TNPSC Thervupettagam

குடிநீர்ப் பிரச்சனை

February 20 , 2019 2107 days 1456 0
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நீர் கொள்கையின்படி, வேளாண்மையைவிட மக்களின் குடிநீர்த் தேவைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும், கிராமங்களில் தினமும் 40 லிட்டரும், நகர்ப்புறங்களில் 90 முதல் 135 லிட்டரும் குடிநீர் அளிக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை  
  • நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமும் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி செலவிட்டு மக்களுக்கான இந்த அடிப்படை உரிமையை நிலைநாட்ட போராடி வருகின்றன. அதன் பலனாக, இந்தியாவின் அநேக ஆற்றுப்படுகைகளிலிருந்து லட்சக்கணக்கான கிராமங்களுக்கு ஒவ்வொரு நாளும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் காவிரிப் படுகையிலிருந்து 17 மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு தினமும் ஒவ்வொருவருக்கும் 20 முதல் 40 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வீராணம் ஏரி மூலம் சென்னையும் பயன் பெறுகிறது.
  • இது தவிர, எங்கெல்லாம் நிலத்தடிநீர் கிடைக்கிறதோ, அங்கிருந்து ஓரளவு குடிநீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுத்து மேற்கண்ட ஆற்று நீருடன் சேர்த்து 40 லிட்டர் சராசரி அளவாக அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களைக் காட்டிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நீர்த் தேவை மிக அதிகமாக உள்ளது. அதிகரித்துவரும் நகர் மயமாதலும், தொடர்ந்து பெருகிவரும் மக்கள் தொகைப்பெருக்கமும் இதன் காரணமாகும்.
  • 2001, 2011 மற்றும் 2019-இல் தமிழகத்தின் மக்கள்தொகை முறையே 21 கோடி, 7.21 கோடி மற்றும் 8.08 கோடி; இதே காலகட்டத்தில், சென்னையின் மக்கள்தொகை முறையே 42 லட்சம், 47 லட்சம் மற்றும் 1.07 கோடி. அதாவது, தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில், சென்னையின் மக்கள்தொகை இந்த மூன்று காலகட்டங்களில் முறையே 6.79%, 6.49% மற்றும் 13.24%-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில்  சென்னையின் மக்கள்தொகை 2011-ஐ விட சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
அறிக்கை
  • 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 34 லட்சம் பேர், அதாவது ஆண்டுதோறும் 2.57% அளவு பெருக்க அளவில் சென்னையில் அதிகரித்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது (ஆதாரம்: ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக நகர்மயமாதல் தகவல் தொகுப்பு அறிக்கை).
  • ஆனால், மக்களுக்கான குடிநீர் ஆதாரங்கள் எந்த அளவு இந்த 8 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனப் பார்த்தால், மிகச் சிறிய அளவே அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது.
  • சென்னையின் ஆண்டு சராசரி மழையளவு 1324 மி.மீ. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிகபட்சமாகக் கிடைக்க வேண்டியது 790 மி.மீ. வடகிழக்குப் பருவமழைதான், சென்னையின் குடிநீர்த் தேவையைப் பிரதானமானதாகப் பூர்த்தி செய்வதாகும்.
