TNPSC Thervupettagam

ஆர்க்டிக் குழுமம்

May 18 , 2019 1871 days 3882 0
  • பின்லாந்தின் ரொவானியேமியில் நடைபெற்ற ஆர்க்டிக் குழுமத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா மீண்டும் பார்வையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  • 2013 ஆம் ஆண்டில் மற்ற 5 நாடுகளுடன் சேர்த்து இந்தியாவிற்கு முதன்முதலில் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது.

 

ஆர்க்டிக் குழுமம்
  • 1996 ஆம் ஆண்டில் ஒட்டாவா பிரகடனத்தின் மூலம் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள 8 நாடுகளால் இணைந்து இந்த குழுமமானது உருவாக்கப்பட்டது.
  • கனடா, டென்மார்க் பேரரசு (கிரீன்லாந்து மற்றும் பாரோ தீவுகள் உட்பட), பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ரஷ்யக் கூட்டமைப்பு, ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகியோர் ஆர்க்டிக் குழுமத்தின் உறுப்பினர்களாவர்.

  • மேற்கண்ட நாடுகள் மட்டுமே இக்குழுமத்தின் நிரந்தர உறுப்பினர்கள் ஆவர்.
  • ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள பூர்வ குடிமக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அமைப்புகளுக்கு நிரந்தர பங்கேற்பாளர்கள் அந்தஸ்தை இக்குழுமம் வழங்கியுள்ளது.

  • எட்டு உறுப்பினர்களின் ஒருமனதாகப்பட்ட மற்றும் நிரந்தர பங்கேற்பாளர்களுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே அனைத்து முடிவுகளும் இதில் எடுக்கப்படுகின்றன.
  • ஐ. நா சபையின் அமைப்புகள் அல்லது வர்த்தக, இராணுவ அல்லது உலக வர்த்தக நிறுவனம், நேட்டோ மற்றும் ஆசியான் போன்ற பிராந்திய குழுக்களைப் போன்று இந்தக் குழுமமானது ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சர்வதேச அளவிலான சட்டப்பூர்வமான அமைப்பு அல்ல.
  • ஆர்க்டிக் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரே மன்றம் இதுவே ஆகும். இது ஒரு முறைசாரா குழுமம் ஆகும்.
  • குழுமத்தின் தலைவர் பொறுப்பானது  ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை சுழற்சி முறையில் மாறும். 2021 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள  அமைச்சரவைக் கூட்டம் வரை தற்போது தலைவராக உள்ள ஐஸ்லாந்து நாடு தலைமைப் பொறுப்பு வகிக்கும்.

 

நோக்கம்
  • ஆர்க்டிக் பகுதியின் இயற்கை சூழல், பல்லுயிர்த் தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் உள்நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாத்தலே ஆகியவையே ஆர்க்டிக் குழுமத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

 

பார்வையாளர் நாடுகள்
  • ஆர்க்டிக் பகுதியைச் சாராத நாடுகளுக்குப் பார்வையாளர் தகுதிநிலையானது அனுமதிக்கப் படும். இவை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்களில் உள்ள குழுவால் அங்கீகரிக்கப்படும்.
  • பார்வையாளர் தகுதிநிலை பெற்ற நாடுகளுக்கு இக்குழுமத்தில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
  • இந்தியா உள்ளிட்ட கீழ்க்காணும் 13 நாடுகள் இதில் பார்வையாளர் நாடுகளாக உள்ளன
  1. பிரான்ஸ்
  2. ஜெர்மனி
  3. இத்தாலியக் குடியரசு
  4. ஜப்பான்
  5. நெதர்லாந்து
  6. சீனா
  7. போலந்து
  8. இந்தியா
  9. கொரியா
  10. சிங்கப்பூர்
  11. ஸ்பெயின்
  12. சுவிட்சர்லாந்து
  13. ஐக்கியப் பேரரசு
  • ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் போன்ற 13 அரசுசார் மற்றும் நாடாளுமன்றங்களுக்கிடையேயான அமைப்புகளும் இதில் பார்வையாளர்களாக உள்ளன.
  • 12 அரசு சாரா நிறுவனங்களும் இதில் பார்வையாளர்களாக உள்ளன.

