TNPSC Thervupettagam

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

January 11 , 2018 2363 days 22452 0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

 - - - - - - - - - - - - - - - - - - -

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organization)

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அரசின் விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையிடம் பெங்களூருவில் அமைந்து இருக்கிறது.
  • விண்வெளி அறிவியல் மற்றும் கோள்களைக் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும், தேசிய வளர்ச்சிக்காக விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் இஸ்ரோ நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையாகும்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு மற்றும் அவரின் நெருங்கிய நண்பரும் நாட்டின் முன்னணி விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாய் ஆகியோரின் முயற்சியால் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு (INCOSPAR) 1962ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • இது இந்திய விண்வெளித்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் துறையானது இந்தியக் குடியரசின் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.

.

இஸ்ரோவின் மையங்கள்

கட்டுமானம் மற்றும் விண்கல புறப்பாட்டு வளாகங்கள்

வளாகம் இருப்பிடம் விளக்கம்
இந்திய விண்வெளி ஆய்வு மைய செயற்கைக்கோள் நிலையம் பெங்களூர் செயற்கைக் கோள் உருவாக்கத்திலும் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் முன்னிலை வகிக்கிறது.
மின் ஒளியியல் அமைப்புகள் ஆய்வகம் பெங்களூர் இந்த ஆய்வகத்தில் மின் ஒளியியல் உணரிகள், ஒளியியல் கருவிகள் ஆகியவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
சதீஸ் தவான் விண்வெளி மையம் ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு முதன்மையான ஏவுதளமாக இம்மையம் செயல்படுகிறது.
தும்பா பூமத்திய ரேகை விண்கலன் ஏவு நிலையம் திருவனந்தபுரம் ·          பிரதான இந்திய நிலப்பகுதியின் தென்கோடியில் இந்நிலையம் அமைந்துள்ளது. காந்த மையக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. ·          இந்நிலையத்தை வளிமண்டல ஆராய்ச்சி ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இஸ்ரோ பயன்படுத்துகிறது.

.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள்

ஆராய்ச்சி மையம்

அமைவிடம்

குறிப்பு

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரம் ·          ஏவு ஊர்திகள் தொழில்நுட்பம் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்யும் இஸ்ரோவின் முதன்மை ஆராய்ச்சி மையம்.
திரவ உந்துவிசை அமைப்பு மையம் திருவனந்தபுரம் & பெங்களூரு ·          இஸ்ரோவின் ஏவு வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ உந்து எரிசக்தி நிலையகள் தொடர்பான வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் அகமதாபாத் ·          வானியல் மற்றும் வான் இயற்பியல், சூரிய இயற்பியல், கிரக அறிவியல் மற்றும் புத்தாய்வு, விண்வெளி மற்றும் வளிமண்டல அறிவியல், புவியறிவியல், கோட்பாட்டு இயற்பியல், அணு மூலக்கூறு மற்றும் ஒளியியல், இயற்பியல் மற்றும் விண்வெளி வேதியியல் தொடர்பான அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆய்வகம். இது இந்திய விண்வெளி துறையின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படுகிறது.
குறைகடத்தி ஆய்வகம் சண்டிகர் ·          நாட்டின் நுண் மின்னணுவியல் துறையினை பலப்படுத்தவும், பல்லாயிரம் திரிதடையங்களை ஒரு சில்லாக ஒருங்கிணைத்து உருவாக்கும் VLSI எனப்படும் ‘Very Large Scale Integrated Circuit’ துறையில் திறன்களை மேம்படுத்தவும் குறைகடத்தி ஆய்வகம் முற்படுகிறது.
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் திருப்பதி ·          இந்திய விண்வெளித் துறையின் உதவியுடன் இயங்கும் தன்னாட்சி அறிவியல் ஆய்வகம். இது வளிமண்டலம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. வளிமண்டல ஆராய்ச்சி தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சி, கண்காணிப்பு பணிகள், தரவுகள் காப்பகம், தரவுகள் பரவல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பணிகளை இந்த ஆய்வகம் மேற்கொள்கிறது.
விண்வெளிப் பயன்பாடுகள் மையம் அகமதாபாத் இந்த மையத்தின் முக்கிய பணிகள் விண்வெளியில் பயன்படுத்தப்படும் கருவிகளை உருவாக்குவதும், அவற்றை தேசிய முன்னேற்றத்திற்கும் சமூக நலனுக்காகவும் பயன்படுத்துவதும் ஆகும்.
வடகிழக்கு (இந்திய) விண்வெளிப் பயன்பாடுகள் மையம் சில்லாங் இது இந்திய விண்வெளித் துறை மற்றும் வட-கிழக்கு இந்திய கவுன்சிலின் (North Eastern Council – NEC) கூட்டு முயற்சி ஆகும். இந்த மையத்தின் முக்கிய நோக்கமானது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை வடகிழக்கு இந்திய பகுதிகளின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்துவது ஆகும்.

