TNPSC Thervupettagam

இன்னுமொரு பட்ஜெட்!

July 6 , 2019 2016 days 1104 0
  • நடுத்தர வர்க்கத்தினரைத் தொடாமல், கோடீஸ்வரர்களைக் குறி வைத்து சில வரிவிதிப்புகளை மேற்கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3%, ரூ.5 கோடிக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 7% என்று அவர்களது வருமான வரியில் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
வரி
  • அதேபோல, ரூ.400 கோடிக்கும் அதிகமான விற்றுவரவுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய்க்கு 25% வரி அறிவித்திருப்பது நல்ல முடிவு.
  • நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க சலுகை, ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது அதை ரூ.3.5 லட்சமாக நிதியமைச்சர் உயர்த்தியிருக்கிறார். அதன்படி, ரூ.45 லட்சம் வரையிலான மதிப்பைக் கொண்ட முதல் வீடு வாங்குவதற்கு கடன் பெறுவோர் செலுத்தும் வட்டியில் பெறும் கழிவு ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
  • சாதாரண பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 28% வரி விதிக்கப்படுகிறது என்றால், மின்சார வாகனங்களுக்கு வெறும் 5% மட்டுமே வரி என்று அறிவித்திருக்கிறார். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு கடன் வசதி தரப்படுவதுடன் அதற்கான  வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுவது புதிய முயற்சி. போதுமான கட்டமைப்பு வசதியோ, திட்டமிடலோ இல்லாமல், மின்சார வாகனங்களின் அதிகரித்த பயன்பாடு எப்படி சாத்தியப்படும் என்பது குறித்து அரசு சிந்தித்திருக்கிறதா என்று தெரியவில்லை.
  • இதுவரை பான் எனப்படும் வருமான வரிக் கணக்கு எண்ணின் அடிப்படையில்தான் வரி செலுத்தப்பட்டு வந்தது. இப்போது ஆதார் எண்ணின் அடிப்படையிலும் வரி செலுத்தலாம் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்படியானால், பான் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட இருக்கிறதா, இல்லை பான் அட்டை கைவிடப்படுகிறதா என்பது குறித்த தெளிவு இல்லாமல் இருக்கிறது.
  • ரொக்கப் பரிமாற்றம் குறைக்கப்பட வேண்டும் என்கிற இலக்கை 2014-இல் பதவிக்கு வந்தது முதல்  பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இப்போது ரூ.1 கோடிக்கும் அதிகமாக வங்கியிலிருந்து ரொக்கப் பணம் எடுப்பவர்களுக்கு 2% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. 2% வரி செலுத்திவிட்டு, அந்த அதிக அளவில் ரொக்கப் பணத்தைக் கையாளவாப் போகிறார்கள்? கருப்புப் பணப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகத்தான் இது முடியும். அரசின் நோக்கம் ரொக்கப் பரிமாற்றத்தைக் குறைப்பதாக இருந்தால், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் எடுப்பதற்கே, 30% என்று வரி விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வரி அதிகரிப்பு
  • பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகரிப்பு எரிச்சலூட்டுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வருவதற்குப் பதிலாக, வரியை உயர்த்தி விலையை அதிகரிப்பது, நடுத்தர வர்க்கத்தினரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பது மட்டுமல்ல, விலைவாசியையும் அதிகரிக்கும்  என்பது நிதியமைச் சருக்கு ஏன் புரியவில்லை? தங்கம் மீதான இறக்குமதி சுங்கவரி உயர்வு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், கடத்தல் தங்கம் சந்தையில் புழங்கப்போகிறதே, அதை எப்படித் தடுக்கப் போகிறோம்?
  • இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை. அதற்குத் தீர்வு, கட்டுமானத் துறையும், சிறு, குறு தொழில்களும் புத்துயிர் பெறுவதுதான். வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறார் நிதியமைச்சர். நலிந்து கிடக்கும் நிதி நிறுவனங்கள் இந்தப் பணத்தால் செயல்படத் தொடங்கலாமே தவிர, சிறு, குறு தொழில்களின் செயல்பாட்டுக்கு உதவிட முடியாது. அவலை நினைத்து உரலை இடிக்கிறார் நிர்மலா சீதாராமன்.
  • இந்தியாவின் தண்ணீர்த் தேவை குறித்து நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கை கவலைப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உடனடி செயல்பாட்டுக்கு இது உதவாது என்பதையும் கூறியாக வேண்டும். பங்குச் சந்தையில் பதிவு செய்யும் நிறுவனங்களில் பொது மக்களின் பங்களிப்பு 25%-ஆக இருந்ததை 35%-ஆக உயர்த்தியிருப்பது நல்ல முடிவு. அதை 50% வரை அதிகரித்தாலும் தவறில்லை.
  • நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையில், பெரிய புத்திசாலித்தனமோ, பாராட்டி மகிழும்படியான அறிவிப்புகளோ இல்லை. ஒருமாத காலத்தில் தயாரிக்கப்பட்ட மிகச் சாதாரணமான நிதிநிலை அறிக்கை. இதனால், பொருளாதாரத்திற்கோ, சாமானிய மக்களின் வாழ்க்கையிலோ, எந்தவிதத் தாக்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!

நன்றி: தினமணி (06-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்