  • 2013 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் சேர்த்து சீனா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 5 நாடுகளுக்கும் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • இதற்கு முன்னதாக பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, ஸ்பெயின் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளுக்கு மட்டுமே பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
  • 2017 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்து பார்வையாளர் நாடாக இணைந்தது.
  • பார்வையாளர் நாடுகள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க முடியாது என்ற போதிலும் அனைத்துக் கூட்டங்களிலும் குறிப்பாக பணிக் குழு நிலைக் கூட்டங்களில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
  • ஆர்க்டிக் குழுமத்தின் நோக்கங்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள்/நாடுகளுக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்படுகின்றது.

 

ஆர்க்டிக் பகுதியில் இந்தியா
  • அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஆர்க்டிக் பகுதியில் நிரந்தர ஆய்வு மையத்தை அமைத்துள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • வளிமண்டல மற்றும் காலநிலை அறிவியல் தொடர்பான ஆய்வுகளை வேறு எங்கும் செய்ய முடியாத அளவிற்கு சில தனித்தன்மை வாய்ந்த வாய்ப்புகளை இந்த துருவப் பகுதிகள் வழங்குகின்றன.

 

ஹிமாத்ரி
  • 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட ஹிமாத்ரி ஆய்வு மையமானது வடதுருவத்திற்கு 1200 கி.மீ. தெற்கில் நார்வே நாட்டின் ஸ்வல்பார்டு பகுதியில் உள்ள நை அலெசண்ட் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
  • கோவாவை அடிப்படையாக கொண்ட அண்டார்ட்டிகா மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமானது இந்த மையத்தின் ஆய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முதன்மை அமைப்பாகும்.

  • ஹிமாத்ரியானது 1981 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் துருவ மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளும் இந்தியாவின் மூன்று தசாப்தங்களின் அனுபவங்களின் அடிப்படையில் உருவானதாகும்.

 

இந்தியா மற்றும் அண்டார்டிகா
  • 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தக்சிண கங்கோத்ரி ஆய்வு மையமானது அண்டார்டிகாவில் இந்தியாவால் தொடங்கப்பட்ட முதல் நிரந்தர ஆய்வு மையமாகும்.

  • மைத்ரி – 1989 ஆம் ஆண்டில் சிர்மார்செர் ஓயாசிஸில் இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆய்வு மையமாகும்.
    • மைத்ரியைச் சுற்றி பிரியதர்ஷினி எனும் நன்னீர் ஏரியை இந்தியாவானது உருவாக்கியுள்ளது.
  • பாரதி ஆய்வு மையமானது 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
    • இது லார்ஸ்மான் குன்றிற்கு அருகில் அமைந்துள்ளது.

 

பொருளாதாரப் பயன்கள்
  • ஆர்க்டிக் பகுதியானது சிலவகை தாதுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது.
  • புவி வெப்பமடைதலின் காரணமாக ஆர்க்டிக்கின் சில பகுதிகள் உருகியுள்ளன. எனவே இந்தப் பகுதிகள் தற்போதுள்ள பயண தூரங்களைக் குறைக்கக் கூடிய வகையில் புதிய கப்பல் பாதைகளை உருவாக்க சாத்தியமாக்குகின்றன.
  • ஆர்க்டிக் குழுமமானது அப்பகுதியில் உள்ள வளங்களை வணிக ரீதியில் எடுப்பதைத் தடை செய்யவில்லை.
  • ஆனால் இது உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதிக்காமல் உள்ளூர் சுற்றுச்சூழலுடன் ஒத்திசைந்த முறையில் நீடித்த தன்மையில் எடுக்கப் படுவதை மட்டுமே இக்குழுமம் உறுதி செய்ய விழைகிறது.

- - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்