TNPSC Thervupettagam

ஆலம்பாடி மாட்டினத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

February 25 , 2019 2099 days 1303 0
  • மாடு இல்லாத விவசாயமும்,  மரம் இல்லாத தோட்டமும் பாழ் என்பார்கள்.  மழை பொய்த்தாலும்,  மாடுகள் விவசாயிகளுக்கு சோறு போடும். விவசாயத்தையும்,  மாடுகளையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க இயலாது.
  • இரண்டுக்கும் நமது முன்னோர்கள் முக்கியத்துவம் அளித்தனர்.  பால், உரத்துக்காக தனித்தனியாக  நாட்டின மாடுகளை வளர்த்து வந்தனர்.
  • நமது நாட்டின மாடுகள் அந்தந்தப் பகுதிக்கு ஏற்றாற்போல் இருக்கும்.  கடின உழைப்புக்கு காங்கேயம் (கொங்கு மண்டலம்),  சேற்று உழவுக்கு உம்பளச்சேரி (சோழ மண்டலம்) என வகை வகையான மாடுகள் உள்ளன.
  • இத்தகைய மாட்டினங்கள் குறைந்தது 8 மணி நேரத்துக்கு மேல் உழைக்கும் தன்மை கொண்டவை. சாகியவால்,  சிந்தி,  தார்பார்க்கர் போன்ற நாட்டின மாடுகள் 5 முதல் 10 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்டவை.
  • நாட்டின மாட்டினமானது விவசாயத்துக்கும்,  விவசாயிகளுக்கும் பயன்தரக் கூடியது.
  • இத்தகைய நாட்டின மாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு நமது விவசாயிகளும் ஒரு காரணம்.
  • இயந்திரங்களின் பயன்பாடு இதற்கு முக்கியக் காரணம்.
  • நமது நாட்டின மாடுகளின் பெருமைகளை அறிந்த பிரேசில் விஞ்ஞானிகள், நம்முடைய ஓங்கோல் மாட்டு இனத்தை அவர்களது நாட்டில் வளர்த்து வருகின்றனர்.
  • மேலும்,  தார்பார்க்கர், சாகியவால் இனங்களை ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு சென்று, ஆஸ்திரேலியன் ஜீபு என்ற பெயரில் புது ரகம் உருவாக்கி உள்ளனர்.
  • இந்திய நாட்டு மாட்டினத்தின் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது.
  • இதனால்,  இந்திய மாட்டு இனங்கள் மீது அயல்நாட்டினர் ஒரு வகையான பார்வையைச் செலுத்தி வருகின்றனர்.
நாட்டின மாட்டு வகைகள்
  • நூறு ஆண்டுகளுக்கு முன்பு,  இந்தியாவில் ஏறத்தாழ 130 வகையான நாட்டு மாட்டினங்கள் இருந்தன.
  • ஆனால், தற்போது 40 மாட்டினங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • அதிலும்,  குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கேயம்,  உம்பளச்சேரி,  பர்கூர், ஆலம்பாடி, புலியகுளம் ஆகிய 5 இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
  • இவற்றில் ஆலம்பாடி இனமானது அழிவின் விளிம்பில் உள்ளது.
  • காவிரி ஆறு பாயும் தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல்,  ஊட்டமலை, ஆலம்பாடி, பெரும்பாலை,  பூதிநத்தம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாற்றாம்பாளையம், அஞ்செட்டி,  தேன்கனிக்கோட்டை மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் ஆலம்பாடி என்ற மாட்டினம்  காணப்படுவதாக கால்நடை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  ஆலம்பாடி மாட்டினம் குறித்து அறியாமல் பட்டியில் அடைத்து வளர்த்து வருகின்றனர்.
  • கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆலம்பாடி நாட்டினமானது அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஆலம்பாடி மாட்டினம் குறித்து ஆங்கிலேயர்களான கன், 1909-ஆம் ஆண்டிலும், லிட்டில் வுட் 1936-ஆம் ஆண்டுகளில் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இயல்பு
  • ஆலம்பாடி மாட்டினமானது கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படும்.  சுமார் 290 முதல் 362 கிலோ எடை உடையதாக இருக்கும்.
