TNPSC Thervupettagam

ஆறுதலளிக்கும் மாஸ்க்யூரிக்ஸ்!

April 26 , 2019 2039 days 1320 0
  • உலக சுகாதார நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை ஒட்டுமொத்த உலகத்துக்கே நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும், ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளிக்கிறது. தென்கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மலாவி என்கிற நாடு, கொசுக்களின் மூலம் பரவும் மலேரியா காய்ச்சலுக்கு எதிரான "மாஸ்க்யூரிக்ஸ்' என்கிற தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
மலாவி
  • மலாவியைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா, கானா ஆகிய இரண்டு நாடுகளும் விரைவிலேயே இந்தத் தடுப்பூசி திட்டத்தில் இணைய இருக்கின்றன. கொசுக்களால் பரவுகின்ற மலேரியாவுக்கு எதிரான இந்தத் தடுப்பூசி திட்டம், மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
  • 2018-ஆம் ஆண்டில் உலக மலேரியா அறிக்கையின்படி, ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியா தொற்றால் உயிரிழக்கிறார்கள். உலகளாவிய அளவில் குழந்தைகளின் மரணத்துக்கு மிக அதிகமான காரணமாக இருப்பது மலேரியாதான். ஆப்பிரிக்காதான் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டமாக இருக்கிறது. ஒவ்வோர் இரண்டு நிமிஷத்துக்கும் மலேரியாவால் ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு குழந்தை மரிக்கிறது என்றும், சில குழந்தைகள் ஒரே ஆண்டில் ஐந்தாறு முறை மலேரியாவால் பாதிக்கப்படுகின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஆப்பிரிக்காவை மட்டுமல்ல, ஆசிய கண்டத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் நோய்த்தொற்றாக மலேரியா காணப்படுகிறது. ஆசியாவில் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படும் மலேரியா தொற்று இந்தியாவுக்கும் பரவியிருக்கிறது. இதில் கவலையளிப்பது என்னவென்றால், மலேரியா நுண்ணுயிரி வழக்கமான மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டிருக்கிறது என்பதுதான். இந்த நிலை தொடர்ந்தால் மலேரியாவைக் கட்டுப்படுத்த வழியே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் மருத்துவ விஞ்ஞானிகள் செய்வதறியாது திகைத்துப் போயிருந்தனர். அந்த நிலையில்தான் இப்போது "மாஸ்க்யூரிக்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
குளோரோகுயின்
  • 80 ஆண்டுகளுக்கு முன்பு மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த "குளோரோகுயின்' என்கிற மருந்து வெற்றிகரமாகச் செயல்பட்டது. ஆனால் காலப்போக்கில் மலேரியா நுண்ணுயிரி, "குளோரோகுயினு'க்கு எதிர்ப்புச் சக்தியைப் பெறத் தொடங்கியது. "குளோரோகுயினால்' மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திகைத்தபோது, புராதன  சீன மருத்துவ முறையிலிருந்து "ஆர்ட்டிமிசினின்' என்கிற மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • மலேரியா நுண்ணுயிரி எதிர்ப்பு சக்தியை "ஆர்ட்டிமிசினினு'ம் பெறத் தொடங்கியபோது, மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அதிர்ந்து போய்விட்டார்கள். மலேரியாவைக் கட்டுப்படுத்த "ஆர்ட்டிமிசினினு'க்கு எந்தவித மாற்றும் இல்லாத நிலையில்தான், மருத்துவ ஆராய்ச்சி "மாஸ்க்யூரிக்ஸ்' என்கிற பெயரில் புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.
சர்வதேச அளவில்
  • சர்வதேச அளவிலான குழுவினர் கடந்த 30 ஆண்டுகளாக 50 கோடி டாலருக்கும் அதிகமான செலவில்  ஆராய்ச்சி செய்து இப்போது "மாஸ்க்யூரிக்ûஸ' கண்டுபிடித்திருக்கின்றனர். "மாஸ்க்யூரிக்ஸூ'ம் மலேரியாவை முழுமையாகக் கட்டுப்படுத்திவிடும் என்று கூறிவிட முடியாது. இந்த மருந்தை சோதனை முறையில் வழங்கிப் பார்த்தபோது, "மாஸ்க்யூரிக்ஸ்' வழங்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினரைத்தான் மலேரியா காய்ச்சலில் இருந்து கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், "மாஸ்க்யூரிக்ஸ்' வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மலேரியா காய்ச்சலின் கடுமை வெகுவாகவே குறைந்து காணப்பட்டது என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
  • மலேரியாவுக்கு முற்றிலும் சக்தி வாய்ந்த மாற்று மருந்தைக் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதால் அதுவரை உலகம் காத்திருக்க முடியாது. இப்போதைக்கு "மாஸ்க்யூரிக்ஸ்' முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்குப் பயனளிக்கும்  மாற்றாக இருக்கக்கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை ஆப்பிரிக்காவில் நடைபெறும் "மாஸ்க்யூரிக்ஸ்' பரிசோதனை முயற்சியை நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கத்தை பெருமளவில் நாம் குறைத்துவிட்டிருந்தாலும்கூட, உலகில் மலேரியாவால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் தொடர்கிறது.
  • 2018 உலக மலேரியா அறிக்கையின்படி, 2016 - 17 ஆண்டுகளில் மலேரியாவால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் 24 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனாலும்கூட, 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மலேரியாவால் பாதிக்கப்படலாம் என்கிற இடர் ("ரிஸ்க்') காணப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள்
  • ஒடிஸா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மலேரியாவால் மிக அதிகமாகப் பாதிக்கப்படும் மாநிலங்களில், அந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் பெருமளவில் அந்த நோய் பரவாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. மலேரியாவுக்கான மருத்துவப் பரிசோதனை, கொசு உற்பத்தித் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருந்து விநியோகம், உடனடிப் பரிசோதனை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை மலேரியா பிரச்னையில் ஓரளவுக்கு முனைப்புடன் செயல்படுவதை மறுப்பதற்கில்லை.
  • "மாஸ்க்யூரிக்ஸ்' தற்காலிக மாற்றாக இருக்கலாம், ஆனால் மிகப் பெரிய ஆறுதல். இதனால், நாம் மகிழ்ந்துவிட முடியாது. கொசுக்கள் உற்பத்தியாவதை முற்றிலுமாக தடுத்துவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால், நிச்சயமாகக்  கட்டுப்படுத்த முடியும். மலேரியா நுண்ணுயிரியை அழிக்கும் நிரந்தர மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் "மாஸ்க்யூரிக்ஸ்' போன்ற முயற்சிகள் தொடரத்தான்  வேண்டும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்