TNPSC Thervupettagam

கிரேசி மோகன்: நகைச்சுவை வித்தகர்

June 13 , 2019 1846 days 877 0
  • சிலரைப் பார்த்தால் இவர்கள் எப்போதும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு மற்றவர்களையும் மகிழ்வித்துக்கொண்டே இருப்பார்களோ என்று தோன்றும். நகைச்சுவை ஒரு கலையாகக் கைவரப்பெற்றவர்களுக்குக் கிடைக்கும் வரம் அது. கிரேசி மோகன் அரிதான சிலரில் ஒருவர். ஜூன் 10 அன்று மதியம் மோகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தபோது அவருடைய மரணத்தைச் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் தவித்ததற்கு அதுவே முக்கியமான காரணம்.
  • இரு நாட்கள் சமூக வலைதளங்களில் அவருடைய பெயரை உச்சரித்தபடி இருந்தது தமிழ்ச் சமூகம். பலரும் ‘கிரேசி மோகன்’ என்ற பெயரைத் தமிழ் சினிமா வசனகர்த்தவாகவே மனதில் பதித்துவைத்திருக்கிறார்கள் என்பது அஞ்சலிக் குறிப்புகளையும் நினைவோடைகளையும் பார்த்தபோது தெரிந்தது. குறிப்பாக பலருடைய பதிவுகளில் கமல்ஹாசனோடு அவர் பணியாற்றிய சினிமாக்கள் பெரும் செல்வாக்கு செலுத்தின. மோகனின் உண்மையான சாதனையும் தமிழுக்கான அவருடைய பங்களிப்பும் சினிமாவுக்கு வெளியே அவர் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட நாடகத் துறையிலேயே இருக்கிறது; சினிமா அதனுடைய நீட்சிதான்.
மேடை நாடகத்தில் ஆழங்கால்
  • தமிழ் சினிமாவின் வரலாறே மேடை நாடகத்தின் நீட்சிதானே! அந்தத் தொடர் பயணத்தில் தன்னையும் பொருத்திக்கொண்டவர்தான் மோகன். தமிழில் மேடை நாடகங்களின் பொற்காலத்தில் வரலாற்று நாடகங்களும், புராண நாடகங்களும் கோலோச்சின; அதன் உச்சகட்டத்தில் சமூக நாடகங்கள் மேல் நோக்கி வந்தன. சினிமாவின் எழுச்சிக்குப் பிறகு மேடை நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழந்தன. பழைய பாணி வரலாற்று, புராண நாடகங்களுக்கான இடம் ஆவியானபோது, சமூக நாடகங்கள் நவீன நாடக வடிவம் நோக்கி நகர்ந்தன.
  • வெகுஜன தமிழ் நாடக மேடைகள் கிட்டத்தட்ட ஆளரவமற்றுப்போய்க்கொண்டிருந்த நாட்களில்தான் நகைச்சுவை நாடகங்கள் அந்த இடத்தை நிரப்பத் தொடங்கின. நாடகங்களின் வீழ்ச்சிக் காலத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கியவர் மோகன். கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலம் நாடக உலகில் அவர் பணியாற்றினார். 1970-களில் மேடை நாடகங்கள் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியவர் 1990-களில் ‘தூர்தர்ஷன்’ நாடகங்களைக் கையில் எடுத்தபோது தொலைக்காட்சியைத் தன் தளமாக மாற்றிக்கொண்டார். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளின் எழுச்சிக் காலத்தில் அங்கும் தன் கொடியைப் பறக்கவிட்டார். இதனூடாகவே அவருடைய சினிமா பிரவேசமும் நடந்தது. 2000-க்குப் பிறகு புதிய ஊடக வடிவமாக உருவெடுத்த யூட்யூப் சேனல்களிலும் அவர் தலைகாட்டத் தவறவில்லை. முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது எந்தத் தளத்துக்குச் சென்றாலும் நாடகத்திலேயே மோகனின் மனம் நிலைத்திருந்தது.
தமிழ், தமிழ், தமிழ்…
