TNPSC Thervupettagam

காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை

September 27 , 2018 2279 days 22771 0

காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை

  • அண்ணாதுரை 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது தந்தை நடராஜ முதலியார் ஆவார். இவர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது தாய் பங்காரு அம்மாள் ஆவார். இவரது தாய் கோவிலில் பணியாற்றி வந்தார். இவரது சகோதரி ராஜாமணி அம்மாள் ஆவார்.
  • காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை “அண்ணா” அல்லது “அறிஞர் அண்ணா” என்று புகழாரத்துடன்அழைக்கப்படுகிறார்.
  • தமிழ் மொழியில் பேச்சுத் திறன் மற்றும் பாராட்டத்தக்க எழுத்தாளர் ஆகியவற்றிற்காக அறிஞர் அண்ணா வெகுவாக அறியப்படுகிறார்.
  • திராவிடக் கட்சிகளின் முதலாவது அரசியல் தலைவராக அரசியல் பிரச்சாரத்திற்கு அறிஞர் அண்ணா தமிழ் சினிமாத் துறையைப் பயன்படுத்தினார்.

இளமைக் காலம்

  • அறிஞர் அண்ணா பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் தமது குடும்ப நிதிச் சுமையைக் குறைப்பதற்காக பள்ளிப் படிப்பை மேலும் தொடராமல் நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
  • இவர் 1934 ஆம் ஆண்டில் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
  • இவர் பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
  • இவர் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார்.
  • பின்னர் அண்ணா ஆசிரியர் பணியில் இருந்து விலகி பத்திரிக்கை மற்றும் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மதம் - அண்ணாவின் பார்வை

  • அண்ணாதுரை மூடநம்பிக்கைகள் மற்றும் மதச் சுரண்டல்களைச் சாடினார். ஆனால் இவர் சமூகத்தில் நிலவும் ஆன்மீக விழுமியங்களை எதிர்த்து போராடவில்லை.
  • கடவுள் மற்றும் மதம் குறித்த தனது நிலைப்பாட்டினை “நான் தேங்காயையும் உடைக்க மாட்டேன் (ஒரு வகையான கடவுள் வழிபாடு) பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்” என்று விளக்கம் அளித்தார்.
  • அண்ணாதுரை பின்னாளில் கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டை “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று விளக்கினார்.

அரசியல் பயணம்

  • 1935 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியில் இணைந்த போது அண்ணாவின் அரசியல் பயணம் தொடங்கியது.
  • அண்ணாதுரை நீதிக்கட்சியில் இணைந்த போது நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் ஈ.வெ. இராமசாமி பதவி வகித்தார்.
  • அண்ணாதுரை நீதிப் (ஜஸ்டிஸ்) பத்திரிக்கையின் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  • அண்ணாதுரை பின்னாளில் விடுதலை என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். தமிழ் வார இதழான குடியரசு என்ற இதழிலும் அவர் தொடர்பிலிருந்தார்.

  • அண்ணாதுரை திராவிட நாடு என்ற தனது சொந்த பத்திரிக்கையை பின்னர் தொடங்கினார்.
  • 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ல் பெரியார் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், அண்ணாதுரை தீர்மானம் இயற்றி நீதிக் கட்சியை ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகம்

  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று சென்னையின் ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் ஐம்பெரும் தலைவர்களான அண்ணாதுரை, குடந்தை கே. கே நீலமேகம், வி. ஆர் நெடுஞ்செழியன், கே. எ மதியழகன், என். வி நடராஜன் ஆகியோர் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டதை அறிவித்தனர்.
  • அறிஞர் அண்ணா தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவர்களின் சமூக நீதிக்காகப் பாடுபட்டார்.
  • 1953 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணாதுரை மூன்று போராட்டங்களை நடத்துமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அறிவுரை வழங்கினார்.
  • இரயில் நிலையப் பலகைகளில் இந்தி வார்த்தைகளின் மீது தார் பூசியதை “குழந்தைத்தனமான செயல்” என்று இந்தியாவின் அப்போதைய பிரதமரான ஜவஹர்லால் நேரு கூறியதை DK மற்றும் DMK கண்டிப்பது.
  • சாதி அடிப்படையிலான தொழிலை மறைமுகமாக ஊக்குவிக்கக்கூடிய புதிய கல்வித் திட்டமான ‘குலக் கல்வித் திட்டத்தை’ அப்போதைய மதராஸ் மாகாண முதல்வர் சி. இராஜகோபாலச்சாரி (இராஜாஜி) அறிமுகப்படுத்தினார். இதனை எதிர்த்து போராட்டம் நடத்துவது.
  • ‘கள்ளக்குடி’ என்பதை ‘தால்மியாபுரம்’ என்று பெயர் மாற்றியதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது. தால்மியா என்ற பெயர் குறியீடாக தென் இந்தியா மீது வட இந்திய ஆதிக்கத்தை குறித்தது. இதற்காக நடைபெற்ற போராட்டத்தில் அறிஞர் அண்ணா மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

