TNPSC Thervupettagam

குமரியை கோதாவரி தொடட்டும்!

June 13 , 2019 2038 days 1279 0
  • கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. வடபுலத்தில் வெள்ளமும், தென்புலத்தில் வறட்சியும் அடிக்கடி இந்தியாவில் ஏற்படுகிறது. நதி நீரினை இணைக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் காலத்திலேயே ரயில்வே பாதைகளை அமைத்ததுபோல நதிநீரை இணைத்து நீர்வழிச்சாலை திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென அப்போதே விவாதிக்கப்பட்டது. ஆனால், நீர்வழிப் பாதை நடைமுறைக்கு வரவில்லை.
இந்திரா காந்தி காலத்தில்
  • அதன் பின், இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த கே.எல்.ராவ் முயற்சி செய்தார். பிகார் மாநிலம் பாட்னா அருகே வெள்ளமாகச் செல்லும் கங்கை தீரத்து நதியை தென்னிந்தியாவுக்குத் திருப்பலாம் என்று அவர் அப்போது கூறினார். ஆனால், இந்தத் திட்டம் சத்புரா-விந்திய மலைகளில் ராட்சத பம்புகள் மூலமாக தண்ணீரைக் கொண்டுசெல்ல மின் சக்தியும், திட்டச் செலவுகளும் அதிகமாகும் என்று விவாதம் நடைபெற்ற காலத்தில் இந்திரா காந்தியின் அரசு அகற்றப்பட்டு, மொரர்ஜி தேசாய் அரசு ஆட்சிக்கு வந்தது.
  • அப்போது, கேப்டன் தஸ்தூர் பூமாலை திட்டம் என்ற பெயரில் மாலை போன்று நதிகளை இணைக்கலாம் என்று 1997-இல் பரிந்துரைத்தார்.  ஐ.நா.வும் இதை ஆதரித்தது. அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
  • அதன் பின், இமாலய நதிகளை மேம்படுத்தவும், தீபகற்ப நதிகளை மேம்படுத்தவும் என இரண்டு சிறப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிக்காக 1982-இல் நீர்வள ஆணையமும் அமைக்கப்பட்டது. அந்த வகையில் நீர்வளம் அதிகமுள்ள பகுதிகளில் வீணாகும் தண்ணீரை வறட்சியான பகுதிகளுக்கு இணைப்புக் கால்வாய்களாகக் கொண்டு செல்லலாம் என்ற கருத்தை இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
அறிக்கை
  • இந்த அறிக்கையின்படி மகாநதியிலிருந்து உபரியாகும் 8,000 டி.எம்.சி. நீரை கோதாவரிக்குத் திருப்ப ஹிராகுட் அணை அருகே மணிப்பந்தராவில் ஓர் அணை கட்டி தவுலேஸ்வரம் அணைக்கு நீர் எடுத்து வந்து, கோதாவரி நதியின் குறுக்கே உள்ள போலவரம் அணையின் அருகே ஒரு புதிய அணை கட்டி 21,550 டி.எம்.சி.
  • நீரைகிருஷ்ணா நதிக்கு எடுத்துச் செல்வது இந்தத் திட்டத்தின் ஒருபகுதி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், சுரேஷ் பிரபு தலைமையில் அமைந்த நதிநீர் இணைப்புக் குழு இது குறித்து ஆராய்ந்து அறிக்கை இறுதி செய்யும் நிலையில் அன்றைய வாஜ்பாய் அரசாங்கம் நிறைவடைந்து விட்டது.
  • அடுத்தபடியாக, பிரகாசம் அணை அருகே அணையின் பக்கத்தில் 1,200 டி.எம்.சி. நீரைக் கொண்டு செல்ல போலாவரம், விஜயவாடா இடையே இணைப்புக் கால்வாயோடு 4,370 டி.எம்.சி. நீரைக் கொண்டு செல்ல இச்சம்பள்ளி - புளிச்சிந்தலா நீர் செல்லும் இணைப்புக் கால்வாய்கள் வெட்டப்பட்டு இறுதியாக இச்சம்பள்ளி - நாகார்ஜுனா இணைப்புக் கால்வாய் மூலம் நாகார்ஜுனா சாகர் அணையை அடையும்.
