TNPSC Thervupettagam

ஒசாகா சந்திப்பு

June 29 , 2019 2023 days 1060 0
  • ஜப்பானிலுள்ள ஒசாகாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு முக்கியமான குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இருக்கிறார். ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்புக் கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து ஜப்பான்- அமெரிக்கா-இந்தியா முத்தரப்புக் கூட்டத்திலும் கலந்துகொள்ளும் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. ஒசாகாவில் அமெரிக்க அதிபரைப் பிரதமர் மோடி சந்திப்பதற்கு முன்னால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ இந்த வாரத் தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி வரிகள் குறித்த கருத்து வேறுபாடுகளை அகற்றுவதும், இந்தியாவை அமெரிக்க அணியின் முக்கியமான நட்பு நாடாக இணைத்துக் கொள்வதும்தான் பாம்பேயோ விஜயத்தின் அடிப்படை நோக்கம்.
இந்தியா – அமெரிக்கா
  • இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இறக்குமதி வரிகள் குறித்த வர்த்தக கருத்து வேறுபாடு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அளவில் இல்லை என்றாலும்கூட, இந்தியாவின் நலனைப் பாதிக்கும் அளவில் இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. அமெரிக்கா, இந்தியப் பொருள்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. அதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பல பொருள்களுக்கு அமெரிக்காவில் இறக்குமதி சலுகை வழங்கப்பட்டிருந்தன.
  • திடீரென்று அமெரிக்கா, இந்தியாவுக்கு அளித்திருந்த சிறப்புச் சலுகையை விலக்கிக் கொண்டது. அதன் விளைவாக ஆண்டுதோறும் 150 கோடி டாலர் (ரூ.10,342 கோடி) மதிப்புள்ள எக்கு, அலுமினியம் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவும் தன் பங்குக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் 28 பொருள்களின் மீதான வரியை அதிகரித்தது. அதுமுதலே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் சமநிலை தகர்ந்திருக்கிறது.
நட்பு நாடு
  • வர்த்தகத்திலும் சரி, முதலீட்டிலும் சரி மிக அதிக அளவில் இந்தியாவுடன் தொடர்புடைய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு  கடந்த 20 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அதிக திறன் கொண்ட ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் இந்த ஆண்டு அமெரிக்காவிடமிருந்து வாங்கியிருக்கிறது. அப்படியிருந்தும்கூட அமெரிக்கா, இந்தியாவின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் சில முடிவுகளை எடுத்திருக்கிறது.
  • குறிப்பாக, ஈரானிலிருந்தும் வெனிசுலாவிலிருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகை அமெரிக்காவால் விலகப்பட்டிருப்பது மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
  • பாம்பேயோ குறிப்பிட்டிருப்பதுபோல, எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் எந்த ஒரு நாடும் தான் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிட முடியாது. இரு தரப்புகளும் சில சலுகைகளையும் சமரசங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். வர்த்தக உறவு பலப்படுத்துவது என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று மைக் பாம்பேயோ விமானம் ஏறுவதற்கு முன்னால் நிருபர்களிடம் தெரிவித்த கருத்து நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.
முதலீடுகள்
  • இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதும், வர்த்தகத்தில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது என்றாலும்கூட, ஒருவகையான அதிருப்தியும் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இணைய வணிகத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் சில தடைகள், இந்தியாவின் வர்த்தக நடைமுறைகள் உள்ளிட்டவை அமெரிக்க நிறுவனங்களை பாதித்திருக்கின்றன.
  • அதேநேரத்தில் அமெரிக்காவைப் புறக்கணித்துவிட்டு உலகமய சூழலில் இந்தியாவால் தனித்து இயங்கவோ, நமது பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படவோ இயலாது என்கிற நிதர்சனத்தையும் நாம் புரிந்துகொண்டாக வேண்டும்.
  • 45 ஆண்டுகளில் மிக அதிகமான வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் காணப்படுகிறது. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தப் பின்னணியில் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக யுத்தத்தில் சீனாவைத் தொடர்ந்து அடுத்த இலக்காக இந்தியா சிக்கிக்கொள்ளக் கூடாது.
  • பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்வது, எரிசக்தி வர்த்தகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளால் அதிபர் டிரம்ப்பை சமாதானப்படுத்த முயற்சிப்பதில் பயனில்லை.
  • எல்லா ஆசிய நாடுகளும் பொருளாதாரத்தில் தங்களை வளர்த்துக் கொண்டிருப்பதன் பின்னணியில் அவர்களது ஏற்றுமதி காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதியில் தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  • வர்த்தகப் போரில் சீனப் பொருள்களின் மீது கடுமையான தடைகளை அமெரிக்கா விதித்திருக்கும் நிலையில், சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்க முற்படுவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
ஜி20
  • இந்தப் பின்னணியில்தான் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரை சந்தித்திருக்கிறார். தேர்தலில் மிகப் பெரிய வெற்றியடைந்து இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, விரைவில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் டொனால்ட் டிரம்ப் சந்தித்தார் என்கிற பின்னணியில்தான் அவர்களது சந்திப்பை அணுக வேண்டும்.
  • பிரநதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு சுமுகமாகவும், இந்தியாவுக்குச் சாதகமாகவும் இருக்கிறது என்பதைப் பொருத்து, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையப் போகிறது. அதனால், ஒஸாகா சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி: தினமணி (29-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்