TNPSC Thervupettagam

இனியும் நம் குழந்தைகளைப் பட்டினிக்கு நாம் இரையாக்கக் கூடாது

June 21 , 2019 2031 days 932 0
  • பிஹார் மாநிலத்தின் முசாஃபர்பூரிலும் மேலும் 11 மாவட்டங்களிலும் மூளை அழற்சி நோய்க்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பது தேசிய சோகம் மட்டும் இல்லை; தேசிய அவமானமும்தான்.
  • இறந்த குழந்தைகளில் பெரும்பான்மையானவை ஒன்று முதல் பத்து வரையிலான வயதுக்கு உட்பட்டவை. ஊட்டச்சத்துக் குறைவுதான் முக்கியமான காரணம். பெரும்பாலும் இரவுகளில் சாப்பிட ஏதுமில்லாமல் வெறும் வயிற்றுடன் பட்டினியாகவே படுத்துவிடுகின்றனர் இங்குள்ள பெரும்பான்மை குழந்தைகள். காலையில் எழுந்ததும் பசிக்காகவும் ருசிக்காகவும் லிச்சி பழங்களைச் சாப்பிடுகின்றனர்.
மூளை அழற்சி
  • அதிலுள்ள ரசாயனம் குழந்தைகளின் உடலில் மிச்சம் மீதியிருக்கும் சர்க்கரைச் சத்துகளை உறிஞ்சிவிடுகிறது. இது உடனடியாக மூளையைப் பாதிக்கிறது. இதனால் மயக்கம், காய்ச்சல், குழப்பம், நினைவிழத்தல் போன்றவை ஏற்படுகின்றன. உடனடியாக குளூக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக் கரைசல்கள் ஏற்றப்பட்டால் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கலாம். அதைக்கூட செய்ய முடியாத நிலையில்தான் ‘மாபெரும் வல்லரசு’ கனவு கண்டுகொண்டிருக்கிறோம் நாம்.
  • பிஹார் குழந்தைகள் மரணத்தை வெறும் சுகாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது நமக்குத் தீர்வைத் தராது. சமூக, பொருளாதாரப் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும். ஊட்டச்சத்து குறைவான கர்ப்பிணிகளைக் கவனிப்பதைப் போல மிகவும் வறியவர் வீட்டுக் குழந்தைகளுக்குக் குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதற்கான பொருளாதாரச் சூழலை, அதற்கான நிதியுதவியை அரசு தரும் ஒரு திட்டத்துக்கான தேவையை இது உணர்த்துகிறது.
சுகாதாரத் துறை – கட்டமைப்பு
  • மேலும், நம்முடைய சுகாதாரத் துறை அவலட்சணமான தன்னுடைய கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ளவும் முனைய வேண்டும். “2008 முதல் 2014 வரையில் இந்தியாவில் மூளை அழற்சி நோய்க்கு 44,000 பேர் ஆளாகியிருக்கின்றனர். அவர்களில் 6,000 பேர் இறந்துள்ளனர். எஞ்சியவர்கள் டெக்ஸ்ட்ரோஸ், குளூக்கோஸ் அளித்ததால் உயிர் பிழைத்தனர். காய்ச்சல் அறிகுறி தெரிந்த உடனேயே 5% டெக்ஸ்ட்ரோஸ் ஏற்றினாலே குழந்தைகள் சுதாரித்துவிடும்.இப்படிபட்ட சூழலில் ஒரு குழந்தைக்கு 10% டெக்ஸ்ட்ரோஸ் ஏற்றினாலே அபாயக் கட்டத்தை அது தாண்டிவிடும்;
  • பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்குக் கூட்டிவரும்போதே இவற்றைச் செலுத்தி உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்” என்றெல்லாம் இன்று சுட்டிக்காட்டப்படும் விஷயங்கள் எவ்வளவு மோசமான சூழலில் நம் சுகாதாரத் துறை இருக்கிறது எனும் அவலத்தையே வெளிப்படுத்துகிறது. மத்திய, மாநில சுகாதாரத் துறைகள் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது.
  • இனி இப்படிப்பட்ட இறப்புகள் நேரக்கூடாது. ஏழைக் குழந்தைகள் மட்டுமல்ல; அவர்களுடைய குடும்பத்தவரும் பட்டினியாக இருக்கும் நிலை இனி கூடாது. புதிய அரசின் முன்னுரிமைகளில் இதுவும் ஒன்றாகட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை(21-06-2019) 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்