.

தடம்கண்காணித்தல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்

ஆராய்ச்சி மையம் அமைவிடம் குறிப்பு
இந்திய ஆழ் விண்வெளி பிணையம் பெங்களூரு இஸ்ரோ நிறுவனம் இயக்கும் பெரிய ஆண்டெனா தொகுப்புகளை உடைய தகவல் தொடர்பு பிணையம். இந்தியாவின் வேற்று கிரக விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவி புரிகிறது.
தேசிய தொலை உணரி மையம் ஐதராபாத் தொலை உணரி செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் தரவுகளை கையாளுகிறது. இந்த தரவுகளை ஆவணப்படுத்தி பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி புரிகிறது.
இஸ்ரோ தொலையளவியல், தடம்கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிணையம் பெங்களூரு (தலைமையகம்) மற்றும் இந்தியாவிலும் உலகெங்கும் பல தரை நிலையங்கள் இந்தியாவின் செயற்கைக்கோள்களின் இயங்கும் தடங்களை கண்காணிக்கிறது. ஏவு ஊர்திகளின் தடங்களை பதிவு செய்கிறது.
தலைமை கட்டுப்பாட்டு வசதி போபால் : ஹாசன் புவிநிலை வட்டப்பாதை மற்றும் புவி ஒத்திசைவு வட்டப்பாதையில் இயங்கும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் திட்டங்களான இன்சாட் (INSAT), ஜீசாட் (GSAT), கல்பனா மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் (IRNSS) ஆகியவற்றை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட முக்கிய தளம்.

. சோதனை மையங்கள்

ஆராய்ச்சி

மையம்

அமைவிடம்

குறிப்பு

இஸ்ரோ உந்துவிசை அமைப்பு மையம் மகேந்திரகிரி அதி நவீன உந்துவிசை அமைப்புகளை கட்டமைத்து சோதித்துப் பார்க்க இஸ்ரோ நிறுவனம் உருவாக்கிய தற்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ற அதி நவீன மையம்.

. மனித வள மேம்பாடு

ஆராய்ச்சி

மையம்

அமைவிடம்

குறிப்பு

இந்திய தொலையுணர்வு நிறுவனம் (IIRS) டேராடூன் இந்தியாவில் தொலையுணரி, புவித் தகவலியல் போன்ற துறைகளை மேம்படுத்தவும், இத்துறைகளில் திறன்களை கட்டமைத்து நடைமுறையில் (செயல்படுத்துவதற்காக) முதுகலை பாடத்திட்ட அளவில் கல்வியும் பயிற்சியும் அளிக்கவும் முற்படுகிறது.
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருவனந்தபுரம் ஆசியாவின் முதல் விண்வெளி பல்கலைக்கழகம். இது 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவில் விண்வெளித் துறையில் உயர்தர கல்வி கற்பிக்கவும், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில் திறன்களை வளர்த்து இந்திய விண்வெளி திட்டங்களுக்கு உதவவும் துவங்கப்பட்டது.
மேம்பாட்டு பணிகள் மற்றும் கல்விக்கான தொலைத்தொடர்புப் பிரிவு அகமதாபாத் சமூக நலன்களுக்காக தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களை பயன்படுத்தவும், தொழில்நுட்பத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவும் துவங்கப்பட்ட இஸ்ரோவின் தொழில்நுட்ப பிரிவு.

.

