TNPSC Thervupettagam

அறிவுத் தலைமை வகுப்பதே சாத்திரம்!

June 28 , 2019 2024 days 1066 0
  • வட இந்தியாவில் சிராவத்தி என்ற பட்டணத்துக்கு அருகில் ஒரு குக்கிராமம். ஒரு கோடைக்காலத்தில் கானல் நீர் சுட்டெரிக்கும் மண் தரை, சூரியனையே போட்டிக்கு அழைப்பது போல் இருந்ததாம். அங்கு ஓர் ஒற்றை ஆல மரத்தில் பறவைகள் தொண்டை வறண்டு பாட இயலாமல் இளைப்பாறுகின்றன. வான்பருந்துகூட வெயிலில் பறந்தால் இறக்கைகள் எரிந்து கரிந்து போகும் என்று அஞ்சி மரக்கிளையில் தஞ்சம் புகுந்தது. ஆயாசத்துடன் அவ்வழியே நடந்துவந்த ஆனந்தன் என்கிற புத்த பிக்கு அந்த மர நிழலில் அமர்கிறார். பக்கத்தில் ஒரு பாழுங்கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், தாயே, கொஞ்சம் தண்ணீர் அருள்வாயா? என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி, என் கையால் நீர் அருந்துவீரோ? ஐயா, நான் சண்டாலி, தாழ்ந்த ஜாதியினள் என்கிறாள். அம்மணி, உன் ஜாதியைக் கேட்கவில்லையே. குடிக்கத் தண்ணீர் அல்லவா கேட்டேன் என்கிறார் புத்த சன்னியாசி. மகாகவி பாரதியினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீ நாராயண குருவின் தலைமைச் சீடர் மலையாள மகாகவி குமாரன் ஆசான் இயற்றிய சண்டாலப் பிக்குணி காவியத்தில் வரும் காட்சி இது. ஸ் 2019-ஆம் ஆண்டை, சர்வதேச தனிமங்கள் அட்டவணை ஆண்டாக யுனெஸ்கோ  நிறுவனம் அறிவித்துள்ளது. தனிமங்களில் முதலாவதான ஹைட்ரஜனின் இரண்டு அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணுவுடன் கூடிப் பிறப்பதுதான் ஹைட்ரஜன் ஆக்சைடு ஆகிய தண்ணீர்.  இந்தத் தண்ணீர் உட்பட வேறு எந்தப் பொருளும் பூமியில் இருந்து வெளியேறி, அண்டவெளிக்குள் காணாமல் போவது இல்லை. பூமித் தண்ணீர் அளவு மாறாதது. பொருள்கள் உருமாறலாம், அழிவது இல்லை என்பது அறிவியல் தத்துவம். அப்புறம் ஏன் இந்தப் பற்றாக்குறை, தட்டுப்பாடு எல்லாம் என்றுதானே கேட்கிறீர்கள்?
தண்ணீர் 
  • இந்தப் பூமியின் தண்ணீர் பல்வேறு வடிவங்களில் இங்கேதான் இருக்கிறது. பனிக்கட்டி, தண்ணீர், நீராவி என்றும், புறமண்டலத்தின் 500 கி.மீ. உயரங்களில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அயனிகள் ஆகவும், ஆற்றல் மூலம் ஆகவும் எல்லாம் இது பஞ்ச பூதங்களின் அவதாரம் எடுக்கும்.
  • அண்ணாந்து பார்த்தால் பூமியைத் தவிர செவ்வாய்க் கிரகம், வியாழன் கோளின் பனி உறைந்த யூரோப்பா, கனிமெடி ஆகிய சந்திரன்கள், சனி மண்டலத்தின் பனிப் படலங்கள் மிகுந்த என்கெதாஸ் சந்திரன் எங்கும் பனி சமுத்திரங்கள் தென்படுகின்றன. நமது அண்டை உலகமான சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கித் தண்ணீரைத் தேட, சந்திராயன் ஊர்தி தயாராகி வருகிறது. இவை எல்லாம் எதிர்கால விண்வெளி முகாம்களுக்கான ஒத்திகைப் பயணங்கள்.
