்காவில் பிறந்து திசையெங்கும் அறியப்படும் அறிவியல் அறிஞர் சர் சி.வி. ராமன்.
  • இவரது முழுப் பெயர் சந்திரசேகர வெங்கடராமன். தனது ஆராய்ச்சியின் காரணமாக சர் பட்டம் பெற்று, சர் சி.வி.ராமன் என அழைக்கப்பட்டார்.
  • 1888-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி சந்திரசேகர் ஐயர்,  பார்வதி அம்மையார் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.
  • இவருடைய தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் ஆரம்பக் கல்வியை விசாகப்பட்டினத்தில் பயின்றார்.
  • சந்திரசேகர் ஐயர் கணிதத்திலும் புலமை பெற்றவர் என்பதால், இல்லத்திலேயே இயற்பியல், கணிதம், இலக்கியம், சங்கீதம் உள்ளிட்ட சூழலுடன் வளரத் தொடங்கினார் சர் சி.வி. ராமன்.
  • தந்தையின் புத்தக அலமாரியில் இருந்த தரணி போற்றும் அறிவியல் அறிஞர்களின் புத்தகங்களை வாசிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார்.
  • சென்னை மாநிலக் கல்லூரியில் 1904-இல் பி.ஏ. பட்டப்படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தார்.
  • முதுநிலை பட்டப் படிப்பையும் இதே கல்லூரியில் தொடர்ந்தார்.
  • 1907-ஆம் ஆண்டு ஜனவரியில் எம்.ஏ. பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
  • 1907-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித் துறை தேர்வு எழுதி அதிலும் முதலிடம் பிடித்தார்.
  • 1907-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறையில் தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • பணி நிமித்தம் இந்த வேலையில் சேர்ந்தாலும்,  தனது உள்ளக் கிடக்கை முழுவதும் இயற்பியலிலேயே இருந்ததால், கொல்கத்தாவில் செயல்பட்டு வந்த இந்திய விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து அறிஞர்கள் பலரின் அறிமுகத்தைப் பெற்றார்.
  • அந்த நேரத்தில் ரங்கூனுக்கு பணியிட மாற்றம் வந்ததால் கட்டாயத்தின்பேரில், 1910-ஆம் ஆண்டு ரங்கூன் சென்று பணிபுரியத் தொடங்கினார்.
  • பின்னர், அக்கவுண்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று கொல்கத்தாவுக்குத் திரும்பியதால், விட்டுப்போன விஞ்ஞான அபிவிருத்தி சங்கத் தொடர்பையும் மன மகிழ்வுடன்  புதுப்பித்துக் கொண்டார்.
  • இந்தத் தருணத்தில் கொல்கத்தா சர்வகலா சாலையில் விஞ்ஞானக் கல்லூரி தொடங்கப்பட்டதால்,  தனது அக்கவுண்ட் ஜெனரல் பதவியிலிருந்து விலகி, விஞ்ஞானக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
  • இதன் பிறகு, பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு, பல நாடுகளுக்கும் சென்று, பல்வேறு அறிஞர்களின் நட்பைப் பெற்றார். 1926-இல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் என்னும் அறிவியல் இதழை நிறுவி, அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.
  • இந்திய அறிவியல் அறிவுக் கழகத்தைத் தொடங்கி தலைவராகவும் பணிபுரிந்தார். இதன் மூலம், நடப்பு அறிவியல் எனும் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.
  • 1924-இல் லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் பட்டம், 1929-இல் பிரிட்டிஷ் அரசின் நைட் ஹூட் பட்டம், 1929-இல் இங்கிலாந்து அரசியால் சர் பட்டம், 1935-இல் மைசூர் அரசரால் ராஜ்சபாபூசன் பட்டம், 1954-இல் பாரத ரத்னா விருது, 1957-இல் உலக லெனின் பரிசு என பல்வேறு பட்டங்கள், விருதுகளைப் பெற்றிருந்தாலும் இன்றளவும் சர் சி.வி.ராமன் என்ற பெயரை பார் போற்றச் செய்திருப்பது ராமன் விளைவே.
  • இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வு செய்து, நோபல் பரிசு பெற்றதாக அறிந்து, அவை கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்குச் சாத்தியம் உண்டா என மாற்றுச் சிந்தனையில் யோசித்தார்.
  • அதே சிந்தனையுடன் நம்பிக்கையோடு ஆய்வுகள் மேற்கொண்டதன் பலனாகக் கிட்டியதே ராமன் விளைவு.
  • திரவப் பொருள்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச் சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களுடன் கூடிய புதிய நிறக் கதிர்கள் தோன்றுகின்றன.
  • ஒளி ஊடுருவும் தன்மைக்கேற்ப ஏற்படும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகத் தோன்றுகிறது எனக் கண்டறிந்தார்.
  • இந்த கண்டுபிடிப்பு பிப்ரவரி 28-ஆம் தேதி நிகழ்ந்தது. 1930-இல் இதற்கு நோபல் பரிசும் பெற்றார்.
  • ஆங்கிலேய அரசு, இவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சித்தது.
  • அஞ்சல் வழி கடிதங்களைத் தடுத்தது. எனினும், ஒரு கடிதம் ராமனின் கைக்குக் கிட்டியது.
  • அப்போது, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பேசக் கூடாது என்ற கட்டளையுடனே நோபல் பரிசு பெற அனுமதித்தது ஆங்கிலேய அரசு.
  • ஆனால் பரிசு பெறச் சென்றவர், ஆங்கிலேயரின் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடும் வீரர்களுக்கு தனது நோபல் பரிசை சமர்ப்பணம் செய்கிறேன் என சிம்மக் குரலில் கர்ஜித்தார்.
  • இந்தக் கண்டுபிடிப்பின் விளைவாக சிலிகான் சில்லுகள், டிரான்சிஸ்டர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் அவை இடம்பெறும் மின்னணுக் கருவிகளின் பரிமாணங்களைக் குறைக்கவும் முடியும்.
  • மேலும், இந்த விளைவைப் பயன்படுத்தி உயிருள்ள திசுக்களைப் பகுப்பாய்வு செய்யலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
  • புறத்தோல் நோய் அறிதல், தோலின் ஊடாக மருந்து பொருள்களை உள் செலுத்துதல், புற்றுநோய் கண்டறிதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு மற்றும் நோய் அறிதல், மூட்டு வாதம் மற்றும் எலும்புச் சிதைவு ஆய்வு, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதலை அளவிடல் ஆகியவற்றுக்கும் ராமன் விளைவே சிறந்த பயன்பாடாக அமைந்துள்ளது என்கின்றனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த நாளான பிப்ரவரி 28-ஆம் தேதியைத்தான் நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
  • 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தினத்தை அறிவியல் மக்களுக்கானது, மக்கள் அறிவியலுக்கானவர்கள் என்ற கருப்பொருளுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தக் கருப் பொருளை நாளைய விஞ்ஞானிகளான இன்றைய மாணவர்களிடம் கொண்டு சேர்க்க சபதமேற்போம்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்