TNPSC Thervupettagam

எதற்காக இன்னும் தனி அந்தஸ்து?

July 17 , 2019 2005 days 967 0
  • சட்டப் பிரிவு 370 மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்களுக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்கும் அரசமைப்பு சட்டப் பிரிவு 35 ஏ-வையும் திரும்பப் பெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையிலேயே வலியுறுத்தியிருக்கிறது. இரண்டு சட்டப் பிரிவுகளும் பாரபட்சமானவை என்பதும், ஒரே இந்தியா என்ற உணர்வுக்கு எதிரானவை என்பதும் சில கட்சிகளின் நிலைத்த நிலைப்பாடு.
சட்டப் பிரிவு 35 ஏ
  • இந்த சட்டப் பிரிவுகள் நியாயமற்ற வகையில் மற்ற மாநில மக்களுக்கு இல்லாத சிறப்புச் சலுகைகளை கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வருகின்றன என்று அந்தக் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது.
  • காஷ்மீரில் காணப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும், பிரிவினைவாதப் போக்குக்கும் இந்தச் சட்டப் பிரிவுகள்தான் அடிப்படைக் காரணம் என்பதைக் காலம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால், இந்த சட்டப் பிரிவுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருப்பதை விடுத்து அதைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சந்தர்ப்பவாதத் தலைவர்களான அப்துல்லாக்களும், முப்திக்களும், மற்ற பிரிவினைவாதத் தலைவர்களும் இந்த சட்டப் பிரிவுகளின் பலன்களால் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
  • இதற்கு நாட்டின் மற்ற பகுதியினர் வரிப் பணத்தைச் செலவிடுகிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து அவர்களைத் தூண்டிவிடும் இந்தத் தலைவர்கள், படிப்பதற்காகத் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் போலித்தனத்தை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தோலுரித்துக் காட்டினார்.
மாற்றம்
  • இந்த சட்டப் பிரிவுகளில் மாற்றம் செய்வது என்பது, 1947-இல் இந்தியாவுடன் சேரும்போது காஷ்மீரிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறுவதாகும் என விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், இந்த சட்டப் பிரிவுகள் காஷ்மீர் மாநில மக்களை ஏழ்மையிலேயே வைத்திருப்பதுடன் அவர்கள் மீது இந்தத் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்த மட்டுமே உதவி வருகின்றன என்பதுதான் உண்மை.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டுமே முழு மாநிலமல்ல என்பதை அமித் ஷா சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஜம்மு, லடாக் ஆகியவற்றையும் உள்ளடக்கிய ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 22 மாவட்டங்கள் உள்ளன.
நிரந்தர குடிமகன்
  • 35 ஏ சட்டப் பிரிவின்படி, காஷ்மீர் பகுதியின் நிரந்தர குடிமகன் மட்டுமே அங்கு சொத்துகளை வாங்க முடியும், வேலைவாய்ப்பு பெற முடியும், அரசுக் கல்லூரியில் சேர முடியும். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஜம்முவிலும், லடாக்கிலும் இருப்பவர்கள்கூட அங்கு சொத்துகளை வாங்கவும், வேலைவாய்ப்புப் பெறவும், கல்லூரிகளில் சேரவும் முடியாது என்பதை எப்படி பொறுத்துக் கொள்வது? அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் வாழலாம், சொத்துகளை வாங்கலாம், எல்லா உரிமைகளுடனும் உலவலாம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
  • இந்தியாவுடன் சேரும்போது நடத்திய பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவத்தில் காஷ்மீரிகள் சேருவதை அடிப்படை உரிமையாக ஆக்கும் வகையிலும், மாநில காவல் துறையில் மற்ற மாநிலத்தவர் சேருவதைத் தடை செய்யும் வகையிலும் ஷரத்து இடம் பெற வேண்டும் என்று ஷேக் அப்துல்லா வலியுறுத்தினார். அதை நாம் ஏற்றுக் கொண்டதேகூடத் தவறு. அப்போதே இதை வன்மையாகக் கண்டித்தவர் அன்றைய சட்ட அமைச்சராக இருந்த பாபாசாகேப் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜம்மு - காஷ்மீரில் மக்கள் பிரதிநிதித்துவம் சரியான அளவில் இருப்பதற்கு முதல் கட்டமாக, தொகுதி மறுவரையறையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருப்பது வரவேற்புக்குரிய முடிவு. தொகுதிகளை மறுவரையறை செய்துவிட்டால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கணிசமான அளவில் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
  • தனது கட்சிக்குப் போதிய வெற்றி கிடைக்காது என்று கருதிய ஃபரூக் அப்துல்லா, பிரிவு 370ஐ பயன்படுத்தி, 2026 வரை தொகுதி மறுவரையறை செய்ய முடியாத வகையில் மாநில அரசமைப்புச் சட்டத்தில் 2002-இல் திருத்தம் செய்தார். இப்போது மொத்தமுள்ள 87 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 46-ம், ஜம்முவில் 37-ம், லடாக்கில் 4-ம் உள்ளன.
தொகுதி மறுவரையறை
  • தொகுதி மறுவரையறை செய்யாததால், பல்வேறு நிலைகளிலும் காஷ்மீரைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் தொடர்வது நிலைநாட்டப்பட்டுள்ளது. லடாக்கின் பரப்பளவு, நிலப் பகுதி, நிலவியல் சார்ந்த அரசியல் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.
