TNPSC Thervupettagam
January 5 , 2019 2179 days 4202 0

ராஜிந்தர் சச்சார் குழு

  • முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள முஸ்லீம் இன மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வு செய்வதாகும்.
  • 7 நபர்களை உறுப்பினராகக் கொண்ட இந்த உயர்நிலைக் குழுவானது 2006 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பிரதம அமைச்சரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
  • இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று ராஜிந்தர் சச்சார் குழுவின் அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
இக்குழுவானது கீழ்க்கண்ட விவரங்களை தனது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளது
  • இக்குழுவானது முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்களைப் பல்வேறு ஆதாரங்களிலிருந்து சேகரித்துள்ளது. மேலும் இக்குழுவானது 76 பரிந்துரைகளையும் அளித்துள்ளது.
கல்வி
  • பன்முகத் தன்மை என்ற கருத்துப்படி தேசத்தின் வளர்ச்சியில் முஸ்லீம்களையும் மையத்திற்கு கொண்டு வருவது மற்றும் எதிர்காலத் திட்டத்தில் முஸ்லீம்களையும் பங்கு பெறச் செய்வது ஆகியவை இக்குழுவின் முக்கியப் பரிந்துரைகளாகும். நாட்டின் சராசரி கல்வியறிவானது 64.8% ஆகும். ஆனால் முஸ்லீம் மக்களின் சராசரி கல்வியறிவானது 59.1% ஆகும்.
சமூகம்
  • முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களின் சமூக மற்றும் இதர வசதிகள் ஆகியவை அவர்களின் எண்ணிக்கைக்கு நேர் எதிராக உள்ளது.
  • முஸ்ஸீம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கிராமங்களுடன் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருக்கும் கிராமங்களை ஒப்பிடும்போது, முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கிராமங்களில் மிகக் குறைந்த அளவிலான பேருந்து நிறுத்தங்கள், குறைந்த அளவிலான சாலைகள் மற்றும் வீட்டு வசதிகள் ஆகியவை குறைந்த அளவில் உள்ளன. முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் மூன்றில் ஒரு பங்குள்ள கிராமங்களில் எந்தக் கல்வி நிறுவனமும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் கள் பெரும்பான்மையினராக இருக்கும் 40 சதவிகித கிராமங்களில் மருத்துவ வசதிகள் இல்லை.
  • இந்த அறிக்கையின்படி, அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் முஸ்லீம்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.
  • பொது மற்றும் தனியார் துறைகளில் ஊதியம் பெறும் முஸ்லீம்களின் எண்ணிக்கையானது எஸ்சி/எஸ்டி (Scheduled Castes/ Scheduled Tribes) வகுப்பினர் ஊதியம் பெறும் எண்ணிக்கையை விடக் குறைவாக உள்ளது.
முக்கியப் பரிந்துரைகள்
  • சிறுபான்மையினர் போன்ற சமூகத்தில் பின்தங்கியுள்ள வகுப்பினர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக ஒரு சம வாய்ப்புக் குழுவை உருவாக்குதல்.
  • பொதுத் துறை நிறுவனங்களில் முஸ்லீம்களின் பங்கேற்பை அதிகரிக்க நியமன நடைமுறைகளைத் தொடங்குதல்
  • முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இத்தொகுதிகள் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கு கண்டிப்பாக ஒதுக்கீடு செய்யக்கூடாது.
  • பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணிகளில் முஸ்லீம்களின் பங்கேற்பை அதிகரித்தல்.
  • மதரசாக் கல்வியை உயர் கல்வி பள்ளி வாரியங்களுடன் தொடர்பு கொள்வதை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
  • மதரசாக் கல்வி வழியில் பெற்ற பட்டங்களைப் பாதுகாப்புப் பணி , நிர்வாகப் பணி மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான தகுதிக்கு நிகராக அங்கீகரித்தல்.
  • சமூக-பொருளாதார சமூகங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைப் பராமரிக்கக்கூடிய தேசிய தகவல் மையத்தை உருவாக்கல்.
  • சச்சார் குழுவானது முஸ்லீம்களின் மக்கள் தொகை விவரம், அவர்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவர்கள் கல்வியில் ஏற்படுத்திய சாதனைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்காக 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டைப் பயன்படுத்தியது. மேலும் இந்த குழுவானது வேலைவாய்ப்பு, கல்வி, நுகர்வு முறைகள் மற்றும் வறுமை நிலைகள் ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தேசிய மாதிரி ஆய்வு (தேசிய மாநில ஆய்வு நிறுவனத்தில் 55-வது மற்றும் 61-வது ஆய்வு) நிறுவனத்தின் தகவலைப் பயன்படுத்தியது.
  • சச்சார் குழு அளித்துள்ள அறிக்கை போன்று மற்ற குழுக்கள் அளித்துள்ள பரிந்துரைகளையும்  அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசானது 2006 ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் நலனுக்கான பிரதம அமைச்சரின் 15 அம்சத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
15 அம்சத் திட்டம்
குறிக்கோள்கள்
  • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறுபான்மையினர் அதிகமாக உள்ள மாவட்டங்களில் தற்பொழுது நடைமுறையில் உள்ள மற்றும் புதிய திட்டங்கள், சுய வேலைவாய்ப்பிற்கான கடன் உதவித் தொகை, மத்திய, மாநில அரசாங்கங்களில் பணிவாய்ப்பு வழங்குதல் ஆகியவற்றின் மூலம் சிறுபான்மையினரின் கல்வி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் சிறுபான்மையினரின் பங்களிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதாகும்.
  • 15 அம்சத் திட்டத்தில் உள்ள “கணிசமான சிறுபான்மையினர் மக்கட் தொகை” என்ற சொற்கூறானது மாவட்டங்கள் / வட்டங்களில் உள்ள மொத்த மக்கட் தொகையில் 25 சதவீதத்திற்கு மேல் சிறுபான்மையினர் மக்கட் தொகை இருப்பின் அவற்றிற்குப் பொருந்தும்.
  • இத்திட்டமானது தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992-ன் பிரிவு 2(c)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சிறுபான்மையினப் பிரிவின் தகுதியை உடைய சிறுபான்மையினரைப் பயனாளராகக் கொண்டிருக்கும்.
  • இந்தியாவில் முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், பார்சி இன மக்கள் மற்றும் சமணர்கள் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • சிறுபான்மையினரின் நலனுக்காக பிரதம அமைச்சரின் புதிய 15 அம்சத் திட்டத்திற்காக தனியாக நிதி அளிக்கப்படுவதில்லை.
  • இத்திட்டத்தின் கீழ் 11 அமைச்சகங்களைச் சேர்ந்த 24 திட்டங்கள் உள்ளன.
  • இத்திட்டமானது,
    • கல்வியறிவை அதிகப்படுத்துதல்
    • வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல்
    • வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
    • வகுப்புவாதக் கலவரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல்

