TNPSC Thervupettagam

சந்திரனுலகாள்வோம்!

July 24 , 2019 1998 days 958 0
  • நிலவுக்கு இந்தியா அனுப்பிய ‘சந்திரயான்-1’ விண்கலத்துக்கு ஒரு தசாப்தத்துக்குப் பிறகு அதன் தொடர்ச்சியான ‘சந்திரயான்-2’ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா ஒரு விண்கலத்தை நிலவின் மறுபக்கத்தில் முதன்முறையாக இறங்கச் செய்து வெற்றி கண்டது. தற்போது அதுபோன்ற வேறொரு முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டிருக்கிறது.
  • ஆம், ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் பிரக்ஞான் உலாவியை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கச் செய்யும் முயற்சிதான் அது. நிலவு நடுக்கோட்டில்தான் இதுவரை உலவிகள் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது, இதுவரைக்கும் யாராலும் மேற்கொள்ளப்படாத முயற்சி என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம்.
ஜிஎஸ்எல்வி மார்க்-3
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஜிஎஸ்எல்வி மார்க்-3’ ஏவுகலத்தைக் கொண்டு முதன்முறையாக விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் மூலம் நான்கு டன் வரை அனுப்ப முடியும் என்பதைப் பார்க்கும்போது இந்த ஏவலே பெரும் சாதனைதான். சுற்றுப்பாதைக் கலம், தரையிறங்கு கலம் (விக்ரம்) உலாவி (பிரக்ஞான்) எல்லாம் சேர்த்து 87 டன் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
  • புவியின் நிலைநிறுத்தல் சுற்றுப்பாதையை அடைந்தவுடன் ‘சந்திரயான்-2’ கலத்தின் சுற்றுப்பாதை ஐந்து நிலைகளில் வரும் 22 நாட்களில் உயர்த்தப்படும். உச்ச எல்லையை அடைந்தவுடன் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடுவதற்கான திசைவேகத்தைப் பெற்று நிலவை நோக்கிய நீண்ட பயணத்தை ‘சந்திரயான்-2’ தொடங்கும். ஆகஸ்ட் 20 அன்று நிலவு ஈர்ப்புவிசையின் பிடிக்குள் ‘சந்திரயான்-2’ செல்லும். அடுத்த 13 நாட்களில் ‘சந்திரயான்-2’ சுற்றுப்பாதை பல்வேறு படிகளாகக் குறைந்துகொண்டே வந்து, நிலவின் தரையிலிருந்து 100 கிமீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றும்.
  • அடுத்த முக்கியமான கட்டம், சுற்றுப்பாதைக் கலத்திலிருந்து தரையிறங்கு கலத்தையும் உலாவியையும் பிரிப்பது. இதையடுத்து, தரையிறங்கு கலமும் உலாவியும் மென்முறை தரையிறங்குதலை செப்டம்பர் 7 அதிகாலையில் மேற்கொள்ளும்.
சந்திரயான்-1
  • 2008-ல் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-1’ விண்கலத்தின் நிலவு மோதல் துழாவியைப் போல வன்தரையிறங்குதலாக இல்லாமல், இந்த முறை முதன்முறையாக இஸ்ரோ மென்தரையிறங்குதலை முயன்றிருக்கிறது. மணிக்கு 6,000 கிமீ வேகத்தில் இறங்கும் விக்ரம் தரையிறங்கு கலத்தின் வேகத்தைக் குறைத்து, மெதுவாகத் தரையிறங்குவதற்கு அடுக்கடுக்கான வேகத்தடுப்பு இயங்குமுறைகள் தேவைப்படும். நிலவில் நீரின் இருப்பை ‘சந்திரயான்-1’ மூலம் கண்டறிந்தோம். தற்போதைய சுற்றுப்பாதைக் கலத்திலுள்ள அகச்சிவப்பு நிறமாலைமானியானது நீரின் இருப்பை உறுதிசெய்யும் தடயங்களைத் தேடும்.
  • கூடவே, நிலவின் வெப்பநிலை மாற்றம், நிலவு மேற்பரப்பின் வெப்பக் கடத்துதிறன், நிலவுநடுக்கம் போன்றவை முதல் முறையாக ஆராயப்படும். ‘சந்திரயான்-1’, ‘மங்கல்யான்’ போன்றவற்றின் வெற்றி இஸ்ரோவுக்கு மகத்தான புகழைத் தேடித்தந்திருக்கிறது. ‘சந்திரயான்-2’ வெற்றி விண்வெளித் திட்டங்களில் தொழில்நுட்பங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதில் மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (24-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்