  • அடுத்தகட்டமாக 12,000 டி.எம்.சி நீர் பென்னாற்றில் கட்டப்பட்ட சோமசீலா அணைக்கு திருப்பப்பட்டு அதிலிருந்து 9,200 டி.எம்.சி நீரை பாலாற்றின் வழியாகக் கொண்டுசென்று காவிரியில் இணைக்கலாம். ஆனால், இந்தப் பாலாறு இணைப்புத் திட்டம் குறித்தான விஷயம் கேள்விக்குறியாக உள்ளது. அதை மத்திய அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
  • இதை இணைத்தால் அனந்தபூர் மாவட்டத்தில் ஓடும் துங்கபத்திரை நதியோடு கிருஷ்ணாவையும் இணைத்தால் சித்ரதுர்கா, கோலார் மாவட்டத்தின் வழியாக பாலாற்றின் பேத்தமங்கலா அணைக்கு கால்வாய் அமைத்தால் 10 டி.எம்.சி. தண்ணீர் வரத்து கூடுதலாக  வரும். இது பாலாற்று பாசன விவசாயிகளுக்குப் பயன்படும்.
பல்வேறு திட்டங்கள்
  • அது மட்டுமல்லாமல், நேத்ராவதி -  பாலாறு மற்றும் ஹந்திரி - நீவா திட்டத்தையும் நிறைவேற்றினால் வேலூர் மாவட்டம் மேலும் பாசன வசதி பெறும். இப்படியான நிலையில் மத்திய அரசு கோதாவரி-காவிரி நீர் இணைப்பை ஏன் குமரி மாவட்ட நெய்யாறோடு இணைத்துத் திட்டத்தை விரிவுபடுத்தலாமே.
  • இந்த நதிநீர் இணைப்பில் முதல் கட்டமாக தீபகற்ப நதிகள் அதாவது, தக்கான பீடபூமி, ஆந்திரத்தின் தென்பகுதி, கர்நாடகத்தின் தென்பகுதி, தமிழகம், கேரளம், விந்திய-சத்புரா மலைகள், சோட்டா நாகபூர் பீடபூமிக்கு தென்புரம் அதாவது, மகாநதி தீரத்திலிருந்து குமரி வரை உள்ள தென்னக நதிகளை இணைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
  • அதன் பின் வடபுலத்தில் இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகளோடு மகாநதியை இணைத்தால் நதிநீர் இணைப்பு தேசியளவில் முழுமையாகிவிடும்.
  • அந்த வகையில்தான் கோதாவரி- காவிரி வரை இணைப்பு என்று சொல்லும்போது மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி முதல் வைப்பாறு வரை இணைத்தால் மட்டுமே இது பலனளிக்கும்.
  • இது குறித்து, நாட்டில் பாயும் நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரவருணி, குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைக்க வேண்டும். அதாவது, குமரியை கங்கை தொட வேண்டும்; கேரளத்தில் உள்ள அச்சன்கோவில்-பம்பை படுகைகளை தமிழகத்தினுடைய சாத்தூர் அருகே வைப்பாறோடு இணைக்க வேண்டும்.
நீதிமன்ற வழக்கு
  • கேரளத்தில் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலுக்குச் செல்லும் நீரின் ஒரு பகுதியை தமிழகத்திற்குத் திருப்ப வேண்டுமென்று 1983-லிருந்து வழக்குகளைத் தாக்கல் செய்து வந்தேன். நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து பிரதமர்களாக இருந்த வி.பி.சிங் (1990), பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவெகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி 19 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி நதிநீர் இணைப்புக்காகப் பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • சென்னை-தில்லி இடையே நான் அதிக விமானப் பயணங்கள் செய்து தொடர்ந்து 30 ஆண்டுகள் வழக்கை நடத்தியதால், கடந்த 2012-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், நதிநீர் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு ஆக்கப்பூர்வமான குழுவை மத்திய அரசு அமைத்து, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி இந்த முக்கியப் பிரச்னைக்கு அவசியம் தீர்வு காண வேண்டும். ஒரு பக்கத்தில் வெள்ளம், ஒரு பக்கம் வறட்சி என்ற நாட்டின் நிலையைச் சரி செய்ய இது உதவுவதோடு இது ஒரு முக்கியப் பிரச்னை.