தக்காண பீடபூமி
  • பூமிக்கு வருவோம். வடக்கில் இருந்து மொழியை மட்டும் அல்ல, உருகிய பனியையும் குழாய் வழி தெற்கே கொண்டு சேர்க்கலாம். ஆனால், இயக்கிகள் வழிதான் மேலேற்ற வேண்டும். தக்காண பீடபூமி மேட்டில் தண்ணீர் தானாக ஏறாது. விந்திய மலைக்கு அப்பால் கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ அரை கி.மீ. உயர்ந்த பகுதி அல்லவா? முன்னொரு காலத்தில் இதனைச் சமனப்படுத்த தெற்கே வந்த தமிழ் முனிவர் அகத்தியராலும் சரிக்கட்ட இயலவில்லை.  குடகு மலையில் காக்காய் கவிழ்த்த அவரது கமண்டலத் தண்ணீரே இங்கு வராமல் வாரியத்தில் முறையிட்டுத் தேங்கி நிற்கிறது. புவியும் மனித உடலும் ஒருவகையில் ஒரே மாதிரிதான். இரண்டிலுமே முக்கால் பாகம் தண்ணீர்தான். பூமிப் பந்தின் புறப்பரப்பில் 71 சதவீதம் தண்ணீர் நிறைந்திருக்கிறது. சமுத்திரங்களின் மொத்தக் கொள்ளளவு 145 லட்சம் கோடி லிட்டர்கள். எனவே, கடல் நீரைக் குடிநீராக்குவது சுலபம்.
  • பன்னாட்டு உப்பு நீக்கிக் கழகக் கணக்கெடுப்பின்படி, உலகெங்கும் 18,426 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு நாளில் 30 கோடி மக்களுக்குப் போதுமான சராசரி 8,700 கோடி லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கின்றன. சவூதி அரேபியாவில் ராஸ் அல்-கைர் திட்டத்தில் மட்டும் உச்சபட்ச அளவாகக் கடல் நீரில் இருந்து தினமும் 100 கோடி லிட்டர்கள் பெறப்படுகிறது. ஆனால், இதில் பக்க விளைவு எதிர்பார்த்ததைவிட அதிகம் என்கின்றனர். ஒரு லிட்டர் கடல் நீரிலிருந்து 35 கிராம் வீதம் உப்புகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
  • அவற்றை மேலாண்மை செய்யவும் மறுசுழற்சியில் வேறு பயன்பாடுகளுக்குக் கையாளவும் கற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் அவற்றைக் கடலில் கொட்டுவதானால், அதிகபட்சம் நாள்தோறும் 35 டன்கள் மீண்டும் கடலில் கலக்கும். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.
  • காற்றில் ஈரப்பதம் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத நிறைகுடம் வளிமண்டலம்தான். மொத்தக் கடல் நீரில் பத்தில் ஒரு பங்கு (சராசரி 1300 கோடி கோடி லிட்டர்கள்) நீராவி கலந்துள்ளது. சாதாரணக் காற்றில் அடங்கிய நீராவிக்கும், அதே காற்றில் இன்னும் எவ்வளவு நீராவி நிறைந்திருந்தால் பனித்துளிகள் வெளிப்படுமோ, அதன் அடிப்படையிலான  ஒப்பு விகிதமே ஈரப்பத சதவீதம்.  அதன் அளவு சென்னை (76%), புதுச்சேரி (96%), கொச்சி (33%), ராஜஸ்தான் (44%); இப்படி, கடற்கரைப் பிரதேசம், நிலப்பரப்பின் உள்பகுதி என இடத்திற்கு இடம்சிறிதளவு ஈரப்பத விகிதம் வேறுபடும். வளிமண்டலத்தில் கூடுதலான ஈரப்பதம்  தங்கி, அது குளிரத் தொடங்கினால் மட்டுமே மழை பொழியும். 51 கோடி சதுர கி.மீ. பூமிப்பரப்பின் ஓர் அறைக்குள் கொஞ்சம் தூபம் போட்டால், அந்தப் புகை 5 கி.மீ. உயரத்திற்குப் போய் எப்படி மழையைத் தூண்டுவிக்குமோ? அதிலும் தவளைக்கு திருமணம் நடத்தினால் வான்மழை  பொழிவது அறிவியல் ஆச்சரியம்.
இஸ்ரேலில்.....
