TNPSC Thervupettagam

கெட்ட போரிடும் உலகு!

June 18 , 2019 1987 days 952 0
  • உலகை அழிக்கும் அணுகுண்டை நமக்குக் காட்டி, உதவாது விஞ்ஞானம் என்று சொல்லும் பலகற்றும் கல்லாத மக்களுக்குப் பணிவுடனே சொல்லிடுவேன் கொஞ்சம் கேட்பீர் என்று அறிவியலின் பெருமைகளைப் பாடத்தில் வைத்துப் போற்றிப் படித்தது ஒரு காலம். வேடராகக் காட்டிலே வேட்டையாடி வாழ்ந்த நாம் விண்ணிலேறி அறிவியல் விந்தையெல்லாம் பரப்பினோம் என்று அறிவியலின் வளர்ச்சியோடு உடன் நின்று மார்தட்டிக் கொண்டது ஒரு காலம். அந்தக் காலத்தில் நமது அறிவும், நாம் பெருமைகொண்ட அறிவியலும் அத்தனை மேன்மையுடையனவாகத்தான் இருந்தன. ஆனால், மனித அறிவு எப்போதும் நல்லதை மட்டுமே சிந்திப்பதில்லை.
தொன்ம மரபு
  • அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்களைத் தேவர்கள் என்றும் அதற்கு நேர் எதிராக அழிவையே விரும்புவர்களை அசுரர்கள் என்றும் அடையாளம் காட்டுகிற தொன்ம மரபு இடைப்பட்டவர்களான நம்மை மனிதர்கள் என்று சுட்டுகிறது. தேவர்களாக முயன்று தோற்றுப் போனவர்கள் அந்த அவமானத்தினாலும் தோல்வியின் எரிச்சலினாலும் தங்களைக் கொடுமையான அசுரர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இந்த யுகத்தில் அவர்களுக்கு உதவியாக அறிவியல் களமிறங்குகிறபோது ஊழியின் தோற்றம் கண்முன்னே தெரிகிறது.
  • இன்றைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்துகிற அறிவியல் கருவிகளையும் அப்படி ஓர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த அறிவியல் கருவிகள் முதலில் நம்முடைய நலத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும்தான் கண்டறியப்பட்டன. ஆனால், அவை காலப்போக்கில் நன்மைகளை விடவும் தீமைகளைச் செய்யும் பாதகச் செயல்களுக்குத் துணையாகி விட்டன.
  • அளவினை மிஞ்சினால் அமுதமே நஞ்சாகி விடும் என்கிறது மரபு. பூச்சிகளையும் கொசுக்களையும் கொல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட விஷ மருந்துகள், அவற்றை மட்டுமா கொல்லக் கூடியவை? வாழ வைக்கும் உணவேயாயினும் அதற்கான வேளை தவறிவிட்டால் அதுவே நஞ்சாகி விடுகிறதே.
அறிவியல் கருவிகள்
  • இந்த வரிசையில் அறிவியல் கருவிகள் அத்தனையையும் ஒருமுறை ஆய்வுத் தராசில் நிறுத்திப் பார்க்கலாம். அவற்றால் பெறப்படும் பயன்களைவிடவும் அச்சுறுத்தல்களையும் தீய விளைவுகளையும் இந்தக் காலத்தில் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். வீரயுகக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கருவிகள், பயிற்சிகளையும் முறைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அறிவியல் யுகத்தில் பயன்படுத்தப்படும் போர்க் கருவிகள் கொடூரக் கொலைக் கருவிகளாகவே விளங்குகின்றன. ஆனால், அவை பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில்தான் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • அழிவை நினைக்கிற எவருக்கும் இந்த ஆயுதங்கள் எளிதில் உதவி செய்துவிடும். பாதுகாப்புக்காக என்று நாம் சொல்லுகிற அதே கருவிதான், நம்மைத் துன்புறுத்துகிறபோது கொலைக் கருவியாகி விடுகிறது.
