TNPSC Thervupettagam

காந்தி பேசுகிறார்: கோபம் வரும்போது...

June 12 , 2019 2040 days 978 0
  • என் கோபத்தைக் கட்டுப்படுத்த மிக மேலான படிப்பினை ஒன்றை அதிகக் கசப்பான அனுபவத்தின் மூலம் நான் அறிந்திருக்கிறேன். உஷ்ணம் அடக்கப்பட்டதும் அதுவே சக்தியாக மாற்றப்பட்டு விடுவதைப் போன்றே நமது கோபத்தை அடக்கிவிடும்போது அதுவும் சக்தியாக மாறிவிடுகிறது. இந்தச் சக்தி உலகத்தையே மாற்றக்கூடியது. எனக்குக் கோபமே வருவதில்லை என்பதல்ல. கோபம் வர நான் இடங்கொடுப்பதில்லை. பொறுமைக் குணத்தைக் கோபமின்மையாக நான் வளர்த்துக்கொண்டிருக்கிறேன். பொதுவாக, இதில் நான் வெற்றி பெறுகிறேன் என்றே சொல்ல வேண்டும். ஆனால், கோபம் வரும்போது மாத்திரம் அதை அடக்கிக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கம் அது; விடாமல் பயிற்சி செய்வதன் மூலம் இதில் வெற்றி பெற்றாகவும் வேண்டும்.
செயல்கள்
  • ஒருவருடைய செயலின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொண்டுவிடப் பார்ப்பது தவறும் ஒழுக்கங்கெட்டதுமாகும். ஒருவன், மிருக இச்சைகளைப் பூர்த்திசெய்துகொள்ள மிதமிஞ்சித் திளைத்துவிட்டு, அச்செயலின் விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்ப்பது இன்னும் அதிக மோசமானதாகும். இயற்கை அதிகக் கடுமையானது; அதன் நியதிகளை மீறுவோர் மீது அது முழு வஞ்சமும் தீர்த்துக்கொண்டு விடும். ஒழுக்கமான கட்டுத்திட்டங்களின் மூலம் மாத்திரமே ஒழுக்கமான பலன்கள் உண்டாகும். மற்ற கட்டுத்திட்டங்களெல்லாம், அவை எதற்கென்று இருக்கின்றனவோ அந்தக் காரியத்தையே அடைய முடியாதபடி செய்துவிடும்.
நடத்தை
  • இன்னொருவர் மீது குற்றங் கூறி, அவர் செய்தது சரி, தவறு என்று சொல்லிக்கொண்டிருப்பது நம் வேலை அல்ல. நாம் செய்வது சரியா என்பதைப் பரிசீலனை செய்வதிலேயே நாம் முழுவதும் ஈடுபட வேண்டும். நம்மிடமே ஒரு தவறு இருக்கிறது என்பதை நாம் பார்த்து.
  • அத்தகைய தவறு இருந்தும் நம் உறவினர்களும் நண்பர்களும் அதற்காக நம்மைப் புறக்கணித்து விடக்கூடாது என்று நாம் விரும்பிக்கொண்டிருக்கும் வரையில், மற்றவர்கள் நடத்தை விஷயத்தில் தலையிட நமக்கு உரிமையே இல்லை. நம்மையும் மீறி இன்னொருவரிடமிருக்கும் தவறை நாம் காண்போமாயின், நமக்குச் சக்தியிருந்து, அப்படிச் செய்வது சரியே என்று நாம் நினைத்தால், அவரை, அவரை மாத்திரமே, அது பற்றி நாம் கேட்க வேண்டும். ஆனால், இன்னொருவர் எவரையும் அதைப் பற்றிக் கேட்க நமக்கு உரிமை இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (12-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்