  • இது குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுவந்திரகுமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு நதிநீர் இணைப்பு குறித்து முதல் தடவையாக தெளிவான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வந்தவுடன் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவூத்தை மூன்று முறை சந்தித்தேன்.
  • அதன் பிறகு அது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அதுவும் ஆமை வேகத்தில் செயல்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசாங்கமும் முடிவுக்கு வந்துவிட்டது.
  • அதன்பின், 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு பிரதமர் மோடி வந்தவுடன், தொடக்கத்தில் அன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்தித்து, உச்சநீதிமன்றத்  தீர்ப்பு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன; உத்தரவை உடனடியாகச் செயல்படுத்துங்கள்.
  • மேல் நடவடிக்கை இல்லாவிட்டால் அவமதிப்பு வழக்குதான் தொடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்த பின்னர், தற்போது கோதாவரி-காவிரி இணைப்பு நடக்கவுள்ளது என்பது ஆறுதல்.
நதி நீர் இணைப்பு
  • இதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு ஐந்தாவது கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நவலவாலா குழுவின் துணைக் குழுக்களான இரண்டு குழுக்களின் காலத்தையும் மத்திய அரசு நீட்டிக்க வேண்டும்.
  • கோதாவரி-காவிரி இணைப்போடு நிறுத்தாமல் வைகை, தாமிரவருணி, குமரி நெய்யாறோடு இணைத்தால்தான் தமிழகம் பயன்படும். தற்போது இந்த இணைப்புக்காக 19 லட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்த திட்டச் செலவு ரூ.67,000 கோடி ஆகும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பங்கு 14,000 கோடிகளுக்கு மேலாகும்.
  • மற்றொரு பக்கம், காவிரிக்குத் தண்ணீர் வந்தால் காவிரி-வைகை-குண்டாறு, தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு மற்றும் வடபென்னை-தென்பென்னை-பாலாறு என்று மூன்று மாநில இணைப்பும் முக்கியமான அம்சங்களாகும். கேன்டூர் கேனல்ஸ் தொழில்நுட்ப முறையில் இந்த இணைப்பு செயல்படுத்தப்படும். நதிநீர் கால்வாய்கள் மூலமாக  இணைக்கப்படும்போது, சமவெளியிலும் கால்வாய்களும், வாய்க்கால்களும் வெட்டப்பட்டு நீர் தங்கு தடையின்றி செல்லக்கூடிய வகையில் செய்வதுதான் கேன்டூர் கேனல்ஸ் முறையாகும்.
  • இந்த வழிமுறை ஆழியாறு-பரம்பிக்குளம் இணைப்புத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் நேத்ராவதி திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. ராட்சத மோட்டார் பம்புகளை எல்லாம் மேட்டுப் பகுதிகளுக்கு தண்ணீரை ஏற்றி பெங்களூரு, கோலார், சிக்பெல்லப்பூர், தும்கூர் முதலிய பகுதிகளுக்கு 6 டி.எம்.சி. நீரைக் கொண்டு செல்லலாம். இந்தத் திட்டத்தின் துணைத் திட்டமாக அனந்தபூர், கடப்பா, சித்தூர், நெல்லூர், ராயலசீமா மாவட்டங்கள் பயன் பெறும் ஹந்த்ரா - நீவா திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
  • இவையெல்லாம் பரிசீலனையில் இருக்கும்போது, தமிழகத்தின் குமரி முனையை கோதாவரி தொட்டால் என்ன?

நன்றி: தினமணி(13-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்