திராவிட நாடு

  • 1962 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மேலவையில் “திராவிடர்களுக்குத் சுய நிர்ணய உரிமை வேண்டும்.... தென் இந்தியர்களான எங்களுக்குத் தனிநாடு வேண்டும்” என்று கூறினார்.
  • அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியான DMK-வைச் சேர்ந்தவர்கள், “திராவிடர்களுக்காக தனிச்சுதந்திர திராவிட நாடு” என்பதற்கு மாற்றாக “தமிழர்களுக்காக தனிச் சுதந்திர தமிழ்நாடு” என்ற கோரிக்கையை வைத்தனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்1938 மற்றும் 1965

1938

  • 1928 ஆம் ஆண்டில் மோதிலால் நேரு தலைமையிலான குழு இந்தியாவில் அலுவலகப் பணிக்கான பொருத்தமான மொழியாக இந்தி மொழியை முதன்முறையாக பரிந்துரை செய்தது.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களால் இச்செயல் எதிர்க்கப்பட்டது.
  • அண்ணாதுரையுடன் கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் இச்செயலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • காஞ்சிபுரத்தில் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் நடைபெற்ற முதலாவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார்.

மதராஸ் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் - 1965

  • இந்தித் திணிப்பு தொடர்ந்து நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு 1960 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சென்னையின் கோடம்பாக்கத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் DMK-ன் இந்தித் திணிப்புக்கு எதிரான திறந்தவெளி மாநாடு நடைபெற்றது.
  • தமிழ்நாட்டிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வருகையின்போது கறுப்புக் கொடி காண்பிப்பதற்காக முக்கியத் தலைர்களிடம் அறிஞர் அண்ணா கறுப்புக் கொடிகளை வழங்கினார். இந்தி எதிர்ப்பை உணர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தி மொழி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியாவின் அலுவலக மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

  • இது தொடர்பாக அரசியலமைப்புத் திருத்தம் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. அண்ணாதுரை 1965 ஆம் ஆண்டில் இந்தியாவின் 15 – வது குடியரசு தினம், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினம் மற்றும் இந்தியாவின் அலுவலக மொழியாக இந்தி மொழி நடைமுறைக்கு வந்த தினமாக ஜனவரி 26-ஐ “துக்க தினமாக” அறிவித்தார்.
  • அண்ணா போராட்டங்களின் முழக்கத்தை “இந்தி மொழியை நீக்கு” என்பவற்றிலிருந்து “குடியரசு நீடூழி வாழ்க” என்று மாற்றினார்.
  • இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் DMK வெற்றி பெற உதவி செய்தது. இத்தேர்தலில் DMK வெற்றி பெற்று அண்ணா மதராஸ் மாநிலத்தின் புதிய முதலமைச்சரானார்.