  • குஜ்ஜர், பக்கர்வால், கட்டி ஆகிய சமூகத்தினர் பழங்குடியினர் என 1991-இல் அறிவிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மக்கள்தொகையில் இவர்கள் 11 சதவீதம் பேர் உள்ளனர்.  மற்ற மாநிலங்களில், அரசமைப்பு சட்டம் அளிக்கும் அனைத்துச் சலுகைகளையும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால், காஷ்மீரில் அவர்களுக்கு அரசியல் ரீதியான இட ஒதுக்கீடுகூட இன்னமும் அளிக்கப்படவில்லை.
  • காஷ்மீரிகளில் பெரும்பாலானவர்கள் பரம ஏழைகளாக இருக்கையில், வருமானம் எப்படி ஈட்டுகிறார்கள் என்றே தெரியாத பிரிவினைவாதிகளும், அரசியல் பிழைப்பு நடத்துபவர்களும் காஷ்மீரில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள். காஷ்மீரில் உள்ள சொகுசு கார்களில் 90 சதவீதம் இவர்கள் வசமே உள்ளன.
  • இந்தப் பிரிவினைவாதிகளுக்கு அரசு நமது வரிப் பணத்தில் பாதுகாப்பு அளிக்கிறது என்பதுதான் வேடிக்கை. சாதாரண பொது மக்களோ ஒருபுறம் பாதுகாப்புப் படையினரின் குண்டுகளுக்கும், மறுபுறம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் வெடிகுண்டுகளுக்கும் இரையாகி வருகின்றனர்.
  • காஷ்மீருக்கான 370, 35-ஏ என்கிற இரண்டு  சட்டப் பிரிவுகளைச் சேர்க்க அரசமைப்பு சட்ட வரைவைத் தயாரிக்கும் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர் மறுத்து விட்டார். உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேலும்  கடுமையாக எதிர்த்தார். பின்னர், நேருவின் வற்புறுத்தலுக்கு அவர்கள் அடிபணிய நேர்ந்தது.
உள்கட்டமைப்பு
  • உங்களுடைய எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்றும், உங்கள் பகுதியில் சாலைகளை அமைக்க வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். உணவு தானியங்கள் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
  • இந்தியாவுக்கு நிகராக காஷ்மீருக்கு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். ஆனால், உங்கள் பகுதியில் இந்திய அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரம்தான் இருக்க வேண்டும் என்றும், இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இல்லை என்றும் வற்புறுத்துகிறீர்கள்.
  • உங்களுடைய இந்தத் திட்டத்துக்கு நான் ஒப்புதல் அளித்தால் இந்திய நலன்களுக்கு நான் துரோகம் இழைத்ததாகிவிடும். சட்டத் துறை அமைச்சராகிய நான் இதற்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்' என்று ஷேக் அப்துல்லாவிடம் அம்பேத்கர் திட்டவட்டமாகக் கூறினார். கடைசிவரை அவருக்கு இந்த ஏற்பாட்டில் உடன்பாடு இருக்கவில்லை.
நேருவின் விளக்கம்
  • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டது ஏன் என்பதற்கு நாடாளுமன்றத்தில் நேரு கொடுத்த விளக்கம் இதுதான்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மகாராஜாவின் பெரும்பாலான அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருந்தபோதும், வெளியிலிருந்து வரும் யாரும் அங்கு சொத்துகள் வாங்கக் கூடாது என்பதில் அவர் குறிப்பாக கவனம் செலுத்தினார். அது இப்போதும் தொடர்கிறது. இப்போதைய (சுதந்திரம் பெற்ற சமயத்தில் இருந்த)  காஷ்மீர் அரசுக்கும் அந்த அச்சம் உள்ளது. பண பலம் கொண்டவர்கள் நிலங்களை வாங்கிக் குவித்தால், ஒரு கட்டத்தில் தங்கள் மீது அவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். அவர்களது இந்த அச்சம் நியாயமானதும் கூட.
  • அசையா சொத்துகள், காவல் துறைக்கு ஆள் சேர்த்தல்  உள்ளிட்ட விஷயங்களில் மாநிலத்தின் நிரந்தர குடிமக்களின் உரிமைகள், சிறப்புச் சலுகைகளைப் பாதுகாக்க ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவைக்கு அதிகாரம் உண்டு'. ஜம்மு-காஷ்மீரை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் எந்த முயற்சியும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் உணர்வுகளை நசுக்குவதாகும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கும் சட்டப் பிரிவு 370 அளிக்கும் சலுகைகள் உண்டு. ஆனால், பல்லாயிரக்கணக்கான பண்டிட்டுகள் காஷ்மீரில் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அது குறித்து யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
  • ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் வீட்டை விட்டு விரட்டப்பட்டனர். அவர்களது வீடுகளை அங்கிருந்தவர்கள் ஆக்கிரமித்தனர். இவற்றை எல்லாம் சாதாரண நிகழ்வுகள் போல அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் அலட்சியமாகப் பார்த்தனர். இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக காஷ்மீர் விளங்கிவந்துள்ளது.
  • இனியும் அப்படியே தொடரும். அப்படித் தொடர வேண்டுமானால், உள்துறை அமைச்சர் கூறுவதுபோல, சட்டப் பிரிவுகள் 370-ம், 35-ஏ-வும் அகற்றப்பட வேண்டும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களைப்போல, ஜம்மு - காஷ்மீரும் இந்திய யூனியனின் சம உரிமை பெற்ற மாநிலமாக இருக்கலாமே தவிர, சிறப்புரிமை பெற்ற மாநிலமாகத் தொடரக் கூடாது. இல்லையென்றால், ஐ.எஸ்., தலிபான்களின் பிடியில் அந்த மாநிலம் சிக்கிவிடும்.

நன்றி: தினமணி (17-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்