TNPSC Thervupettagam

காந்தியின் போராட்டக் களத்தில் தமிழ்ப் பெண்கள்

February 14 , 2019 2139 days 1925 0
  • “மிஸ்டர் காந்தி, இதுதான் தக்க தருணம். வெள்ளையின ரயில்வே ஊழியர்கள் தங்கள் பிரச்சினைக்காக வேலைநிறுத்தம் செய்யவிருக்கிறார்கள். இந்த சமயத்தில், 1914, ஜனவரி முதல் தேதியன்று டர்பனிலிருந்தும் நேட்டாலிலிருந்தும் இந்தியர்களாகிய நாம் அணிவகுத்துச் சென்று கைதாகும் போராட்டம் நடத்தினால் அடக்குமுறை ஆங்கிலேய அரசு ஸ்தம்பித்துப் போய்விடும். என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்ட தன் சகாக்களை காந்தி ஏறெடுத்துப் பார்த்தார்.
  • தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த தருணம் அது. இறுதிப் போராட்டத்தின் சிறப்பம்சமே அதிக அளவில் பெண்கள் பங்கேற்றதுதான். உலகிலேயே பெண்களை அதிக அளவில் திரட்டி, அவர்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட போராட்டங்களில் மிகவும் பிரம்மாண்டமானது இந்திய சுதந்திரப் போராட்டமே. அது காந்தியால்தான் சாத்தியமானது. ஆனால், அதற்கும் முன்னே சிறிய அளவில் அப்படிப்பட்ட ஒன்றுதிரட்டலைத் தென்னாப்பிரிக்காவிலும் காந்தி நிகழ்த்திக்காட்டினார்.
ட்ரான்ஸ்வால் சகோதரிகள்
  • தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தின்போதுதான் முதன்முறையாகப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கஸ்தூர்பாவும் போராட்டத்தில் கலந்துகொண்டார். தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணங்களைத் தவிர மற்ற திருமணங்கள் செல்லாது என்று கேப் உச்ச நீதிமன்ற நீதிபதி சியர்ல் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியதை அடுத்துதான் போராட்டத்தில் பெண்களும் குதித்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் குழுவொன்று ட்ரான்ஸ்வாலிலிருந்து அணிவகுத்துச் சென்று நேட்டால் பகுதிக்குள் நுழைந்து கைதாவது என்று திட்டமிடப்பட்டது.
  • இவர்கள் ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ என்று காந்தியால் அழைக்கப்பட்டார்கள். இந்தச் சகோதரிகள் கைதாகவில்லையென்றால் அங்கிருந்து நேராக நேட்டால் மாகாணத்தின் நியூகேஸில் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்துக்குச் சென்று அங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படித் தூண்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ பதினோரு பேரில் பத்துப் பேர் தமிழ்ப் பெண்கள். அதேபோல் காந்தியால் ‘நேட்டால் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட நேட்டால் பிரதேசப் பெண்களின் இன்னொரு குழு, அனுமதி இல்லாமல் ட்ரான்ஸ்வால் பகுதிக்குள் நுழைந்து கைதாக வேண்டும். இதுதான் திட்டம்.
  • திட்டமிட்டதுபோல் ட்ரான்ஸ்வாலில் நுழைய முயன்ற ‘நேட்டால் சகோதரிகள்’ கைதுசெய்யப்பட்டார்கள். அதையடுத்து போராட்டம் உக்கிரம் பெறவே மேலும் பல பெண்கள் இணைந்துகொண்டு அந்தப் போராட்டத்தை ஒரு தொடரோட்டம் போல மாற்றினார்கள். நேட்டால் பகுதிக்குள் நுழைந்த ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ கைதுசெய்யப்படாததால் அவர்கள் நேராக நியூகேஸில் சுரங்கப் பகுதிகளுக்குச் சென்றார்கள். அங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி வலியுறுத்தவே அவர்களும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ கைதுசெய்யப்பட்டு, மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களோ சுரங்கப் பகுதியில் வளாகங்களுக்குள்ளாகவே தடுத்து வைக்கப்பட்டனர்.
  • அந்தப் பகுதிக்குச் சென்ற காந்தி தொழிலாளர்களைக் கையில் போர்வையுடனும் ஆடைகளுடனும் வெளியேறத் தூண்டினார். நியூகேஸில் பகுதியில் டி.எம். லாஸரஸ் என்ற தமிழ்நாட்டு கிறிஸ்துவ நண்பர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டுக்கு வெளியே ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முகாமிட்டனர். இரவில், வெட்டவெளியில் அவர்கள் தூங்கினார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டு காந்தி வியந்துதான் போனார். அடுத்த கட்டமாக, எல்லோரும் சிறை செல்லலாம் என்ற யோசனையை முன்வைத்தார். அந்த யோசனையைக் கூறியபோதே சிறையில் அனுபவிக்கவிருக்கும் சித்ரவதைகளைப் பற்றியும் எடுத்துக்கூறினார். அதற்கெல்லாம் அந்தத் தொழிலாளர்கள் அஞ்சவில்லை.