இலக்கியப் பங்களிப்புகள்

  • அறிஞர் அண்ணா தமிழ்ப் பொது மேடைகளில் உவமை, உருவகம், எதுகை மற்றும் மோனை ஆகியவற்றைப் பயன்படுத்தி பேசும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.
  • இவர் அரசியல் கருத்துகள் அடங்கிய பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் மற்றும் தொடர்களை எழுதி வெளியிட்டார்.
  • திராவிடர் கழகத்தில் இருக்கும்போது அண்ணா தான் எழுதிய சில தொடர்களில் தாமே நடித்தார். அறிஞர் அண்ணாதுரை ஒட்டு மொத்தமாக 6 திரைக்கதைகளையும் எழுதியுள்ளார்.
  • அண்ணாவின் முதல் திரைப்படம் 1948-ல் நல்ல தம்பி என்பதாகும்.
  • வேலைக்காரி (1949) மற்றும் ஒரு இரவு (1951) ஆகியவை அண்ணா எழுதிய சில நாவல்கள் ஆகும். இந்த நாவல்கள் பின்னாளில் திரைப்படங்களாக வெளிவந்தன.
  • D.V. நாராயணசாமி, K.R. இராமசாமி, N.S. கிருஷ்ணன், S.S. இராஜேந்திரன், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி. இராமச்சந்திரன் ஆகிய புகழ்பெற்ற மேடை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சில ஆண்டுகள் அண்ணாவுடன் இருந்தனர்.

  • சாதி அடிப்படையிலான ஆதிக்கம் இல்லாத சமமான சமூக வாழ்வை கொண்டுவரும் நோக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக “ஆரிய மாயை” போன்ற சமூக அணுகுமுறைகள் சார்ந்த புத்தகங்களை அணணாதுரை எழுதினார்.
  • அவருடைய படைப்புகளில் சில
    • அண்ணாவின் சட்டசபை சொற்பொழிவுகள் (1960)
    • இலட்சிய வரலாறு (1948)
    • வாழ்க்கைப் புயல் (1948) மற்றும்
    • ரங்கோன் இராதா
  • அவருடைய புனைவுக் கதைகளில் சில
    • கபோதிபுரக் காதல்
    • பார்வதி பி.ஏ. கலிங்க இராணி மற்றும்
    • பாவையின் பயணம்

            ஆகியவை அவரது கொள்கைகளைக் கொண்டிருந்தன.

வகித்த பதவிகள்

  • 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் அண்ணாதுரை, தனது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்திலிருந்து மதராஸ் சட்ட சபைக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணாதுரை சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவரானார்.
  • 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 50 இடங்களில் வெற்றி பெற்ற DMK ஆனது காங்கிரசை தவிர்த்த மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அண்ணா இத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒன்பது (9) மாநிலங்களில் எதிர்க்கட்சிகளிடம் தோல்வியடைந்தது. ஆனால் மதராஸ் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் அல்லாத ஒற்றைக் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.
  • N. அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் அரசாங்கம் அமைத்தது. நாட்டில், அந்தக் காலகட்டத்தில் அண்ணாதுரை தலைமையிலான அமைச்சரவையானது இளம் அமைச்சரவையாக விளங்கியது.
  • 1969 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 20 நாட்கள் பணியாற்றிய முதலாவது முதலமைச்சர் அண்ணாதுரை ஆவார். மதராஸ் மாநிலத்தின் பெயர் ‘தமிழ்நாடு’ என மாற்றும் வரை 1967 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகாணத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி நபராக அண்ணா முதலமைச்சராகப் பணியாற்றினார்.
  • அறிஞர் அண்ணா இரு பதவிகளையும் வகித்த திராவிடக் கட்சியின் முதலாவது உறுப்பினர் ஆவார்.

சாதனைகள்

  • நாட்டில் முதன்முறையாக சுய மரியாதைத் திருமணங்களை அண்ணா சட்டப்பூர்வமாக்கினார். இச்சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1967 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று நிறைவேற்றப்பட்டு, 1968 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று குடியரசுத் தலைவரின் இசைவைப் பெற்றது. இச்சட்டம் அரசிதழில் 1968 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்டது.
  • மேலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முதன்முறையாக மானிய விலையில் அரிசி வழங்கப்படும் என்று அண்ணா 1967 ல் அறிவித்தார். இவர் 1 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஒரு காலகட்டத்தில் தனது ஆட்சியில் இதை நடைமுறைப்படுத்தினார். பின்னாளில் இத்திட்டம் கைவிடப்பட்டது.
  • தமிழ்நாடு என்ற பெயர் மாற்றமானது 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான மசோதா 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • 1967 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் தலைமையின் கீழ் உலக தமிழ் மாநாடு நடத்தப்படுவதற்கு அண்ணாதுரை முக்கியக் கருவியாகச் செயல்பட்டார்.
  • அண்ணாதுரை தலைமையிலான அரசாங்கமானது இரு மொழிக் கொள்கையை (1968, ஜனவரி 23) அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய சாதனையாகும். அந்தக் காலகட்டத்தில் மூன்று மொழிக் கொள்கை நடைமுறையிலிருந்தது.
  • அண்ணா தலைமையிலான மாநில அரசாங்கமானது 1969 ல் மாநில கொள்கையான சமஸ்கிருதத்தில் இருந்த “சத்யமேவ ஜெயதே” – வை தமிழில் “வாய்மையே வெல்லும்” என்று மாற்றியது.
  • அண்ணாதுரை முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் 1968 ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.
  • 1969 ஆம் ஆண்டில் அரசுக் கடித போக்குவரத்துகளில் சமஸ்கிருத வார்த்தையான “ஸ்ரீ”  என்பது  “திரு” என்று அண்ணாதுரையால் மாற்றப்பட்டது.
  • 1969 – இல் தலைமைச் செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையை “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என தமிழக அரசு பெயர் மாற்றியது.