ஏவு ஊர்திகள்

  • ஏவுவாகனங்கள் (அ) ஏவு ஊர்திகள் , செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுதலுக்குப் பயன்படுபவையாகும். இந்தியா இருவகையான ஏவுவாகனங்களை இயக்குகிறது.
  • துருவ நிலை செயற்கைக்கோள் ஏவுவாகனம் (PSLV)
  • புவிநிலை செயற்கைக்கோள் ஏவுவாகனம் (GSLV)

  • செயற்கைக்கோள்களை அதன் சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிறுத்துவதற்கு, துல்லியம், திறன், ஆற்றல் மற்றும் பெரும் திட்டமிடல் ஆகியவற்றின் கலவை மிக அவசியம்.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது ஏவு வாகன மேம்பாடு மற்றும் வடிவமைப்பை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது.
  • திரவ உந்துவிசை அமைப்பு மையம் (Liquid Propulsion Systems Centre) மற்றும் ISRO உந்துசக்தி ஆராய்ச்சி வளாகம் (ISRO Propulsion Complex) ஆகியவை முறையே வளையமலா (கேரளா) மற்றும் மகேந்திரகிரி (தமிழ்நாடு) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் ஏவு வாகனங்களில் பயன்படுத்தக் கூடிய திரவ நிலை மற்றும் கடுங்குளிர் நிலை (cryogenic stages) எரிபொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடத்துகின்றன.
  • சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையமானது (Satish Dhawan Space Centre - SDSC) இஸ்ரோ நிறுவனத்தின் ஏவுதளம் ஆகும். ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்துள்ள இந்த மையம் ஏவு வாகனங்களை ஒருங்கிணைக்கிறது. GSLC மற்றும் PSLV ஏவு வாகனங்களை ஏவுவதற்கு இந்த மையத்தில் இரண்டு ஏவு தளங்கள் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
  • GSLV - Geosynchronous Satellite Launch Vehicle
  • PSLV - Polar Satellite Launch Vehicle

.

ஏவுவாகனங்கள்

முந்தைய ஏவு ஊர்திகள் தற்போதைய இயக்கம் எதிர்காலத் திட்டம்
1) SLV 3) PSLV 6) GSLV MK - III
2) ASLV 4) GSLV 7) RLV - TD
  5) ஆய்வு ராக்கெட்டுகள் 8) ஸ்கிராம்ஜெட் என்ஜின் - TD.

1) SLV (Satellite Launch Vehicle)

  • செயற்கைக் கோள் ஏவுவாகனம்-3 (SLV-3) ஆனது இந்தியாவின் முதல் பரிசோதனை ஏவுவாகனமாகும்.
  • இந்த ஏவு வாகனம் நான்கு கட்டங்களாக, திண்மநிலை எரிபொருட்களைக் கொண்டு இயங்குகிறது. 17 டன் எடையும் 22 மீ உயரமும் உடையது. 40 கிலோ எடையுடைய சுமையை, தாழ் புவி வட்டப்பாதையில் (LEO – Low Earth Orbit) நிறுத்தும் திறன் உடையது.
  • SLV-3 திட்ட வெற்றியைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட ஏவுவாகனம் (Augmented Satellite Launch Vehicle - ASLV), துருவ நிலை செயற்கைக்கோள் ஏவுவாகனம் (Polar Satellite Launch Vehicle - PSLV), புவி நிலை செயற்கைக்கோள் ஏவுவாகனம் (Geosynchronous Satellite Launch Vehicle - GSLV) ஆகிய நவீன ஏவுவாகனங்கள் உருவாக்கப்பட்டன.

2) ASLV (Augmented Satellite Launch Vehicle)

  • மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனத் திட்டமானது SLV ஏவு வாகனத்தைவிட மும்மடங்கு சுமைகளை சுமந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அதாவது ASLV உந்து வாகனத்தால் 150 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை பூமியின் தாழ்வட்டப் பாதையில் செலுத்த முடியும்.
  • 24 மீட்டர் உயரமும் 40 டன் எடையும் கொண்ட ASLV ஏவு வாகனம் 5 திண்மநிலை எரிபொருள் கலங்களை உடையது ஆகும். இது 150 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக் கோள்களை 400 கிலோமீட்டர் உயர சுற்றுப் பாதையில் நிறுத்தும் திறன் கொண்டது ஆகும்.
  • முக்கியமான விண்வெளி தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும், செயல்பாட்டை சரிபார்க்கவும் குறைந்த பொருட்செலவிலான இடைநிலை ஏவுவாகனமாக ASLV செயல்பட்டது.