காந்தி கொடுக்கும் சாவி!
  • நியூகேஸிலிலிருந்து 36 மைல் தொலைவில் உள்ள சார்லஸ்டவுனுக்கு அணிவகுத்துச் சென்று அங்கிருந்து டிரான்ஸ்வாலுக்கு நுழைய முயன்று கைதாவதே திட்டம். இந்தத் திட்டத்தை அரசுத் தரப்புக்கும் தெளிவாகத் தெரியப்படுத்தினார் காந்தி. காந்தியின் தனித்துவங்களில் ஒன்று, தனது திட்டத்தை எதிராளிக்குத் தெளிவாக முன்கூட்டியே உணர்த்திவிடுவது. இதனால் இரண்டு சாத்தியங்கள் எதிராளியின் முன் வைக்கப்படுகின்றன. ஒன்று, போராட்டம் தொடங்குவதற்கு முன்பே அதற்கு அஞ்சிக் கோரிக்கைகளை நிறைவேற்றிவிடுவது, இரண்டு, அப்படி நிறைவேற்ற முடியாது எனும் பட்சத்தில் போராட்டக்காரர்களைக் கைதுசெய்வது. ஆக, இரண்டுமே காந்தியின் விருப்பங்கள்தான் என்பதால் உண்மையில் காந்தி கொடுக்கும் சாவிக்கேற்ப ஆடும் பொம்மை போல் எதிராளி ஆகிவிடுகிறார். மூன்றாவதாக ஒரு சாத்தியமும் இருக்கிறது, போராட்டத்தை அதன் போக்கில் நடக்க விடுவது. மிகமிக முட்டாள்தனமான அரசு ஒன்றே அப்படி அனுமதிக்கும். எப்படிப் பார்த்தாலும் அரசுக்கு வேறு வழியில்லை.
  • நியூகேஸிலிலிருந்து 36 மைல்கள் அணிவகுத்து சார்லஸ்டவுனுக்குச் சென்றது காந்தியின் படை. வழியில் அவர்களுக்கு வேண்டிய உணவு முதலான உதவிகளை அந்தந்தப் பகுதிகளிலுள்ள இந்திய வியாபாரிகள், இன்னபிற நண்பர்கள் வழங்கினார்கள். சார்லஸ்டவுனுக்குச் சென்ற பிறகும் போலீஸார் காந்தியையும் கூட்டத்தையும் கைதுசெய்யவில்லை. அங்கிருந்து 8 மைல் தூரம் முன்னேறிய பிறகே பாம்ஃபோர்டு என்ற ஊரில் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார்.
கடுமையான தண்டனை கொடுங்கள்!
  • போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக காந்தியை காலன்பாக் ஜாமீனில் எடுத்தார். மறுபடியும் அணிவகுப்புக்குத் தலைமைதாங்கி காந்தி நடத்திச்சென்றார். ஸ்டாண்டர்ட்டன் என்ற ஊரில் மறுபடியும் தடுத்து நிறுத்தப்பட்டு காந்தி கைதுசெய்யப்பட்டார். மறுபடியும் காலன்பாக் காந்தியை ஜாமீனில் எடுத்தார். காந்தி அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி முன்னேறிக்கொண்டிருந்தார். மூன்றாவது முறையாக காந்தியைக் கைதுசெய்ய அதிகாரிகள் வந்தார்கள். ‘அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்’ என்று சொல்ல வாயெடுத்த காந்தியை ‘நீங்கள் எனது கைதி, உரையாற்றுவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று அதிகாரி சொல்லிவிட்டு அவரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்தார்கள்; அவர்கள் நினைத்திருந்தால் போலீஸ்காரர், அதிகாரி, காரோட்டி உள்ளிட்ட மூவரையும் அந்த இடத்திலேயே கொன்றழித்திருக்கலாம். ஆனால், எந்த வித சலசலப்பும் இல்லாமல் காந்தியின் கைது நடந்தேறியது; இத்தனைக்கும் சத்தியாகிரகம் பரீட்சித்துப் பார்க்கப்படும் முதல் போராட்டம் அது என்பதை வைத்துப் பார்க்கும்போது, காந்தி தனது போராட்ட சகாக்களை எந்த அளவுக்குத் தயார்படுத்தியிருக்கிறார் என்பது நமக்குப் புலனாகிறது.
