பெய்ஜிங் மற்றும் இந்தியாவின் தலைநகரப் பகுதியான டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய ஆதாரங்கள் சற்றேறக்குறைய ஒன்றாகவே உள்ளன. ஆனால் இந்த ஆதாரங்கள் தவிர பயிர் தாட்கள் எரிப்பின் மூலம் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 2013 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் காற்று மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் சீனா முன்னேற்றம் கண்டுள்ளது.
பெய்ஜிங் நகரத்தின் காற்று மாசுபாட்டின் துகள்மப் பொருள் 2.5 ஆனது (Particulate Matter) 54% அளவிற்கு குறைந்துள்ளது.
பெய்ஜிங் எவ்வாறு இதை சாத்தியமாக்கியது?
வாகனங்கள், கட்டுமானம்/புனரமைப்பு நடவடிக்கைகளின் மூலம் உருவாகும் மாசுகள் மற்றும் சாலைப் பராமரிப்பு ஆகியவற்றிலிருந்து வெளியேறும் உமிழ்வானது காற்று மாசுபாட்டுக்கு மிகவும் முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் துகள்மப் பொருள் 2.5 மாசுவின் 45 சதவிகிதமானது வாகனங்களின் மூலம் (குறிப்பாக டீசல் வாகனங்களின் மூலம்) ஏற்படுகிறது. எனவே, பெய்ஜிங் ஆனது சாத்தியமாகக் கூடிய இலக்குகளை நிர்ணயித்து, அந்த இலக்குகளை அடைவதை உறுதி செய்தது. இதற்காக சீன அரசானது பெய்ஜிங் நகரத்திற்குள்ளேயும் பெய்ஜிங் நகரத்தைச் சுற்றி உள்ளேயும் வெளியேயும் உள்ள சரக்குப் போக்குவரத்திற்கான முக்கிய பெருவழிப் பாதைகளில் டீசல் வாகனங்களின் இயக்கத்தைத் தடை செய்தது. இதன் பலனாக துகள்மப் பொருள் 2.5 ஆனது 35% அளவிற்கு குறைந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் 15 வரை அனைத்து வித கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெய்ஜிங்கில் தடை விதிக்கப்பட்டன. பெய்ஜிங்கில் மிகவும் அதிகமாக மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் மீது கார்பன் உமிழ்வுக் குறைப்பு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டன.
பெய்ஜிங்கைப் போல் ஏன் டில்லி நகரம் காற்று மாசுபாட்டுக் குறைப்பை மேற்கொள்ளவில்லை? டெல்லி தலைநகரப் பகுதி மற்றும் பெய்ஜிங் தலைநகரப் பகுதி ஆகியவற்றின் அணுகுமுறைகளில் வேறுபாடுகள் உள்ளன.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
முதலாவதாக இந்திய உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தில்லிக்கு குறைந்தபட்சம் 10,000 பேருந்துகள் தேவைப்படுகின்றன. ஆனால் தற்பொழுது தில்லியில் 5443 பேருந்துகள் மட்டுமே உள்ளன. ஆனால் பெய்ஜிங்கில் 28,343 பேருந்துகள் உள்ளன. மேலும் டெல்லி நகரம் 314 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைப்பையும் பெய்ஜிங் நகரம் 608 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைப்பையும் கொண்டுள்ளன. இந்தப் புள்ளி விவரங்களைக் கொண்டு டெல்லியின் மக்கட் தொகையான 21.7 மில்லியனையும், பெய்ஜிங்கின் மக்கட் தொகையான 20 மில்லியனையும் ஒப்பிடும் போது, தலைநகரப் பகுதியான டெல்லியில் தனியார் கார்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், மோட்டார், வாகனங்கள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக இருப்பது தெரிகிறது.
இரண்டாவதாக, இந்திய உச்ச நீதிமன்றமானது விரைவு புறவழிப் பாதைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது. எனவே மற்ற நகரங்களுக்கு செல்லும் டீசல் சரக்கு வண்டிகள் டெல்லி நகரத்தின் வழியே செல்லாது. ஆனால் இந்த விரைவு வழிப் பாதைகள் திட்டம் இப்போது தொடங்கினால் அடுத்த 13 ஆண்டுகள் கழித்துத் தான் நிறைவு பெறும். குந்திலி - மனேசார் - பால்வால் விரைவு வழிப் பாதையின் தாக்கம் சிறிது காலத்திற்குப் பின்பு தான் உணர முடியும். பெய்ஜிங் சரக்கு வண்டிகளின் இயக்கத்தை மாற்றியமைத்ததன் மூலம் ஏற்கெனவே 34% உமிழ்வுகளை குறைத்துள்ளது.
மூன்றாவதாக, டெல்லி தலைநகரப் பகுதியானது அனைத்து விதமான கட்டுமான நடவடிக்கைகளை 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 12 வரை 15 நாட்கள் மட்டுமே தடை செய்துள்ளது. மாசுக்களை கட்டுப்படுத்த பெய்ஜிங் நகரம் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நான்கு மாதங்களுக்கு கட்டுமான நடவடிக்கைகளைத் தடை செய்தது. மாசுபாடானது மேலும் மோசமான நிலையை அடையும் தருணத்தில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட 15 முக்கியமான இடங்களில் கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளை டெல்லி நீண்ட காலத்திற்குத் தடை செய்ய வேண்டும்.
நான்காவதாக குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக அதிகமாக மாசு ஏற்படுத்தும் செங்கல் சூளைத் தொழிற்சாலைகளை ஜிக்-ஜாக் தொழில்நுட்பத்திற்கு மாற்றுவது பாதி அளவில் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 30-க்குப் பின்னர் தொழிற்சாலைகளில் நிலக்கரியின் பயன்பாடு மீதான தடையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி திறம்பட நடைமுறைப்படுத்தவில்லை.
ஐந்தாவதாக, 2017 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில் மிகச்சிறிய அளவில் மட்டுமே பயிர்த்தாள் எரிப்பு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்நிகழ்வானது திருப்தி அளிக்கக் கூடியனவாக இல்லை.
பயிர்த் தாள் எரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலும், பெய்ஜிங் நடைமுறைப்படுத்தியதைப் போல் மற்ற ஆதாரங்களிலிருந்தும் வெளிப்படும் மாசுபாடுகளைத் தக்க தருணத்தில் இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் நேர்மையான கண்காணிப்பு ஆகியவற்றுடன் கூடிய கடுமையான செயலாக்கத்தின் மூலமே கட்டுப்படுத்த முடியும்.