3) துருவநிலை செயற்கைக்கோள் ஏவுவாகனம் (PSLV – Polar Satellite Launch Vehicle)

  • இது இந்தியாவின் மூன்றாம் தலைமுறை ஏவுவாகனமாகும்.
  • இதுதான் திரவநிலை எரிபொருட்களுடன் செயல்பட்ட இந்தியாவின் முதல் ஏவுவாகனமாகும்.
  • PSLV முதன் முதலாக அக்டோபர் 1994இல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் ஜுன் 2017 வரையில் தொடர்ந்து 39 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த திறன் கொண்ட ஏவு வாகனமாக PSLV விளங்குகின்றது.
  • 1994-2017 வரையிலான காலகட்டத்தில் PSLV மூலம் 48 இந்திய செயற்கைக்கோள்களும், 209 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் (வாடிக்கையாளர்) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
PSLV முக்கிய குறிப்புகள்
எரிபொருள் கலன்களின் எண்ணிக்கை 4
மொத்த எடை திறன் 320 டன் (XL)
முதல் சோதனை 1993
பயன்படுத்தப்பட்ட என்ஜின் (இரண்டாம் நிலை) விகாஸ்

  • இதில் குறிப்பிடத்தக்க இரண்டு விண்வெளித் திட்டங்களான சந்திராயன்-1 (2008) மற்றும் செவ்வாய் கிரக சுற்றுக் கலன் திட்டம் (Mars Orbiter Mission, 2013) ஆகியவற்றைக் கூறலாம். இவை முறையே நிலவிற்கும், செவ்வாய்க் கிரகத்திற்கும் ஏவப்பட்டன.

SSPO எடை திறன்: 1750 கிலோ கிராம்

  • தொடர்ந்து இடர்பாடுகளின்றி தாழ் புவி வட்டப் பாதையில் பல செயற்கை கோள்களை, குறிப்பாக இந்திய தொலை உணர்வு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் PSLV ஏவு ஊர்தி, “இஸ்ரோவின் பணிக் குதிரை” என்று அழைக்கப்படுகிறது.
  • இது 1750 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோளினை சூரிய ஒத்திசைவு துருவநிலை சுற்றுவட்டப் பாதையில் (Sun-Synchronous Polar Orbits- SSPO) 600 கிமீ உயரத்தில் நிறுத்தவல்லது.

GTO எடைதிறன்: 1425 கிலோ கிராம்

  • PSLV மீதான பெரும் நம்பகத்தன்மை காரணமாக, புவி ஒத்திசைவு மற்றும் புவிநிலை சுற்றுவட்டப்பாதை ஆகியவற்றிற்கு பல்வேறு செயற்கைக் கோள்களை ஏவ இது பயன்படுகிறது. உதாரணமாக IRNSS செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டப் பணிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

4) புவிஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனம் (GSLV)

  • GSLV-Mark II (GSLV MK II) என்பது, இந்தியாவால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏவுவாகனமாகும். தற்போது இது இயக்கத்தில் உள்ளது.
  • GSLV MK II என்பது இந்தியாவின் நான்காம் தலைமுறை ஏவு வாகனம் ஆகும். இது மூன்று நிலை எரிபொருள் கலன்களைக் கொண்டது. இவற்றிற்கு கூடுதல் ஆற்றல் அளிக்கும் விதமாக Strap-On எனப்படும் திரவ எரிபொருள் கொண்ட இயந்திரங்கள் நான்கு இணைக்கப்பட்டு இருக்கும்.
  • GSLV MK II-வின் மூன்றாம் நிலை எரிபொருள் கலன் கடுங்குளிர் நிலையில் உள்ள எரிபொருளை எரிக்கும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. இது முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு கடுங்குளிர் மேல்நிலை எரிபொருள் கலன் (Cryogenic Upper Stage – CUS) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை கிரையோஜெனிக் மேலடுக்கு தொழில்நுட்பம் தொடர்ந்து 4 முறை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
GSLV – முக்கிய குறிப்புகள்
நிலைகளின் எண்ணிக்கை 3
மொத்த எடை திறன் 414.75 டன்
முதல் சோதனை 2001
என்ஜினின் பயன்பாடு (2-ம் நிலை) விகாஸ்
கடைசிக் கட்ட என்ஜின் CE-7.5 இந்தியாவின் முதல் கிரையோஜெனிக் என்ஜின்

GTO-ற்கான எடைதிறன் : 2500 கிலோ கிராம்

  • இன்சாட் வரிசை செயற்கைக் கோள்கள் புவிநிலை வட்டப்பாதையில் இயங்குகின்றன. இவை புவி இசைவு பரிமாற்ற பாதையில் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் புவி நிலை வட்டப்பாதைக்கு மாற்றப்படுகின்றன. GSLV ஏவு வாகனம் இந்த செயற்கைக் கோள்களை புவி இசைவு பரிமாற்ற பாதையில் செலுத்துகிறது.