ஆல்ஃபிரட் நோபல்
  • டைனமைட் எனப்படும் வெடிப் பொருளாகிய கொலைப்பொருள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொருள்களைக் கண்டுபிடித்த ஆல்ஃபிரட் நோபலின் பெயரில்தான் உலக அளவிலான அமைதிக்கான  பரிசும் வழங்கப்படுகிறது. அவர் டைனமைட்டை ஆக்க சக்திக்காகத்தான் கண்டறிந்தார்; முதலில் பயன்படுத்தினார். ஆனால், அதன் கொடுந்தன்மையைக் கண்ட கொடுங்கோலர்கள் அதனைத் தங்களுக்கான பொருளாக மாற்றி உலகை அழிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
  • விளைவு, ஆல்ஃபிரட் நோபல் உயிரோடு இருக்கும்போதே அவருடைய சகோதரர் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இவருக்குப் பதிலாகப் பலியாக அழிந்தான் கொடுங்கோலன் ஆல்ஃபிரட் என்னும் அழியாப் பழியை உயிரோடு இருந்தபோதே பெற்றார். உலகத்தில் யாருக்கும் நேராத துயரம், தான் உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய மரணச் செய்தியை வாசிப்பது.
  • அதிலும் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப் பெற்று அதனையும் உணர நேர்ந்தது. இதனால் மனம் ஒடிந்துபோன ஆல்ஃபிரட் நோபல்தான் தனது சொத்துகளையெல்லாம் மனிதகுல முன்னேற்றத்துக்குப் பயன்படுமாறு நோபல் பரிசாக்கி அறிவித்தார். ஆனால், என்ன செய்ய? அந்த டைனமைட் இன்னும் தனது கொடூரத்தனத்தைக் குறைக்கவில்லையே! கிறிஸ்து பிறப்புக்கும் முன்னரே காலங்காலமாகப் போர்களை வீரத்தின் வெளிப்பாடாகக் கருதிப் போர் செய்து கொண்டிருந்த ஆதிஇனங்கள் அவற்றிலிருந்து மீண்டு விட்டன.
அறிவியல் தொழில்நுட்பம் – வளர்ச்சி
  • ஆனால், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, ஐரோப்பிய நாடுகள் போர்வெறி கொண்டதன் விளைவாக இரண்டு உலகப் போர்களை உலகம் சந்திக்க நேர்ந்தது. எண்ணற்ற உயிரிழப்புகளும் உடைமை இழப்புகளும் இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட்டன. அது மட்டுமல்லாமல், இறைச் சிந்தனையோடு மானுடப் பண்பையும் உயிரிரக்கக் கோட்பாட்டையும் இயல்பாகக் கொண்டு வாழ்ந்துவந்த ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளையும் இந்தப் போர்வெறி பற்றிக்கொண்டது. குறிப்பாக, வளைகுடா நாடுகள் இந்த அதிநவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய போர்க் கருவிகளைக் கைக்கொண்டு அதே அறிவியலுக்கு எதிராகப் போராடும் புனிதப் போரை அறிவித்தன.
  • அந்தப் போர் முறையில் மிகவும் கொடூரமானது தற்கொலைப்படைத் தாக்குதல்தான். யாரோ யாருக்கோ பகையாக-அந்தப் பகையைத் தங்களுக்குள் ஏற்று அவர்கள் தரும் பிச்சைப் பணத்துக்கு மயங்கி மூளைச்சலவைக்கு ஆளாகி, தங்களையே விற்றுவிட மட்டுமல்ல, என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளத் தந்துவிட்ட ஓர் ஈனத்தின் செயல்பாடே இந்தத் தற்கொலைத் தாக்குதலின் வெளிப்பாடு.
  • இதை ஒரு நாட்டினுடைய போர்த் தந்திரம் என்றும் ராணுவ நடவடிக்கை என்றும் கூறினால், அதை விடவும் கேவலம் அந்த நாட்டிற்கில்லை. அதனினும் மேலாக ஒருபடி மேலேபோய், குறிப்பிட்ட சில தீவிரவாத அமைப்புகள் இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலைக் கொண்டாடுகின்றன. அவற்றுக்கு மதமூடி அணிவித்து, அதனைப் புனிதமாக்க விரும்புகின்றன. உண்மையில் எந்த மதமும் இப்படி ஓர் ஈனத்தைப் புனிதம் என்று அறிமுகப்படுத்தவில்லை.
