புத்தர் ஞானம் பெற்ற பூமி. சமண மதத்தைத் தோற்றுவித்த மஹாவீரர் அவதரித்த மண்.
சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் பிறந்ததும், சீக்கிய குருவாக உருவானதும் இங்குதான்.
உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் இங்குதான் தொடங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு காந்தி கலந்துகொண்ட முதல் போராட்டம் பிஹாரின் சம்பாரணில்தான் நடந்தது.
வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பிஹார், 1912-ல் தனி மாகாணமானது (ஒடிஷாவும் அதில் இடம்பெற்றிருந்தது).
1936-ல் பிஹாரும் ஒடிஷாவும் தனித் தனி மாகாணங்களாகின.
2000 நவம்பர் 5-ல் தெற்கு பிஹார் பகுதிகள் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் எனும் புதிய மாநிலம் உருவானது.
புவியியல் அமைப்பு
இந்தியாவின் 13-வது பெரிய மாநிலமான பிஹார் 94,163 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது.
தமிழகத்தின் பரப்பளவு 1,30,058 சதுர கிமீ. தலைநகர் பாட்னா.
ஒரு சதுர கிமீ பரப்பில் 1,102 பேர் வாழ்கிறார்கள் (தமிழ்நாட்டில் 555 பேர்).
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பிஹாரின் மக்கள்தொகை 10,38,04,637. மக்கள்தொகையில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கும் மாநிலம் இது.
மாநிலத்தின் 89% மக்கள் கிராமப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இளைஞர்கள் அதிகம் கொண்ட மாநிலம்.
58% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். 7% பேர் இந்துக்கள். போஜ்புரி பேசும் மக்கள், மைதிலி மொழி பேசுபவர்கள், மகஹி மொழி பேசுபவர்கள் ஆகிய மூன்று சமூகக் குழுக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மையானவர்கள். யாதவர்கள் 17%, குர்மி சமூகத்தினர் 4%, குஷ்வாஹா சமூகத்தினர் 8% இங்கு வாழ்கிறார்கள்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 15%. பழங்குடியினர் 3%. முஸ்லிம்கள் 16.9%. கிறிஸ்தவர்கள் 0.12%. பெளத்தர்கள் 0.02%. சீக்கியர்கள் 0.02%. சமணர்கள் 0.01%.
சமூகங்கள்
பிஹார் மக்கள்தொகையில் சுமார் 17%-ஆக இருப்பதாகக் கருதப்படும் யாதவர்கள் இங்கே அரசியல், சமூகக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துபவர்கள்.
குர்மிக்கள், குஷ்வாஹா சமூகத்தினரும் செல்வாக்கு மிக்கவர்கள். பிஹாரில் காங்கிரஸ் கோலோச்சிய காலங்களில் அவர்களுக்குப் பெருமளவு ஆதரவளித்தவர்கள் பிராமணர்கள். அப்போதைய அரசியல் தலைவர்களில் பலரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.
பட்டியலின சமூகத்தைப் பொறுத்தவரை, பாஸ்வான் சமூகம் அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.
இங்கேதான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெருமளவில் போராட்டங்கள் நடந்தன.
ஆறுகள்
கங்கைதான் முக்கியமான நதி. தலைநகர் பாட்னா அமைந்திருப்பதும் கங்கைக் கரையில்தான்.
உத்தர பிரதேசத்திலிருந்து செளஸா பகுதி வழியாக பிஹாருக்குள் நுழையும் கங்கையுடன், அதன் கிளை நதிகளான காக்ரா, காண்டகி, சோன், புன்புன், கோசி, பாகமதி போன்ற நதிகள் இணைகின்றன.
பிஹாரில் ஓடும் கங்கையிலும், காண்டகி, காக்ரா கிளை நதிகளிலும் சுமார் 1,150 கங்கை டால்பின்கள் இருப்பதாகச் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
சுத்தமான நீரில்தான் இவ்வகை டால்பின் வாழும் என்பதால், கங்கை குறிப்பிடத்தக்க அளவு தூய்மையானதாக இருக்கலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
காடுகள்
நிலப்பரப்பில் 1% வனப் பகுதிகளைக் கொண்டது. மேற்கு சம்பாரண், கைமூர், ரோஹஸ்தாஸ், ஔரங்காபாத், கயா உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கைக் காடுகள் உள்ளன.
மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் ஈரமான இலையுதிர் சால் காடுகளும், தெற்குப் பகுதிகளில் வறண்ட இலையுதிர் சால் காடுகளும் உள்ளன.
சால் (குங்கிலியம்), நூக்கம், தேக்கு உள்ளிட்ட மரங்கள் அபரிமிதமாக வளர்கின்றன. பிஹாரின் ஒரே தேசியப் பூங்காவான வால்மீகி தேசியப் பூங்கா, இந்தியாவின் 18-வது புலிகள் காப்பகமாகும்.
நீராதாரம்
ஏழ்மை, பொருளாதார வளர்ச்சி குறைவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள விவசாய உற்பத்தியைப் பெருக்குவதே ஒரே வழி; நீராதாரத்தை அதிகரிப்பதே அதற்குத் தீர்வு எனும் நோக்கத்தில் நீராதாரத் துறை இயங்கிவருகிறது.
2018 மார்ச் நிலவரப்படி 15 பெரிய திட்டங்கள், 78 நடுத்தரத் திட்டங்கள் மூலம் 91 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டிருக்கிறது.
கனிம வளம்
சோட்டா நாக்பூர் பீடபூமிப் பகுதியில் கனிமங்கள் அதிகம். உயர் ரக நிலக்கரி, இரும்புத் தாது, தாமிரத் தாது இங்கு அதிகம் கிடைக்கின்றன.
சோப்புக் கல் (ஆண்டுக்கு 945 டன்கள்), பைரைட் (9,539 டன்கள்), குவார்ட்ஸைட் (14,865 டன்கள்) ஆகிய கனிமங்கள் உற்பத்தியாகின்றன.
ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் சுண்ணாம்புக்கல் 78 லட்சம் டன்கள். பாக்ஸைட், டோலோமைட், மைக்கா, யுரேனியம் போன்றவையும் பிஹாரின் கனிம வளங்களாகும்.
பொருளாதாரம்
உணவகங்கள், தங்குமிடங்கள், ரயில், சாலை, வான்வழிப் போக்குவரத்து போன்ற சேவைத் துறைகள் பிஹாரின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மாநிலப் பொருளாதாரத்தில் 60% இதன் மூலம் கிடைக்கிறது. அடுத்த நிலையில் சுரங்கத் தொழில், உற்பத்தித் தொழில், கட்டுமானத் தொழில் இடம்பெறுகின்றன.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு போன்றவையும் பங்களிக்கின்றன. 2016-17-க்கான வளர்ச்சி விகிதம் 3%. இது அந்த ஆண்டுக்கான தேசிய சராசரியைவிட அதிகம் என பிஹார் அரசு பெருமைப்பட்டுக்கொண்டது.
2018-19-க்கான ஜிடிபி மதிப்பு ரூ.15 லட்சம் கோடி என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அரசியல் சூழல்
சுதந்திரம் முதல் நெருக்கடிநிலைக் காலம் வரை காங்கிரஸ் ஆட்சிதான். 1977 சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. 1984, 1985 தேர்தல்களில் காங்கிரஸ் மீண்டும் வென்றது.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த மண் என்பதாலோ என்னவோ அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கும். 1990, 1995 தேர்தல்களில் வென்று முதல்வரான லாலு பிரசாத், ஊழல் புகார்களில் சிக்கி, ஜனதா கட்சியினரின் ஆதரவு கிடைக்காத நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைத் தொடங்கினார்.
சரத் யாதவ் தலைமையில் இருந்த ஜனதா தளம், லோக்சக்தி கட்சி, சமதா கட்சி இணைந்து ஐக்கிய ஜனதா தளம் உருவானது.
இவை இரண்டும் இங்கே பிரதான இடத்தை வகிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் களம் காண்கிறது. காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய லோக் சமதா, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா போன்ற கட்சிகளும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கின்றன.