TNPSC Thervupettagam

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய பெண்கள்

May 8 , 2019 2075 days 1581 0
  • இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன சபையில் இருந்த 299 பிரதிநிதிகளில் ஜவாஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் முதலானவர்கள் குறித்து நமக்குத் தெரிந்த அளவிற்கு ஏனையவர் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
  • இந்திய விடுதலைக்காக மட்டும் போராடாமல், பெண் விடுதலைக்கும், முன்னேற்றத்துக்கும் போராடிய 15 பெண்கள் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்...
தாக்ஷாயணி வேலாயுதன்
  • 1912-ஆம் ஆண்டு கொச்சியில் பிறந்த இவர், புலையர் எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பெண்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த காலகட்டத்தில், கேரளத்தில் பட்டப்படிப்பு முடித்த முதல் தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்த பெண் இவரே. 1913-இல், இவரது உறவினர் தொடங்கிய புலையர் மகாஜன சபையின் போராட்டங்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தன.
  • சமூகப் புரட்சிகளை முன்னெடுத்துச் செல்ல, தாக்ஷôயினியும் சமூக மாற்றத்திற்குப் பெரும் பங்காற்றினார். புலையர் சமூகப் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், அந்தப் பாகுபாடுகளைக் களைந்து மேலாடை அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். கல்வி, சமத்துவம், ஜாதி அடிமைத்தனம் ஒழிப்பு உள்ளிட்டவற்றில் குரல் கொடுத்த இவர், 1946-ஆம் ஆண்டு அரசியல் சாசன சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் சாசன சபையில் இடம்பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரே பெண் இவர்தான்.
  • இடஒதுக்கீடோ, வகுப்புவாரி பிரதிநிதித்துவமோ தீண்டாமையை அகற்றி விடாது. பொருளாதார ரீதியிலான ஜாதி அடிமைத்தனத்தில் இருந்து எப்போது விலகுகிறோமோ அப்போதே தீண்டாமை ஒழியும் என்ற கருத்தை அரசியல் சாசன சபையில் அழுத்தமாகப் பதிவு செய்தவர்.
  • இவரது நெருங்கிய உறவினர், திரு. கே.ஆர். நாராயணன் இந்திய நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணன் இவரது நெருங்கிய உறவினர்.
ஹன்ஸா மேத்தா
  • குஜராத்தின் பரோடாவில் (தற்போதைய வதோதரா) திவான் மனுபாய் நந்தஷங்கர் மேத்தாவின் மகளாக 1897-ம் ஆண்டு பிறந்த ஹன்சா, சமூகவியலும், இதழியல் கல்வியும் லண்டனில் பயின்றார். சீர்திருத்தவாதி, சிறந்த கல்வியாளர், எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
  • பெண்களின் நிலை குறித்த ஐ.நா. நிலைக் குழு மற்றும் ஐ.நா.வின் மனித உரிமைகள் தீர்மானத்துக்கான வரைவுக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். அரசியல் சாசன சபையில் அடிப்படை உரிமைகளுக்கான துணைக் குழு மற்றும் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
  • பொது சிவில் சட்டத்தை அடிப்படை உரிமையாக மாற்றவும், குழந்தை திருமணம், தேவதாசி ஒழிப்பு முறை ஆகியவற்றை ஒழிக்கவும் பெரும் முயற்சி மேற்கொண்டார். இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு 1959-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி சிறப்பித்தது. இவரது கணவர் ஜீவராஜ் நாராயண் மேத்தா குஜராத் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
துர்காபாய் தேஷ்முக்
  • 1909-ம் ஆண்டு ராஜமுந்திரியில் பிறந்த துர்காபாய், தனது 12-ஆவது இருக்கும் போதே ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார். 1930-ம் ஆண்டு மெட்ராஸில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்திலும் கலந்துகொண்டார்.
  • மாநிலங்களவை மற்றும் சட்டமேலவைக்கு போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 35-இல் இருந்து 30-ஆக மாற்ற இவரே காரணமானவர். இவர் கிரிமினல் வழக்குரைஞராக இருந்ததால், அரசமைப்பு சாசனத்தில் நீதித்துறை குறித்த விதிகளில் பல திருத்தங்கள் கொண்டு வர மசோதா தாக்கல் செய்தார். கடந்த 1975-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பேகம் ஐசாஸ் ரசூல்
  • பஞ்சாபில் ராஜ குடும்பத்தில் பிறந்த பேகம் ரசூல், அரசியல் சாசன சபையில் இடம்பெற்ற ஒரே இஸ்லாமிய பெண். பேகமும், அவரது கணவரும் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்து  அரசியலில் ஈடுபட்டனர்.
  • 1937-ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப் பிரதேச சட்டசபைக்கு பேகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மத அடிப்படையில் தனி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை எதிர்த்தார். வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினருடன் எப்போதுமே சேர விடாமல் பிரிக்கும் சுய அழிவு ஆயுதம் என்று அரசியல் சாசன சபையில் அழுத்தமாக பதிவு செய்தார்.
