TNPSC Thervupettagam

எதிரிக்கு எதிரி நண்பன்!

April 4 , 2019 2061 days 1232 0
  • நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள் என்பது சீன கம்யூனிச தலைவர் மா சேதுங்கின் புகழ்பெற்ற வாக்கியங்களில் ஒன்று.
  • எதிரிகள் எந்த ஆயுதத்தை எடுத்தாலும், அதைவிட வலுவான ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்களை ஒழிப்பேன் என்பதுதான் அதில் புரிந்து கொள்ள வேண்டிய அர்த்தம்.
சீனா – கொள்கை
  • சீனாவில் கம்யூனிசக் கொள்கையை நிலைநிறுத்தவும், உள்நாட்டுப் புரட்சியில் வெற்றி பெறவும் மா சேதுங்குக்கு அப்போது இதுபோன்ற வலுவான வாக்கியங்களும், நடவடிக்கைகளும் தேவைப்பட்டன.
  • ஆனால், இப்போதைய நவீன சீனா, மா சேதுங்கின் கொள்கையில் இருந்து ஒருபடி மேலே சென்றுவிட்டது என்றே தோன்றுகிறது. ஏனெனில், எதிரி தமக்கு எதிராக யோசிக்கவே அஞ்சும் வகையில் அசுர ராணுவ பலத்துடனும், பொருளாதார வலிமையுடனும் திகழ வேண்டும் என்பதுதான் இப்போதைய நவீன சீனாவின் தாரக மந்திரமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல.
தற்காப்பு
  • தற்காப்பு என்ற நிலையைத் தாண்டி, அச்சுறுத்துவதற்கும், மிரட்டுவதற்குமே ஆயுத பலம், பொருளாதார ஆதிக்கம் ஆகியவற்றை கொள்கையாகக் கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும், சீனாவும் முன்னிலை வகிக்கின்றன. அந்த வகையில் நமது அண்டை நாடான சீனா, தனது ராணுவ பட்ஜெட்டுக்கான ஒதுக்கீட்டை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருவது இந்தியாவுக்கு நேரடியான எச்சரிக்கைதான்.
  • இதுதவிர எதிரி நாடுகளுக்கு குடைச்சல் கொடுக்கும் பிரச்னைகளைத் தூண்டி விடுவதும், அந்தப் பிரச்னைகள் தீர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் சர்வதேச அரசியல் ராஜதந்திரமாகிவிட்டது.
  • திபெத் விவகாரம், டோக்காலாம் உள்ளிட்ட எல்லைப் பிரச்னைகள், அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோருவது, தலாய் லாமா விஷயத்தில் இந்தியா மீது உள்ள பகை, மசூத் அஸாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போடுவது, அமெரிக்காவுடன் இந்தியா காட்டும் நெருக்கம், இந்தியாவின் பரம எதிரி நாடு என்பதற்காக மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து செயல்படுவது என இந்தியா-சீனா இடையே உள்ள தீவிரமான பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
  • சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வரி விதிப்பு யுத்தத்தை கையில் எடுத்ததற்கு, அந்த நாட்டுடன் ஏற்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை மட்டுமே காரணமல்ல என்பது ஊரறிந்த ரகசியம்.
  • தென்சீனக் கடல் விவகாரம், தைவான் பிரச்னை மற்றும் ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா காட்டும் ஆர்வம் ஆகியவற்றை ஒடுக்குவதையும் மறைமுக நோக்கமாகக் கொண்டுதான் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கையிலெடுத்தார். முக்கியமாக ராணுவம் மற்றும் ஆயுத பலத்தில் தங்களுக்கு இணையாக சீனா வளர்ந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் எச்சரிக்கையுடனே செயல்பட்டு வருகிறது.
  • ஏனெனில், இப்போது உலகில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ராணுவ, ஆயுத பலத்தைக் கொண்டுள்ள நாடு சீனாதான். சீனாவுடனான வரிவிதிப்பு யுத்தத்துக்கு தீர்வுகாணும் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஒருபுறம் நடத்தி வந்தாலும், மறுபுறம் அந்த நாட்டை இதற்கு மேல் தலையெடுக்க விடுவது ஆபத்து என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச அரசியலின் நீண்டகாலக் கொள்கையான எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பதை இந்தியா தெரிந்தோ, தெரியாமலோ கைக்கொள்ள வேண்டியதாயிற்று.
சவால்
  • அதே நேரத்தில் ஆசியப் பிராந்தியத்தில் தனக்குச் சவாலாக உருவெடுக்கும் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா தனது நெருக்கத்தை வெகுவாக அதிகரித்துக் கொண்டது. இதன் மூலம் எதிரியின் எதிரிகள் அனைவரையும் அமெரிக்கா வெகு இயல்பாக நண்பர்களாக கைக்கொண்டுள்ளது.
  • இதில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளுக்கு தென்சீனக் கடலில் உள்ள தீவுகளின் உரிமை தொடர்பாக மட்டுமே பிரச்னை. அமெரிக்காவுக்குக் கூட சீனாவின் ஆயுத பலம் அதிகரிப்பு, வர்த்தகத்தில் அந்நாட்டின் கை ஓங்குவதும்தான் பிரச்னைகள்.
  • ஆனால், இந்தியாவுக்கு சீனாவுடன் இருப்பது பிரச்னைகள் மட்டும்தான். கடந்த ஆண்டில் 4 மாத இடைவேளையில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் 3 முறை சந்தித்துப் பேசினர். எனினும், சர்வதேச விவகாரங்களில் தீவிர இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ளவில்லை. முக்கியமாக, பயங்கரவாதி மசூத் அஸார் விவகாரத்தில் முழுமையான பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை  சீனா எடுத்துள்ளது.
நெருக்கடி
  • இதுபோன்ற விஷயங்களுக்காக சீனாவுக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடனான வர்த்தக உறவைக் குறைக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருள்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி மூலம் அதிக வரி விதித்தது இந்தியா. அடுத்தகட்டமாக சீன இறக்குமதி டயருக்கு கூடுதல் வரி விதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் 1) சூரியமின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பேட்டரி தயாரிப்புக்கான பொருள்களின் இறக்குமதிக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள சீனாவுக்கு எதிரான வர்த்தகப் பதிலடியாகவும் அமைந்துள்ளது.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்