 

சிறப்புகள் - C.N. அண்ணாதுரை

  • இவருக்கு 1968 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் ஷப் உறுப்பினருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த அந்தஸ்தைப் பெறும் முதலாவது அமெரிக்கர் அல்லாதவர் அண்ணாதுரை ஆவார்.
  • 1968 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாதுரைக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
  • 1978 - ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகம் இவரது பெயரால் ஏற்படுத்தப்பட்டது.
  • DMK-வின் தற்போதைய தலைமை அலுவலகம் 1987-ல் கட்டப்பட்டது. அண்ணாதுரையின் பெயரால் ‘அண்ணா அறிவாலயம்’ என இக்கட்டிடத்திற்கு பெயரிடப்பட்டது.
  • சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான மவுண்ட் ரோடு, அண்ணாவின் பெயரால் ‘அண்ணா சாலை’ (அண்ணா மேம்பாலம்) எனப் பெயரிடப்பட்டது. தற்பொழுது அச்சாலையில் அண்ணாதுரையின் உருவச் சிலை இடம்பெற்றிருக்கிறது.
  • மத்திய அரசாங்கமானது 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக அண்ணாதுரையின் பெயரில் 5 ரூபாய் நாணயங்களை வெளியிட்டு அவரைச் சிறப்பித்தது.
  • யேல் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கிலம் பேசக்கூடிய ஒருவர் அண்ணாவிடம் வினா ஒன்றை எழுப்பினார். ஆங்கிலத்தில் ஏனென்றால் என்ற வார்த்தையை மூன்று முறை பயன்படுத்தி வாக்கியம் அமைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அண்ணாதுரையிடமிருந்து உடனடியாக “எந்த ஒரு வாக்கியமும் ஏனென்றால் என்ற வார்த்தையைக் கொண்டு முடிவடையாது  ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒரு இணைப்புச் சொல்” என்று பதில் கூறினார்.
  • ராஜ்ஜிய சபாவில் இவரது பேச்சுகளுக்காக சிறந்த பாராளுமன்றவாதி என்று ஜவஹர்லால் நேரு அண்ணாதுரையைப் புகழ்ந்தார்.
  • இந்தியா டுடே பத்திரிக்கையின் “சிந்தனை, செயல்பாடு, கலை, கலாச்சாரம் மற்றும் மனநிலை ஆகியவற்றின் மூலம் இந்தியாவை வடிவமைத்ததில் முதல் 100 நபர்கள்” என்ற பட்டியலில் அண்ணாதுரையின் பெயர் இடம் பெற்றிருந்தது.
  • 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று சென்னையில் அண்ணாதுரையின் நினைவாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது.

இறப்பு

  • அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 அன்று தனது 59 வது வயதில் மரணமடைந்தார்.
  • சென்னையின் ராஜாஜி மகாலில் இவருக்கு இறுதி மரியாதை செலுத்த பெருமளவில் மக்கள் கூடினர். இது ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பிடித்தது.
  • இவரது இறுதிச் சடங்கில் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர் என்று கணக்கிடப்பட்டது.

  • இவரது உடல் தற்பொழுது அண்ணா நினைவகம் என்று அழைக்கப்படும் மெரினா கடற்கரையின் வடக்கு எல்லையின் முடிவில் புதைக்கப்பட்டது.

- - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்