  • இந்த முறை காந்தி ஜாமீனில் வெளிவரவில்லை. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனக்குக் கடுமையான தண்டனை தரும்படி நீதிபதியைக் கேட்டுக்கொண்டார். காந்திக்கு எதிராக அவரது நண்பர்கள் காலன்பாக்கும் போலாக்கும் (திட்டமிட்டபடி) சாட்சி சொன்னார்கள். அதைத் தொடர்ந்து மூவரும் மாற்றி மாற்றி சாட்சி சொல்லிக்கொள்ள மூவருக்கும் மூன்று மாதங்கள் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. காந்தியும் அவரது சகாக்களும், எந்தவித அதிகாரமும் இல்லாத நிலையிலேயே, எதிராளியை வைத்து எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்கள் என்பதையும் காந்தி இழுத்த இழுப்புக்குத் தங்களை அறியாமலேயே எதிராளிகள் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள் என்பதையும் பார்க்கும்போது சத்தியாகிரகம் என்ற அற்புத மந்திரத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை நம்மால்!தமிழர்களின் சத்தியாகிரகம்காந்தி முதலானோரை ட்ரான்ஸ்வால் அரசு கைது செய்தாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கைதுசெய்ய வில்லை. மாறாக, அவர்களை ரயிலில் அடைத்துக்கொண்டு சென்று முள்வேலி வளாகங்களுக்குள் அடைத்தது.
  • தொடர்ச்சியான சித்ரவதைகளுக்கு உள்ளாகியும் அந்தத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப ஒப்புக்கொள்ளவில்லை. அந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மேலும் ஐம்பதாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, காந்தியே எதிர்பார்த்திராத அளவுக்குப் போராட்டம் மேலும் பிரம்மாண்டமாக உருவெடுத்தது. இந்த ஐம்பதாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களில் 90%-க்கும் மேற்பட்டோர் தமிழர்களே என்பது காந்தியின் போராட்டங்களில், தென்னாப்பிரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி, தமிழர்கள் எந்த அளவுக்கு முதன்மை பெற்றிருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்தும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிறைவைப்பு என்று போய்க்கொண்டிருக்க ட்ரான்ஸ்வால் அரசுக்கு பிரிட்டனிலிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அழுத்தம் வர ஆரம்பித்தது. காந்தி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் உள்ள இரண்டு பேர் குறித்து காந்திக்கு மிகுந்த அதிருப்தி இருந்தது. இது குறித்து ஜெனரல் ஸ்மட்ஸுக்கு காந்தி புகார் கடிதம் எழுதினாலும் ஸ்மட்ஸ் அதை நிராகரித்தார்.
  • இதைத் தொடர்ந்து 1914, ஜனவரி முதல் தேதியன்று டர்பனிலிருந்தும் நேட்டாலிலிருந்தும் காந்தி தலைமையிலான இந்தியர்கள் அணிவகுத்துச் சென்று கைதாவது என்று முடிவுசெய்யப்பட்டது. அதே சமயத்தில் தென்னாப்பிரிக்க ரயில்வேயின் வெள்ளையினத் தொழிலாளர்கள் தங்களின் பிரச்சினைக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஒரு பக்கம் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்; இன்னொரு பக்கம் இந்தியர்களின் போராட்டம் என்று அரசை ஸ்தம்பிக்க வைக்க அருமையான வாய்ப்பு என்று சொன்ன சகாக்களைப் பார்த்து காந்தி என்ன சொன்னார் தெரியுமா? “முடியாது. எதிராளி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சூழலில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வது சத்தியாகிரகத்துக்கு எதிரானது. ஆகவே, போராட்டத்தை ஒத்திவைத்துவிடுவோம்” என்றார்.
உலகின் ஆதரவு
  • போராட்டத்தை காந்தி நிறுத்திக்கொண்டார் என்ற தகவலை அறிந்து இந்தியாவிலிருந்தும் பிரிட்டனிலிருந்தும் தென்னாப்பிரிக்காவின் பல மூலைகளிலிருந்தும் ஆங்கிலேயரிடமிருந்து காந்திக்கு வாழ்த்துத் தந்திகள், கடிதங்கள் வந்து குவிந்தன. இந்தியத் தரப்பை மேலும் மேலும் தூய்மையானதொரு தார்மிக நிலையில் கொண்டுவந்து காந்தி வைத்த பிறகு, அரசுத் தரப்பால் அசைந்துகொடுக்காமல் இருக்க முடியவில்லை. ஜெனரல் ஸ்மட்ஸ் காந்தியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். காந்தியின் சகாக்கள் ஜெனரல் ஸ்மட்ஸ் ஏற்கெனவே ஏமாற்றியது குறித்து நினைவூட்டி அச்சுறுத்தினார்கள். எனினும், காந்தியைப் பொறுத்தவரை ஒருவரை முதன்முதலில் எந்தவித முன்முடிவுகளும் இல்லாத வெள்ளை மனதுடன் எப்படி அணுகுவாரோ அதே போன்றுதான் சம்பந்தப்பட்ட நபர் தன்னை ஏமாற்றிய பிறகும் அணுகுவார். எவ்வளவு ஏமாற்றங்கள், துரோகங்களுக்கும் பிறகும் மனிதர்களை நம்புவதில் அவர் என்றுமே சலித்துக்கொண்டதில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்