  • இந்திய தேசத்தின் பிரிவினைக் காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமையை முன்பே உணர்ந்துதான், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது. ஆனால், எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு என்றைக்குமே விடுதலை கிடைக்காது என்று எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட பாத்ஷாஹ் கான் அன்றே எச்சரித்தார்.
தியாகம்
  • அன்றிலிருந்து எல்லையில் வாழும் மக்களைப் பாதுகாக்க இந்தியா முழுவதும் பல மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒவ்வொரு ராணுவ வீரருக்காகவும் அவரது தேச சேவைக்காகவும் இந்தியா தன் கண்களில் ரத்தம் வடிக்கிறது. உலகப் போர்களைப் போலவே இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் முதல் போர் 1947-ஆம் ஆண்டிலும், இரண்டாவது போர் 1965-ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தன. மூன்றாவதாக, 1999-ஆண்டில் கார்கில் போர் நிகழ்ந்தது. முதல் போரில் இந்தியாவின் தரப்பில் 1500 வீரர்கள் வீரமரணம் அடைய, 3,500 வீரர்களுக்கு மேல் காயமடைந்தனர்.
  • பாகிஸ்தான் தரப்பிலும் 6,000 வீரர்கள் உயிர்துறக்க, 14,000 வீரர்கள் காயமடைந்தனர். இரண்டாவது போரில், இந்தியத் தரப்பில் 3,264 பேரும் பாகிஸ்தான் தரப்பில் 3,800 பேரும் உயிரிழக்க நேரிட்டது. இரு தரப்பிலும் 10,000 பேருக்கும் மேலாகக் காயமடைந்து வருந்தினர்.
போரில்
  • கார்கில் போரில், இந்திய ராணுவ வீரர்கள் 527 பேரும் பாகிஸ்தானில் 357-4,000 வரையிலும் மரணமடைந்ததாகப் பதிவாகியுள்ளது. காயமடைந்தோரில் இந்தியா தரப்பில் 1,363 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 665-க்கும் மேற்பட்டோர் என்றும் தெரிகிறது. இந்தப் போர்களைத் தவிர ஒவ்வொரு நாளும் அவர்களின் நெறிமுறையற்ற தாக்குதல்களால் இரு தரப்பிலும் ஏற்படுகிற உயிரிழப்புகளைத் தனியே கணக்கிட்டுக் கொள்ளலாம்.
  • வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளும் அவசியமே இல்லாமல் மேற்கொள்ளும் இந்தக் கொடிய போருக்காகச் செலவிடும் தொகையை மதிப்பிட்டுவிட முடியுமா? இது போரும் அல்ல, போராட்டமும் அல்ல, பகை நஞ்சு. தலைமுறைக்கும் இந்த நஞ்சு பரவிவிடக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகள் அறிவியல் கருவிகளினால், போர்க் கருவிகளினால் புதிய உலகத்தைச் சமைத்துக் கொள்ள முயன்றபோது, புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று அன்பின் வழியான புதிய உலகத்தைச் சமைக்க அழைப்பு விடுத்தார் பாரதிதாசன்.
  • அவர் குறிப்பிட்ட கெட்ட போர்தான் இங்கு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிற பயங்கரவாதமும் பிரிவினைவாதமும்.
  • ஆக, சமூகக் கயமைகளின் ஒட்டுமொத்த உருவமாக நிற்கும் இந்தத் தீவிரவாதம், பிரிவினைவாதம் தனது வாலாகிய தற்கொலைப் படைத் தாக்குதலை இப்படி ஆட்டிக் கொண்டேயிருக்கிறது. இதற்கு மூளையாக இருந்து இயக்குவது அதே அறிவியல் கருவிகள்தான் என்னும்போது, அதை அறிவு இயல் என்று சொல்வதற்கும் அச்சமாக இருக்கிறது. விரைவில் அதன் வால் அறுபடட்டும். அதன் தலையைக் குனியச் செய்யட்டும்!

நன்றி: தினமணி (18-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்