  • குவளைக்கு வெளியே ஐஸ்கிரீமிலும், குளிர்காலப் புல்வெளியிலும், பனித்துளிகளாக தண்ணீர்த்துளிகள் உருண்டு திரண்டு வழிவதைப் பார்த்திருக்கிறோம். சாதாரண அறைக்குள் காற்றின் சராசரி அரை லிட்டர் தண்ணீர் இருக்கிறது என்றால் கேட்கவே தாகமாக இருக்கிறது அல்லவா? சராசரி வெப்பநிலையில் 60% ஈரப்பதம் கொண்ட காற்றில் இருந்து தினம் 3 லிட்டர் தண்ணீரைப் பிரித்து எடுக்கலாம் என்றால் கசக்குமா என்ன? காற்றிலிருந்து தண்ணீர் பிடித்துத் தரும் கருவி ஒன்றை இஸ்ரேலில் வாட்டர் - ஜென் என்ற நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2016 செப்டம்பர் மாதவாக்கில்இந்தக் காற்று நீராக்கி குறித்த முன்னறிவிப்பினை ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தில் அறிவித்தும் விட்டது. சிறிய காற்று நீராக்கிகள் தயாரிப்பிலும் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
  • தமிழகத்தைப் பொருத்தமட்டில் சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இத்தகைய முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. இதன் மின்செலவு கையைக் கடிக்காது. சூரிய மின்சாரமே போதும். இந்தக் கருவிக்கு நீரோ என்று பெயர். தற்போது இதனைச்  சந்தைப்படுத்துவதற்கு, தீர்த்தா என்ற தனியார் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும்கையெழுத்தாகியுள்ளது.
  • வறண்ட ஏரி, குளங்களை வாரிசுகளுக்கு பட்டா போடும்போது வர இருக்கும் இந்த ஆபத்துகளைப் பலரும் மறந்திருப்பார்கள். மழைக்காலங்களில் மனிதருக்குத் தெரிகிறதோ இல்லையோ, தண்ணீருக்கு நினைவாற்றல் அதிகம். தங்கள் ஏரிகளைத் தேடி குடியிருப்புகளில் நுழைகின்றன.
  • நாம் வீடுகளைக் காலி செய்துவிட்டு ஏரிகளில் நின்று கஷ்டப்படுகிறோம். மொட்டை மாடிகளில் ஏறி நின்று ஆகாயத்தை நோக்கிக் கையேந்துகிறோம்; மழைக்காக அல்ல, உணவுப் பொட்டலங்களுக்காக. சென்னையில் மட்டும் குறைந்தது 10,000 குடியிருப்புகள். அதாவது, 12.5 கோடி டன் கணக்கில் சிமிண்ட், ஜல்லி, மணல் ஆகிய கட்டுமானப் பொருள்களால் கட்டி வருகிறோம். போதாக்குறைக்கு குளிர்பதன சாதனங்கள் உமிழும் அனல் காற்று வேறு. இத்தனையும் எங்கோ அமைதியாக இருந்த காடுகளை இழந்த மலைகள், பாறைகள், சலசலத்து ஓடிய தண்ணீரைத் தாங்கிய ஆற்று மணல். அதுமட்டுமா, இந்தக் குடியிருப்பு வளாகங்களின் தரைப்பரப்பிலும் கான்கிரீட்டினால் தடுத்துப் பூசினால் தாய் மண்ணுக்குள் தண்ணீர் எப்படிப் போகும்?
  • இனியாவது, வெப்பத்தைப் பிரதிலிபலிக்கும் இத்தகைய புதிய கான்கிரீட் காடுகளைப்  புதுச் சென்னை என்ற பெயரில் வேறு இடங்களில் எழுப்பலாமே. இதில் இன்னொரு புள்ளிவிவரமும் முக்கியம். இந்தச் சிலிக்கேட்டுப் பொருளான கான்கிரீட் கெட்டி ஆவதற்கு சராசரி 40 சதவீதம் தண்ணீர் வேண்டும். அப்படியானால் ஒரு நகருக்கான கட்டடத்துக்கு 5 கோடி டன்கள் தண்ணீர் தேவை. இது கணக்கு. மனிதனின் இந்தக் கைங்கர்யம் அத்தனையும் காற்று மண்டலத்துக்கு தெரியாது. கடலுக்கும் தெரியாது. ஆனால், நாம் பருவ மழையைக் குற்றவாளியாக்கி வருகிறோம். அடுத்தத் தேர்தலில் இலவசக் குடிநீர்ப் பாட்டில்கள் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை . பணி ஓய்வே பெறாத அரசியல்வாதிகள் மரபணு பற்றியும், மாற்றுக் குடிநீர் பற்றியும் அறிவியல் பேசுவது இருக்கட்டும். இந்தியா 2020 என்ற நிலையினை எட்டும் போதாவது இளைஞர்களுக்கு வழிவிடுவோம். அப்துல் கலாம் சிந்தனையில் ஒன்றையேனும் கடைப்பிடிப்போம். புதிய தலைவர்கள், புதிய அதிகாரிகள், புதிய ஆத்மாக்களால் ஆன தங்க முக்கோணம் காண்போமே.

நன்றி: தினமணி (28-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்