குடிநீர் பிரச்சனை
  • ஆனால், 2018-இல் மழையளவில் 56% குறைந்து 344 மி.மீ. மழை மட்டுமே பதிவானது. இதுவே தற்போதைய குடிநீர்ப் பிரச்னையின் மூல காரணமாகும். சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நான்கு முக்கிய ஏரிகளான பூண்டி (கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி); சோழவரம் (1,081 மில்லியன் கன அடி); செங்குன்றம் (3,300 மில்லியன் கன அடி);  செம்பரம்பாக்கம் (3,645 மில்லியன் கன அடி) ஆகியவற்றில் 11,257 மில்லியன் கன அடி, அதாவது 11 டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கன அடி) அளவு மழைக்கால நீரைச் சேமித்து ஆண்டு முழுவதுக்கும் உள்ள தேவையில் ஏறத்தாழ 70% பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • சென்னைக்கு மாதந்தோறும் சராசரியாக 40 டி.எம்.சி. குடிநீர் தேவை. தற்போது தினமும் வழங்கப்படுவது 550 மி.லி.; அதாவது, மாதத்துக்கு 0.580 டி.எம்.சி.  இந்தக் குடிநீர்த் தேவையை மேற்கண்ட நான்கு குடிநீர் ஆதாரங்கள் தவிர, ஆந்திர மாநிலத்திலிருந்து கிடைக்கும் தெலுங்கு-கங்கை நீரும் (அதிகபட்சம் 2001-02-ஆம் ஆண்டில் 6.59 டி.எம்.சி. கிடைத்தது), காவிரியின் வீராணம் திட்டம் மூலம் (தினமும் 180 மில்லியன் லிட்டர் வீதம் அதிகபட்சம் 6 மாதங்களுக்கு) கிடைக்கும் நீர், தனியாரின் நிலத்தடி நீர் உள்ளிட்ட பிற நீர் ஆதாரங்கள் பூர்த்தி செய்கின்றன.
  • குறிப்பாக, வீடுகளில் உள்ள கிணற்று நீர் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நீர், மிகப் பற்றாக்குறை காலங்களில் பெரிய கல்குவாரிகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகியவை சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பொதுவாகப் பூர்த்தி செய்து வருகின்றன.
மழைநீர் சேகரிப்பு
  • வீடுகளின் மழைநீர் சேகரிப்பின் மூலம் மொத்தத் தேவையில் ஏறத்தாழ 1% மட்டுமே பூர்த்தியாகிறது. அரசும், மக்களும் சிறப்பாகச் செயல்பட்டால் மழைநீர் மூலம் 25% வரை குடிநீர்த் தேவையை ஆண்டுதோறும் சமாளிக்க முடியும். சென்னையில் குடிநீர் கிடைக்கும் நிலையை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, தாராளமாகக் குடிநீர் கிடைக்கும் ஆண்டுகள் (உதாரணம்: 2006-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை; 2014, 2016 மற்றும் 2018 ஆண்டுகள்). மற்றொன்று, பற்றாக்குறையாக நீர் கிடைக்கும் ஆண்டுகள்.
  • பற்றாக்குறை ஆண்டு என்பதை மேற்கூறப்பட்ட நான்கு குடிநீர் ஏரிகளின் மொத்த கொள்ளளவு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு 2,000 மி.க. அடி, அதாவது 2 டி.எம்.சி.க்கும் குறைவாக இருக்கும் கொள்ளளவாகும்.
  • மேற்கூறப்பட்ட வரையறையின்படி, சென்னையில் கடந்த 2003 முதல் 2019 வரையிலான 17 ஆண்டுகளில், 7 ஆண்டுகள் (2003 முதல் 2005 வரை, 2013, 2015, 2017 மற்றும் 2019) குடிநீர் அளிப்பு மிகவும் தட்டுப்பாடாக இருந்ததை சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த டிசம்பர் 1, 2015 சென்னை பெருவெள்ளத்தில் நிரம்பிய 4 குடிநீர் ஏரிகளின் முழுக் கொள்ளளவு நீரும் அடுத்த ஓர் ஆண்டுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
  • அதாவது சென்னையில் வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) சரியான அளவு இல்லையேல் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. சென்னையின் 4 குடிநீர் ஏரிகளிலும் செவ்வாய்க்கிழமை (பிப்.19) மதிப்பீட்டின்படி மொத்தம் ஒரு டி.எம்.சி.-க்கும் குறைவான, அதாவது 972 மில்லியன் கன அடி நீரே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 63% ஆகும்.