  • தன்னை முதன்மையாக ஒரு மேடை நாடககர்த்தாவகவே மோகன் கருதினார். சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு பிரபலங்கள் சந்தித்து உரையாடும் வகையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். கேள்வி கேட்ட வேகத்தில் பட்டென்று பதில் சொல்ல வேண்டிய ‘ரேபிட் ஃபயர்’ கேள்விகளைக் கேட்டார் தொகுப்பாளர். “உங்கள் மனதுக்கு மிகவுப் பிடித்தது சினிமாவா, எழுத்தா, மேடை நாடகங்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, உடனடியாக இரண்டு கைகளையும் உயர்த்தி ‘மேடை நாடகம்’ என்று அழுத்திச் சொன்னார் மோகன். நாடகத்தின் மீதான இத்தகைய அவருடைய நாட்டம் அவர் கொண்டிருந்த நகைச்சுவைத் திறன் மீதான பிடிப்பு மட்டும் அல்ல; தமிழின்பால் அவர் கொண்டிருந்த காதலும்தான்.
  • மோகனின் திரைப்பட நகைச்சுவைகள் பலவும் தமிழ்ப் பேச்சுமொழியின் சிறப்புத்தன்மையிலிருந்து முகிழ்ந்தவை. ‘சதிலீலாவதி’ படத்தில் “பிரேக்கு பிடிக்கலடி” என்று கமல் சொல்ல அவரது மனைவியாக நடித்த கோவை சரளா, “என்னையே பிடிக்கலையாமா பிரேக்கு பிடிக்கலன்னா என்ன?” என்ற சொல்வார். பிடிக்கவில்லை என்ற சொல்லுக்கு இருக்கும் இரு வேறு பொருள்களை வைத்து நகைச்சுவையை உருவாக்கி இருப்பார். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் தந்தையான டெல்லி கணேஷ் மகன் கமலிடம் “அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு அப்பன்கிட்டயே சொல்லிண்டிருக்காய் நீ” என்பார். ‘அப்பன் குதிருக்குள்ள இல்ல’ என்கிற தமிழ் சொலவடையை அறிந்தவர்கள்தாம் இந்த நகைச்சுவையைப் புரிந்துகொள்ள முடியும். தமிழைத் தவிர வேறு மொழிகளுக்கு இதில் உள்ள நகைச்சுவையைக் கடத்த முடியாது.
  • மோகன் கையாண்ட தமிழ் வார்த்தை விளையாட்டு தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த ஆழமான நேசத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆயிரக்கணக்கான வெண்பாக்களை எழுதியவர் அவர் என்பது. மிக ஆழமான தமிழ் வாசிப்பு மோகனுக்கு உண்டு. எழுத்தாளரும் கிரேசி மோகனின் நண்பருமான இரா.முருகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “மோகன் மரபுக் கவிதைகளில் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். எனக்கு அவரைப் 10 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். தினமும் குறைந்தது ஐந்து வெண்பாக்களை எழுதிவிடுவார். என் கணக்குப்படி குறைந்தபட்சம் 20,000 வெண்பாக்களையாவது எழுதியிருப்பார். காளிதாசனின் ‘குமாரசம்பவ’த்தை முழுமையாக வெண்பாக்களாக இயற்றியிருக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழில் 30 சந்தங்களை பயன்படுத்தியிருக்கிறார். இவர் அத்தனை சந்தங்களையும் எடுத்து பெருமாள் மீது திருப்புகழ் எழுதியிருக்கிறார்!”
திரைப்படங்களில் தனித்துவம்
  • தமிழ் நகைச்சுவை உலகில் கிரேசி மோகனின் முக்கியமான பங்களிப்பு என்று சொல்ல வேண்டுமென்றால் நகைச்சுவை என்ற பெயரில் நிறம், சாதி, மதம், இனம், பாலினத்தை வைத்து ஒருவரை இழிவுபடுத்தும் வசனங்களை அவர் அறவே தவிர்த்தமைதான். அவருடைய ஒரு நாடகத்தில் – பிற்பாடு அது சில திரைப்படங்களிலும் அது பிரதிபலித்தது - செவித்திறன் குறைந்த கதாபாத்திரத்தைக் கேலிசெய்யும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. பிற்காலத்தில் இதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, அதன் பிறகு உடல் குறைபாடுகளைக் கேலிசெய்யும் வசனங்களையும் முற்றிலுமாகத் தவிர்த்தார் மோகன். தமிழ் நாடகங்கள் ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று உழைத்துவரும் அர்ப்பணிப்பு மிக்கோர் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டவர் கிரேசி மோகன். அந்தப் பணி என்றும் நினைவுகூரப்படும்!

நன்றி: இந்து தமிழ் திசை(13-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்