ஆகியவற்றின் மூலம் சிறுபான்மையினர் நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பகுதிகள்
  • இத்திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் உள்ள ஒரேயொரு யூனியன் பிரதேசம் லட்சத் தீவுகள் ஆகும்.
  • நாட்டில் சிறுபான்மையினர் சமூகம் அதிகம் உள்ள 121 மாவட்டங்கள் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.
  • பல்வேறு அமைச்சகங்கள் தொடர்பான 15 அம்சத் திட்டத்தை செயல்படுவதற்காக 15 சதவிகித நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
15 அம்சங்கள்
  1. ஒருங்கிணைந்த குழந்தை நல சேவைகளை சமமாக வழங்குதல்.
  2. பள்ளிக் கல்வியைப் பெறுதலை அதிகப்படுத்துதல்
  3. உருது மொழியைக் கற்பிப்பதற்கான ஆதாரங்களை அதிகப்படுத்துதல்
  4. மதரசாக் கல்வியை நவீனப்படுத்துதல்
  5. சிறுபான்மை சமூகங்களிலிருந்து தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல்.
  6. மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் மூலம் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துதல்
  7. ஏழைகளுக்காக சுய வேலைவாய்ப்பு மற்றும் தினக்கூலி வேலைவாய்ப்பு வழங்குதல்
  8. தொழில்நுட்பப் பயிற்சியின் மூலம் திறனை மேம்படுத்துதல்
  9. பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடன் உதவியை மேம்படுத்துதல்.
  10. மத்திய மற்றும் மாநில பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுதல்.
  11. கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில் சமமான பங்கீடு வழங்குதல்
  12. சிறுபான்மையின மக்கள் வசிக்கின்ற குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல்
  13. வகுப்புவாத நிகழ்வுகளைத் தடுத்தல்
  14. வகுப்புவாதக் குற்றங்களுக்காக தண்டனை வழங்குதல்
  15. வகுப்புவாதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு

 

2009 ஆம் ஆண்டில் சிறுபான்மையினருக்கான 15 அம்சத் திட்டத்தில் மேலும் 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
  • தேசிய கிராமப்புற குடிநீர்த் திட்டம்
  • சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம்
  • நகர கட்டமைப்பு மற்றும் நிர்வாகம்
பிரதம அமைச்சரின் புதிய 15 அம்சத் திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் / முன்னெடுப்புகளின் விவரங்கள்
  • சர்வ சிக்ச அபியான் - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
  • அங்கன்வாடி மையங்கள் மூலம் சேவைகளை அளிக்கும் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தை நலச் சேவைத் திட்டம் - மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்
  • தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (தற்பொழுது இது தீனதயாள் அந்த்யோதயா யோஜனா என்று அழைக்கப்படுகிறது) மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
  • தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (தற்பொழுது இது தீனதயாள் அந்த்யோதயா யோஜனா என்று அழைக்கப்படுகிறது)- மத்திய வீட்டு வசதி மற்றும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சகம்
  • தொழிலகப் பயிற்சி நிறுவனங்கள் - மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம்
  • முதன்மைத் துறைகளுக்கு கடன் வழங்குதலின் கீழ் வங்கி கடன் வழங்கல் - நிதிச் சேவைகள் துறை - மத்திய நிதி அமைச்சகம்
  • இந்திரா ஆவாஸ் யோஜனா (தற்பொழுது இது பிரதான் மந்திரி கிராமின் அவாஸ் யோஜனா என்று அழைக்கப்படுகிறது) - மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
  • பத்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர் / மாணவிகளுக்கான உதவித் தொகை திட்டம்
  • பத்தாம் வகுப்பிற்கு மேல் உள்ள சிறுபான்மையின மாணவ / மாணவிகளுக்கான உதவித் தொகைத் திட்டம்
  • தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பாடங்களுக்கான தகுதி அடிப்படையிலான உதவித் தொகைத் திட்டம்.
  • சிறுபான்மையின மாணவர்களுக்கான மவுலானா ஆசாத் தேசிய தோழமைத் திட்டம்
  • பொருளாதார நடவடிக்கைகளுக்கான தேசிய சிறுபான்மை நல மற்றும் நிதிக் கழகத்தின் கடன் திட்டம்.
  • கல்வியை மேம்படுத்துவதற்கான மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் திட்டங்கள்
  • இலவச பயிற்சி மற்றும் அது சார்ந்த திட்டங்கள்.
திட்டங்கள்
  • ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டம் - மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
  • சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகம்
  • நகர வளர்ச்சி மற்றும் நிர்வாகம் - மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகம்
  • தேசிய கிராமப்புற குடிநீர்த் திட்டம் - மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம்
சிறுபான்மையினர் நலனுக்கான சிறப்பு முன்முயற்சிகள்
  • மதரசாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான திட்டம் - பள்ளி கல்வித் துறை - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  • சிறுபான்மையினர் நிறுவனங்களின் கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள் திட்டம் - பள்ளி கல்வித் துறை - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  • உருது மொழி கற்பிப்பதற்கான ஆதாரங்களை அதிரித்தல் திட்டம் பள்ளி கல்வித் துறை - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  • அரசாங்கத் துறைகளில்/நிறுவனங்களில் சிறுபான்மையினர்களைத் தேர்வு செய்தல் - பணியாளர் பயிற்சித் துறை - மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
  • மத நல்லிணக்கம் மீதான வழிகாட்டுதல்கள் - மத்திய உள்துறை அமைச்சகம்.

 

- - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்