  • மேலும், ஆண், பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியுள்ளதில் ஒரு பெண்ணாக மிகுந்த மன நிறைவு கொண்டுள்ளதாக தெரிவித்தார்.  இவரது சமூக பங்களிப்பிற்காக கடந்த 2000-ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
அம்மு சுவாமிநாதன்
  • வரைவு அரசமைப்பு சட்டத்தை அம்பேத்கர் தாக்கல் செய்து போது நடந்த விவாதத்தில், இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை என வெளியில் இருக்கும் மக்கள் பேசுகிறார்கள். நாட்டில் உள்ள மற்ற அனைத்து குடிமக்களுக்கும் இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் அரசமைப்பு சாசன சட்டத்தை நாமே இயற்றியுள்ளோம் என நாம் இனி கூறிக் கொள்ளலாம்”என நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அம்மு பேசினார்.
  • இவரது மூத்த மகளான கேப்டன் லட்சுமி சேகல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய படையின் ஜான்சி ராணி படைப் பிரிவின் தளபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயலட்சுமி பண்டிட்
  • விஜயலட்சுமி பண்டிட்,  ஜவாஹர்லால் நேருவின் தங்கை ஆவார். அலாகாபாத் நகராட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவரது நீண்ட அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1932, 1940, 1942-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசு இவரை சிறைக்கு அனுப்பியது. 1937-ம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை உள்ளாட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.
  • இரண்டாம் உலகப் போரில்  பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இந்தியா போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களை போல, இவரும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஐ.நா. பொதுச் சபையின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் மற்றும் முதல் பெண் இவரே.
சுசேதா கிருபளானி
  • ஹரியாணாவின் அம்பாலா நகரில் 1908-ம் ஆண்டு பிறந்தவர் சுசேதா கிருபளானி. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு பெற்றார். காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவை 1940-ம் ஆண்டு தோற்றுவித்தார். 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் சாசன சபை கூட்டத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாடி துவக்கி வைத்து, தேசீய கீதம் பாடி நிறைவு செய்தார். 1963- 1967 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் இவரே.
சரோஜினி நாயுடு
  • கவிக்குயில் என்று அனைவராலும் அழைக்கப்படும் சரோஜினி நாயுடு, 1879-ஆம் ஆண்டு ஹைதராபாதில் பிறந்தார்.
  • இந்திய தேசிய காங்கிஸின் முதல் இந்தியப் பெண் தலைவர். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக உத்தரப் பிரதேசத்தில் பதவியேற்றார். இந்திய விடுதலைக்கு முன்பே, அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும் என வாதிட்டார். மத நல்லிணக்கம் ஏற்படும் வகையிலும், தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும், பல கவிதைகளை இயற்றியுள்ளார்.
  • ஜாதி, மத பிரிவினைகள் அதிகரித்திருந்த அந்தக் காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்ட இவர், ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்துவதையே தனது நோக்கமாக கொண்டு வாழ்ந்தார். இவரது பெருமைகளை நினைவுகூரும் வகையில், இவர் பிறந்த நாளான பிப்ரவரி 13-ஆம் தேதி, தேசிய மகளிர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
லீலா ராய்
  • அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாபாராவில் 1900-இல் பிறந்தார் லீலா ராய். துணை மாஜிஸ்திரேட்டாக இருந்த இவரது தந்தை, ஒரு தேசியவாதி. தந்தையைப் பின்பற்றி தேசத் தொண்டில் ஈடுபட்டார். அனைத்து வங்காள பெண்கள் வாக்குரிமை கமிட்டியின் துணை செயலாளராக பதவியேற்று பெண்கள் உரிமைக்காக பாடுபட்டார். உப்பு வரிக்கு எதிராக நடந்த இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்த டாக்கா மகிளா சத்தியாகிரக சங்கத்தை தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
  • ரவீந்திரநாத் தாகூர் ஆதரவளித்து வந்த ஜெயஸ்ரீ இதழில் ஆசிரியராக பணியாற்றினார். பெண்கள் கல்வி கற்பதற்கு உதவியாக பள்ளிகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை தொடங்கினார்.
  • பெண்களின் தற்காப்புக்காக நிதி திரட்டி, தற்காப்புக் கலை மையம் நிறுவினார். 1960-ம் ஆண்டு பார்வர்ட் பிளாக் (சுபாஷ்) மற்றும் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி இணைக்கப்பட்டு புதிதாக தோன்றிய கட்சியின் தலைவராக ஆனார்.
பூர்ணிமா பானர்ஜி
  • 1911-ஆம் ஆண்டு பிறந்த இவர், சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாவார். இவரது சகோதரி அருணா ஆசப் அலியும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அலாகாபாதில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார் பூர்ணிமா. உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். அரசியல் சாசன சபையில் தொடர்ந்து சோஷலிஸ சிந்தனைக்கு குரல் கொடுத்தார்.