LEO-ற்கான எடைதிறன்: 5000 கிலோ

                GSLV ஏவு வாகனமானது 5000 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை புவியின் தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் ஒரே பெரிய செயற்கைக்கோளுக்கு பதிலாக பல சிறிய செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் ஏவுவதற்கான வாய்ப்பினை GSLV ஏற்படுத்தித் தருகின்றது.

5) ஆய்வு ராக்கெட்டுகள்

                இவை ஒன்று அல்லது இரண்டு அடுக்கு நிலையுடைய திடநிலை எரிபொருள் கலன்களைக் கொண்ட ராக்கெட்டுகள் ஆகும். இவை மேல்வளிமண்டல அடுக்கில் விண்வெளி ஆய்வு மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

  • வழக்கமான சோதனைகளுக்கும் புதிய தொழில்நுட்பம் அல்லது துணை அமைப்புகளை ஏவு வாகனங்களிலும், செயற்கைக்கோள்களிலும் பயன்படுத்தும்முன் சோதித்து பார்க்கவும் எளிய வழியாக இந்த ஆய்வு ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • காந்தப்புலன் கொண்ட பூமத்திய ரேகைக்கு அருகில் 1963ல் அமைக்கப்பட்ட தும்பா ராக்கெட் ஏவுதல் நிலையம் மூலம் இந்திய வானியல் மற்றும் வளிமண்டல அறிவியல் துறையில் பலபடிகள் முன்னேற்றம் ஏற்பட்டது.
  • ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கருவிகள் மூலமாக வளிமண்டலத்தை அங்கேயே ஆய்வு செய்ய ஆய்வு ராக்கெட்டுகள் உதவுகின்றன.
  • முதன்முதலில் இருநிலை எரிபொருள் கலன்களை உடைய ராக்கெட்டுகள் ரஷ்யா (M-100) மற்றும் பிரான்சு (centaure) ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. M-100 ஆனது 70 கிலோ சுமை எடையை, 85 கிமீ உயரத்திற்கு கொண்டு செல்லவல்லது. Centaure ஆனது 150 கி.மீ உயரத்திற்கு 30 கிலோ கிராம் எடையைக் கொண்டு செல்லக் கூடியது.
  • அனைத்து ஆய்வு ராக்கெட் நடவடிக்கைகளும், ‘Rohini Sounding Rocket’ திட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

6) GSLV - MK - III

                GSLV-MK-III ஆனது 4 டன் எடையுடைய செயற்கைக்கோள்களை புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுவட்டப்பாதையில் ஏவும் திறன் பெற்றது.

  • இது 3 கட்ட எரிபொருள் கலன்களைக் கொண்ட ஏவு வாகனம் ஆகும். இதில் இரண்டு திட எரிபொருள் இணைப்பு மோட்டார்களும் (S 2002), ஓர் திரவ உந்துசக்தி மைய நிலை (410), மற்றும் கிரையோஜெனிக் நிலை (cryogenic) (C25) ஆகியவையும் அமைந்துள்ளன.
  • GSLV-MK-III-D1 என்பது முதன் முதலில் மேம்படுத்தப்பட்ட வாகனம் ஆகும். இது 3136 கிலோ GSAT-19 செயற்கைக்கோளை புவிநிலை பரிமாற்ற வட்டப்பாதையில் நிறுத்தியது.
  • GSLV-MK-III-D1 ஆனது, GSAT-19-ஐ 5-ஜூன்-2017 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

7) RLV-TD (Reusable Launch Vehicle – Technology Demonstrator)

  • மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுவாகனத் தொழில்நுட்ப செயல்விளக்கமுறை (Reusable Launch Vehicle – Technology Demonstrator , RLV-TD) என்பது ISRO-வின் தொழில்நுட்ப பயணத்தில் மிகவும் வலிய சவாலாகும். ISRO ஆனது மறுஉபயோகம் செய்யக்கூடிய ஏவுவாகன தொழில்நுட்பத்தினை கண்டறிவதன் மூலம், விண்வெளியில் செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான செலவினை மிகவும் மலிவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
  • RLV-TD பொருத்துதல் என்பது, ஏவுவாகனம் மற்றும் விமானம் ஆகிய இரண்டின் சிக்கலான தொழில்நுட்பங்களை இணைத்து வடிவமைக்கப்படும் தொழில்நுட்பம் ஆகும்.
  • இறக்கைகளை உடைய RLV-TD, ஆனது பல்வேறு தொழில்நுட்பங்களை சோதனைகளுக்கு உட்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமீயொலி வேக விமானத் தொழில்நுட்பம் (hypersonic flight), தானியங்கி தரையிறங்கல் தொழில்நுட்பம், ஆற்றல் முடுக்கப்பட்ட விமானத் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.
  • எதிர்காலத்தில், இந்த ஏவுவாகனம் ஆனது இந்தியாவின் மறுபயன்பாட்டு இருநிலை சுற்றுவட்டப்பாதை ஏவுவாகனத் தொழில்நுட்பத்தின் முதல்நிலையானதாக அமையும்.

8) ஸ்கிராம்ஜெட் என்ஜின்

  • ஸ்கிராம்ஜெட் என்ஜின் என்பது ராம்ஜெட் என்ஜினின் அடுத்த நிலை ஆகும்.
  • Ramjet என்ஜின் என்பது வெளியில் இருக்கும் காற்றினை உள்ளிழுத்து எரித்து உந்து விசையை உருவாக்கும் ஜெட் என்ஜின் ஆகும். இது உள்வரும் காற்றின் சுழற்று அமுக்குவானின் (rotating compressor) துணையின்றி அழுத்தம் கொடுத்து  ஏவுவாகனத்தை முன்னோக்கி பறக்கச் செய்கிறது.
  • எரிபொருளானது, எரிவறைக்குள் (Combustion Chamber) செலுத்தப்படுகையில், சூடான அழுத்தப்பட்ட காற்றுடன் கலந்து எரியத்துவங்கும்.
  • Ramjet - என்ஜினால் ஆற்றல் பெற்ற ஏவுவாகனங்கள் பறக்கத் துவங்க முதல் கட்டத்தில் கூடுதல் உதவி தேவைப்படும். இதன் வேகத்தைக் கூட்டி, முடுக்குவதற்கு, இயக்க ராக்கெட்டின் துணை தேவை.
  • ராம்ஜெட் என்ஜின்கள் அதிஒலிவேகத்தில் (Supersonic) மிகுந்த திறனுடன் இயங்கக் கூடியவை ஆகும். Mach 3 என்பது ஒலியின் வேகத்தில் 3 மடங்காகும். இதனை Mach 6 வரையிலான வேகம் வரை இயக்கலாம். ஆயினும் அதனைத் தாண்டிய அதிமீயொலி வேகத்தில் (hypersonic Speed) இதன் திறன் குறையத் துவங்கும்.
  • ஸ்கிராம்ஜெட் என்ஜினின் திறனானது அதிமீயோலி வேகத்தில் சிறப்பாக இயங்கும். மீயொலி வேக (Supersonic Speed) எரிப்பிலும் இயங்கும். எனவே இது Supersonic Combustion Ramjet அல்லது Scramjet எனப்படுகிறது.

Scramjet-ன் பலன்கள்

  • இது வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி, ராக்கெட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எரிபொருளை எரிக்கின்றது.
  • எரிபொருளுடன் ஆக்ஸிஜனேற்றியினை சுமந்து செல்லும் அவசியத்தை இது குறைப்பதால், இந்த என்ஜின் மூலம் ஏவுகின்ற செலவு குறைகிறது.
  • இந்த அமைப்பில், திரவ ஆக்ஸிஜனை சுமக்க வேண்டிய அவசியம் இல்லாததால், ஏவுதலுக்கான சுமை குறையும்.
  • இதன் திறன் மேம்பாட்டினால் குறைந்த செலவே ஏற்படும்.
  • இதில் சுழலும் பாகங்கள் இல்லாததால், தோல்விகளுக்கான வாய்ப்பு குறைகிறது.
  • தற்போது செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு ISRO ஆனது PSLV –ஐ மட்டுமே பயன்படுத்துகிறது.
  • இந்த புதிய உந்துசக்தி அமைப்பு (New Propulsion System) ஆனது ISRO வின் மறுபயன்பாட்டு ஏவுவாகனத்திற்கு ஓர் பரிசாகும்.

-------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்