  • இந்த ரக மாடுகள் உழவுக்கும்,  வண்டியை இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
  • எல்லா தட்பவெப்ப நிலைக்கும் பொருந்தி வளரக் கூடியது. வலிமையான கால்களையும்,  குளம்பு அமைப்பானது நீண்ட தூரம் நடைப்பயணத்துக்கு ஏதுவாகவும் சாதுவான குணத்தைக் கொண்டிருக்கும்.
  • இத்தகைய ஆலம்பாடி நாட்டு மாட்டினத்தின் சாணத்தைப் பயன்படுத்தினால்,  மூன்று ஆண்டுகளுக்கு உரங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
  • முக்கியமாக, மண்ணை வளப்படுத்துவதில் இதன் பங்கு அளவிட முடியாதது.
கலப்பு
  • இத்தகைய திறன் மிக்க ஆலம்பாடி நாட்டு இனமானது,  காலப் போக்கில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், மற்ற மாடுகளுடன் இணைந்ததால் கலப்பின மாடுகளாக மாறி வருகின்றன.
  • இதனால், ஆலம்பாடி நாட்டினம்,  தனது சிறப்பை இழந்து வருகிறது.  இருந்த போதிலும், கிருஷ்ணகிரி,  தருமபுரி ஆகிய மாவட்டங்களின் வனப் பகுதிகளில் குறைந்த அளவிலான கலப்பு இல்லா,  தூய ஆலம்பாடி மாட்டினம் உள்ளது.  அவற்றை அடையாளம் காணுவது அத்தியாவசியமானது.
  • தொடர்ந்து, ஆலம்பாடி நாட்டினத்தை இனப்பெருக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆராய்ச்சி நிலையம்
  • வறண்ட சூழ்நிலையிலும் வளரும் தன்மையும், சாதுவான குணம் கொண்ட இந்த நாட்டு மாட்டினத்தைக் கண்டறிந்து,  அவற்றைப் பெருக்கும் வகையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு,  மத்திய அரசானது தூய ஆலம்பாடி மாட்டினத்தை அடையாளப்படுத்தி,  அதை மீட்டெடுக்கும் வகையில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டது.  அதன் ரத்த மாதிரிகளையும் சேகரித்தனர்.
  • தருமபுரி மாவட்டம்,  பென்னாகரத்தில் ஒரு கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு 8.10.2018 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது.
  • ஆலம்பாடி நாட்டினத்தை மீட்டெடுக்கும் நோக்கில்,  அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு,  இந்த மையத்தின் மூலம் ஆலம்பாடி மாட்டினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதன் விந்தைச் சேகரித்தல்,  தீவன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டம்,  குண்டலப்பட்டி கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆலம்பாடி மாடுகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  • பென்னாகரத்தில் அமைய உள்ள ஆலம்பாடி இன ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.4 கோடி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
  • தற்போது முதல் கட்டமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பென்னாகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த மையத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக குண்டல்பட்டியில் செயல்படும் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்வம் அதிகரிப்பு
  • ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு, கிராமங்களில் நாட்டினத்தின் பலன்கள் குறித்து மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
  • இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்து வரும் நிலையில்,  விவசாயிகளிடம் நாட்டு மாடுகளை வளர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
  • கிராமப் பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையில் அரசின் திட்டங்களில் நாட்டின மாடு,  ஆடுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • நாட்டின மாடுகள்,  ஆடுகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில்,  இதற்கு அரசு ஊக்கம் அளிக்க வேண்டும் என இயற்கை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அங்கீகாரம் கிடைக்குமா?
  • தமிழ்நாட்டில் காணப்படும் பர்கூர் இன எருமை மாடுகள் உள்பட 184 ஆடு, மாடு உள்ளிட்டவை இந்திய கால்நடை இனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • ஆனால், ஆலம்பாடி நாட்டு மாட்டினத்தை,  இதுவரையில் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை.
  • இதற்கான ஆராய்ச்சிகள் முழுமை பெறாத நிலையில் உள்ளன.
  • எனவே, ஆலம்பாடி மாட்டினத்தின் குணாதிசயங்களை முழுமையாகக் கண்டறிந்து,  அவற்றை தனியே அடையாளப்படுத்த வேண்டும்.
  • மேலும்,  விரைவில் ஆலம்பாடி நாட்டினத்தை மத்திய அரசு அங்கீகரிக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்