ஆன் மாஸ்கரீன்
  • 1902-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் லத்தீன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த ஆன் மாஸ்கரீன், திருவிதாங்கூர் மாநில காங்கிரஸில் இணைந்த முதல் பெண்களுள் ஒருவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, 1939-47 காலகட்டத்தில் பல முறை சிறை சென்றார். மாகாண தேர்தலுக்காகவும், திருவிதாங்கூர் மாநிலத்தை இந்தியாவோடு இணைப்பதற்கும் கடுமையாகப் போராடியவர். 1951-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றார். கேரளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி. இவரே.
ரேணுகா ராய்
  • சமூக சேவகரும் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டின் உறுப்பினருமான சாருலதா முகர்ஜி மற்றும் ஐசிஎஸ் அதிகாரி சதீஷ்சந்திர முகர்ஜி தம்பதியின் மகள் ரேணுகா. தனது பட்டப்படிப்பை லண்டனில் முடித்த இவர், பெண்களுக்கு எதிரான சட்ட முரண்பாடுகளையும், பாகுபாடுகளையும், கொடுமைகளையும் எதிர்த்துப் போராடினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ரேணுகா ராய், திட்டக் குழுவிலும், சாந்தி நிகேதனில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தின் நிலைக்குழுவிலும் பணியாற்றினார். நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார். பெண்கள் ஒருங்கிணைப்பு கவுன்சில் மற்றும் அனைத்து வங்காள பெண்கள் யூனியன் ஆகியவற்றைத் தோற்றுவித்தார்.
கமலா செளதரி
  • லக்னௌவில் வசதி படைத்த குடும்பத்தில் கமலா பிறந்திருந்தாலும், அவர் தனது படிப்பை தொடர பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஆங்கிலேய அரசுக்கு தனது குடும்பம் ஆதரவளித்து வந்த நிலையில், அதற்கு மாறாக, சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார். அகில இந்திய கங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்த கமலா சௌதரி, அரசியல் சாசன சபை மற்றும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த கமலா செளதரி, பெண்களின் மன உலகம் குறித்தும், நவீன நாடாக இந்தியா வளர்ந்து வருவது குறித்தும் பல சிறந்த கதைகள் எழுதியுள்ளார்.
ராஜ்குமாரி அம்ருத் கெளர்
  • 1989-ம் ஆண்டு லக்னெளவில் பிறந்த அம்ருத் கெளர், இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர் என்ற சிறப்பை பெற்றவர். இவர் மகாத்மா காந்தியின் செயலராக 16 வருடங்கள் பொறுப்பு வகித்துள்ளார். பெண் கல்விக்காக போராடிய அம்ருத், விளையாட்டு, மருத்துவம் போன்ற துறைகளில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவியவரான அம்ருத், அந்த மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குமாறு தொடர்ந்து வாதிட்டு வந்தார். இந்திய காச நோய் கூட்டமைப்பு, மத்திய தொழுநோய் மருத்துவ ஆய்வு நிறுவனம் போன்றவற்றை நிறுவினார். செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சொசைட்டி நிர்வாக கமிட்டியின் தலைவராக இருந்தார்.
மாலதி செளதரி
  • கிழக்கு வங்காளத்தில் (தற்போதைய வங்கதேசம்) 1904-ம் ஆண்டு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் மாலதி.  உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்.  இவரது கணவர் நவகிருஷ்ண செளதரி பிற்காலத்தில் ஒடிஸா மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
  • 1933-ம் ஆண்டு தனது கணவரோடு இணைந்து உத்கல் காங்கிரஸ் சமாஜவாதி கர்மி சங்கத்தை தோற்றுவித்தார். 1934-ம் ஆண்டு ஒடிஸாவில் காந்திஜி மேற்கொண்ட புகழ்பெற்ற பாதயாத்திரையின் போது மாலதியும் இணைந்து கொண்டார். ஒடிஸாவில் மிகவும் கீழ்நிலையிலுள்ள சமூகங்களுக்கு உதவும் வகையில் பல அமைப்புகளை தோற்றுவித்தார். பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசர நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்துப் போராடி சிறை சென்றார்.
  • 1946-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசமைப்பு சாசன சபை அமைக்கப்பட்டது. இதில், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள்தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைத்துப் பிரிவு மக்களும் இடம்பெற்றிருந்தனர்.
  • சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியத் தலைவர்கள் பெரும்பாலானோர், அரசமைப்பு சாசன சபையில் இடம்பெற்றிருந்தனர். அரசமைப்பு சாசன சபையின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. தனி பாகிஸ்தான் கோரிக்கையை எழுப்பி, இந்திய முஸ்லிம் லீக் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
  • மொத்தம் 211 உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்