TNPSC Thervupettagam

கிராமங்களைப் புறக்கணிக்க வேண்டாம்!

February 26 , 2019 2098 days 1643 0
  • இந்தியா கிராமங்களில்தான் உயிர் வாழ்கிறது என்றார் அண்ணல் காந்தி. அரசாங்கம் என்பது மக்கள் நன்மைக்காக, ஊழியர்களால் நடத்தப்படுகிறது.
  • கிராம மக்கள் முன்னேற்றம் என்பது கிராம ஊழியர்களின் பங்களிப்பினால்தான் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • முன்பெல்லாம் ஒரு கிராமத்தில் கிராம முன்சீப், கிராம கர்ணம், கிராம சேவக், கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் எனப் பலரும் பணியாற்றி வந்தார்கள்.
  • அவர்கள் கிராமங்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
  • கிராம நிர்வாக அலுவலர் அந்த கிராமத்திலேயே இருந்து  கிராமத்தின் நன்மை தீமைகள், ஒழுங்குமுறைகள், இருப்பிடச்சான்று, வருவாய்ச்சான்று போன்றவை வழங்க வேண்டும்.
  • ஒருவர் அடுத்தவர் இடத்தை, நிலத்தை அபகரித்து ஆக்கிரமிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அவர்களின் சான்றுகள் உச்சநீதிமன்றம் வரை செல்லுபடியாகும்.
  • கிராம மக்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்காக குடியிருப்பு வசதிகளோடு கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆரம்பித்தார்கள்.
  • அதுபோல கிராம மக்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு எந்த நேரமும் வியாதிகள் ஏற்படும் உடனே அவற்றை குணப்படுத்த வேண்டும்.
  • சினை மாடுகள் கன்று போட பெரிதும் சிரமப்படும்.
  • அதற்குரிய ஊழியர்களும், டாக்டர்களும் அங்கேயே குடியிருக்க வேண்டும்.
  • அதுபோல கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கிராமங்களில் குடியிருந்தால், காலை நேரங்களில் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் தெருவில் நடக்கும்போது மாணவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்.
  • ஆசிரியர்களுக்கும் பாடம் தயார் செய்து சொல்லிக் கொடுக்க நேரம் இருக்கும்.
  • இப்போது எல்லா கிராமங்களுக்கும் மின்சார வசதி வந்துவிட்டது.
  • திடீரென மின்சாரம் பழுதுவிட்டால், சரிசெய்வதற்கான லைன்மேன் கூட அந்தந்த கிராமங்களில் வசிப்பதில்லை.
  • தற்காலத்தில் பெரும்பாலும் படித்தவர்கள், பணக்காரர்கள், பதவியிலிருப்பவர்கள் கிராமங்களில் குடியிருக்க விரும்புவதே இல்லை.
  • நகரங்களில் குடியிருப்பது தான் மரியாதை என்று நினைக்கும் மனப்பான்மை வந்து விட்டது. கிராமத்தில் இருப்பவர் ஊராட்சி மன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்று விட்டால் உடனே பக்கத்தில் உள்ள நகரத்தில் குடிபெயர்ந்து விடுகிறார்.
  • கிராமங்களில் தான் விவசாயம் நடக்கிறது. ஆனால் விவசாய அதிகாரி, விதைச்சான்று அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானம் படித்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நகரத்தில் தான் குடியிருக்கின்றனர்.
  • அவர்களின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்துப் பூச்சிகொல்லி மருந்து வாங்கிவந்து அடிப்பதற்குள் பயிர்களெல்லாம் சேதமாகி விடுகின்றன. யாரை நொந்து கொள்வது?
  • கிராமத்திற்கு வேலை செய்வதற்காக அரசாங்க ஊதியம் பெறும் அரசு ஊழியர், கிராமத்திற்கு வசதிப்பட்டால் வந்து போவதையும், நகரங்களில் முழுநேரமாக வேறு தொழில் செய்து பகுதிநேரமாக அரசு வேலை செய்வதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
  • தண்டிக்க வேண்டிய அதிகாரிகளே அவரவர் பணியிடங்களில் குடியிருப்பதில்லை என்பதால் அவர்களைக் கண்டிக்க முடிவதில்லை.
  • கிராமங்களுக்கு நியமிக்கப்பட்ட நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் அந்தந்த கிராமங்களிலேயே குடியிருக்க வேண்டும்.
  • கிராமங்களுக்காகப் பணியாற்ற வந்த அலுவலர்கள், ஊழியர்களின் பிள்ளைகளை கிராமப் பள்ளிகளிலேயே படிக்க வைக்க வேண்டும்.
  • கிராமப் பள்ளிகளில் சில ஊர்களில் நான்கு ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டு இருந்தால் வழக்கமாக இரண்டு பேர் பணியில் இருப்பார்கள்;
  • மீதி இரண்டு பேருக்கு விடுப்பு விண்ணப்பம் வருகைப் பதிவேட்டிலேயே இருக்கும். இந்த நிலை மாற வேண்டும்.
  • கிராம சேவக் என்பவர்களுக்கு முன்பு வில்லேஜ் கைடு என்று பெயர். கிராமங்களில் வேளாண்மை நவீன முறைக்கு மாறியது என்றால், அது அவர்களால்தான். கிராமத்தில் குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததுமே ஆடு மேய்க்க அனுப்புகிற முறையை மாற்றி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்தது கிராம சேவக் தான்.
  • அந்த கிராம சேவக், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடிசை வீட்டிலும் தொடர்பு வைத்திருப்பார். வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள், அவர்கள் பிள்ளைகள் படிக்கிறார்களா?, என்ன படிக்கிறார்கள்? என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்.
  • மேலும், கிராமத்தில் வசிக்கும் மாணவர்களை பக்கத்து ஊர்களில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ப்பது, நோயுற்றவர்களை உரிய மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைப்பது,  ஆதரவற்றோர் - மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது போன்ற உதவிகளைச் செய்வார்.
  • இவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய் போய்விட்டன.
  • இந்த கிராம சேவகர்களின் பதவிப் பெயர், தற்போது கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) என்று மாற்றப்பட்டுவிட்டது.
  • அலுவலராகப் பெயர்மாற்றம் வந்த பிறகு கிராமத்தில் இருப்பது மரியாதைக் குறைவாகக் கருதி, நகரங்களில் குடியேறிவிட்டார்கள்.
  • இனியாவது, கிராமங்களின் நலன் கருதி நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அந்தந்த கிராமங்களிலேயே குடியிருக்க வேண்டும். துறைத்தலைவர்களுக்கு,
  • மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கி  அரசு  ஊழியர்கள் பணியாற்றும் ஊரிலேயே தங்கி பணியாற்றிட தமிழக அரசு ஆவன செய்ய      வேண்டும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்