வழிமுறைகள்
  • சென்னையின் குடிநீர் பஞ்சத்தை முழுமையாகப் போக்குவதற்கான வழிமுறைகளை இனி காணலாம். முதலாவதாக, மழைநீரை அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் கட்டாயமாகச் சேமித்து, அதை நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • இதற்காக மழைநீர் சேமிப்புக்காக ஆகும் மொத்த செலவில், குறைந்தது 50% மானியத்தை தமிழக அரசு உடனே வழங்கி, இந்தத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
  • இதன் மூலம், மழைநீர் வீணாவது பெருமளவு தடுக்கப்படுவதோடு, சென்னை குடிநீர் வடிகால் வாரிய நீரின் தேவையும் மழை பெய்யும் போதெல்லாம் பெருமளவு குறையும். இரண்டாவதாக, நன்னீர் தேவைப்படாத உபயோகங்களுக்கும் (பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல்), வீடுகளின் மற்ற தேவைகளான சுகாதாரம், வீட்டுத் தோட்டம் போன்றவற்றுக்கும் நன்னீருக்கு அடுத்த நிலையில் உள்ள கிணற்று நீர் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஏறத்தாழ 10-20% நன்னீரின் தேவையைக் குறைக்க முடியும். மூன்றாவதாக, வீடுகள்தோறும் நீர் விரயமாவதைத் தடுக்கலாம்.
  • உதாரணமாக, குழாய்களின் கசிவுகள் மூலம் தொடர்ந்து நீர் விரயமாதல், தேவைக்கும் அதிகமாக நீரில் குளிப்பது, துவைப்பது போன்ற பல காரணங்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
  • சுருங்கக் கூறினால், பெட்ரோலைப் போன்று  நீரைப் பயன்படுத்த வேண்டும். நான்காவதாக, நீர் பயன்பாட்டில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் முழுமையான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்ற பழமொழிக்கேற்ப குழந்தைப் பருவத்திலேயே நீர் பயன்பாட்டின் அவசியம் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். வீட்டு அளவில்  நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு பெற்றோரும்  கூற வேண்டும். ஐந்தாவதாக, அரசின் நீர் சேமிப்புத் திட்டங்களை விரிவுபடுத்தி, புதிய நீர் ஆதாரங்களான தேர்வாய் கண்டிகை (50 டி.எம்.சி); திருநீர்மலை ஏரி (1 டி.எம்.சி) போன்றவற்றைச் சீர்படுத்தி நீர் சேமிப்பை அதிகரிக்கலாம்.  மேலும், தற்போதுள்ள 4 குடிநீர் ஏரிகளின் கொள்ளளவை தூர்வாரி நவீனப்படுத்தினால் மழைக் காலங்களில் மேலும் 1 டி.எம்.சி.
  • நீரைத் தேக்கலாம். உதாரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், இதுவரை அதிகபட்சமாக அதாவது 93% கொள்ளளவு மட்டுமே கடந்த 18 ஆண்டுகளில் தேக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் குடியிருப்புக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளதே ஆகும். இதனை முழுமையாக அரசு அகற்ற வேண்டும்.
  • ஆறாவதாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு செயல்பாட்டில் இருந்தும், முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இயலாமல் உள்ள தெலுங்கு-கங்கை (12 டி.எம்.சி) போன்ற திட்டங்கள் மூலம் குறைந்தபட்சம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பாதியளவு தண்ணீரையாவது தங்கு தடையின்றி நீர்ப் பற்றாக்குறைக் காலங்களில் கிடைக்க அரசு முழு முயற்சி மேற்கொண்டு இதில் வெற்றி அடைய வேண்டும்.
  • மிக முக்கியமாக, ஏழாவதாக, நகரங்கள் மட்டுமன்றி அனைத்துக் கிராமங்களிலும், ஒற்றுமையை மக்களிடையே பலப்படுத்தி, கிராமசபைக் கூட்டங்கள் மூலம் அரசு பிரதிநிதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நீராதாரப் பிரச்னைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை அனைத்தையும் கடைப்பிடித்தால், சிக்கலான நிலையில் உள்ள வாழ்வின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நன்னீரை அரசுகள் முதற்கொண்டு, ஒவ்வொரு தனிமனிதரும் எப்படியெல்லாம் பேணிக் காக்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வு பெற்றால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தண்ணீர்ப் பஞ்சம் என்ற வார்த்தைக்கு இடமிருக்காது!

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்