பேரறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக இருந்தபோது, அவரது நேர்முக உதவியாளராகப் பணியாற்றும் பேறு எனக்குக் கிடைத்தது. அண்ணாவுக்கு முன் பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் முதல்வர்களிடம் நான் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியுள்ளேன். 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சரின் அறைக்கு வந்து அண்ணா தமது இருக்கையில் அமர்ந்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி முதலமைச்சர்களிடம் பணியாற்றிப் பழகிய என்னையும் மற்றவர்களையும் தொடர்ந்து தன் உதவியாளர்களாக அண்ணா வைத்துக்கொள்ள மாட்டார் என்று சிலர் சொன்னார்கள்; வேறு சிலர் தங்களை நியமித்துக்கொள்ளப்போவதாகச் சொல்லிக்கொண்டு, அவரது அறைக்கு வந்து சூழ்ந்திருந்தார்கள். முதலமைச்சரின் அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளைக்கூட நாங்கள் எடுத்துப் பேசக் கூடாது என்றுகூட அவர்கள் உத்தரவிட்டிருந்தனர். இது ஓரளவு நியாயமாகவே எங்களுக்கும் தோன்றியது. நாங்கள் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, வெவ்வேறு துறைகளுக்குத் திரும்பிச்செல்லவே எண்ணியிருந்தோம்.
உயர்ந்த அரசியல் அனுபவம் முதிர்ந்த அறிவு
அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த அன்று புனித ஜார்ஜ் கோட்டையை அன்று வரை அதைக் காணாதோரும் கண்டும் உள்ளே நுழையாதோரும் நுழைந்தும் முதலமைச்சர் அறையை நாடிச் செல்லாதோரும் காட்டாற்று வெள்ளம் போல் முதலமைச்சரின் அறையை நோக்கி அலை அலையாக வந்தவண்ணம் இருந்தனர்.
அண்ணா தம் அறைக்கு வந்தவுடன் எங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். அண்ணாவின் அருகில் இருந்தவர்கள் அவர் காதில் மட்டும் விழும்படியாக ஏதோ சொன்னார்கள். எங்களுக்கு நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னார், “இவர்களுடைய நெடிய அனுபவத்தை இழக்க நான் தயாரில்லை; இந்தப் பதவிக்கு நான் புதியவன். ஐசிஎஸ் அதிகாரிகள் முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பணிபுரிந்தனர். பிறகு, நீதிக் கட்சி ஆட்சியிலும் பணிபுரிந்தனர். பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் பணிபுரிந்தனர். இப்போது திமுக ஆட்சியில் பணிபுரியப்போகின்றனர். நாளை கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்தால் அவர்களுக்குக் கீழேயும் இவர்கள் பணிபுரியட்டும்.”
எத்தகைய உயர்ந்த அரசியல் அனுபவம் முதிர்ந்த அறிவு! உள்ளார்ந்த தன்னம்பிக்கை!
அண்ணாவைச் சுற்றி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என்று எப்போது பார்த்தாலும் பெரும் கூட்டத்தினர் சூழ்ந்தே இருப்பார்கள். இதனால், பல சமயங்களில் கோப்புகளைப் பார்ப்பதற்கேகூடப் பகலில் அவருக்கு நேரம் கிடைக்காது. நள்ளிரவு ஒன்றரை மணிக்கு மேலும்கூட உட்கார்ந்து “கோப்புகளை எடுங்கள்” என்று சொல்லி, ஒவ்வொன்றாகப் பார்ப்பார். எல்லாவற்றையும் பார்ப்பதற்குள் பொழுது விடிந்துவிடும்.
இனி முதல்வராக இல்லாவிட்டாலும் கவலையில்லை
ஒவ்வொரு உறுப்பினர்கள் பேச்சையும் கூர்ந்து கேட்டு, தாமே குறிப்பு எடுத்துக்கொள்வார். அரசு அதிகாரிகள் பலரிடம் கலந்து பேசி, அவற்றுக்குத் தாமே பதிலும் அளிப்பார். எப்படிப் பேச வேண்டும் என்று விஷயங்களை உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூறுவார். சட்டமன்றத்தில் அளிக்கப்பெற வேண்டிய அறிக்கைகளைத் தாமே தயார்செய்வார்.
ஒருநாள், சட்டமன்றத்திலிருந்து தம்முடைய அறைக்குத் திரும்பி வந்தவுடன், தன்னுடன் வந்தவர்களிடம் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. “நான் இனி தொடர்ந்து முதலமைச்சராக இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன். நமது மாநிலத்துக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிவிட்டேன். சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகச் சட்டம் இயற்றிவிட்டேன். தமிழகத்தில் தமிழ்தான் செங்கோலோச்சும்; இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை நினைவூட்ட இருமொழிக் கொள்கைத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டேன்!”