TNPSC Thervupettagam

சந்திரயான் 2ம் நிலவும்

July 24 , 2019 1998 days 2880 0

இதுவரை...

  • நிலவிற்கான இந்தியாவின் முதல் பயணமான சந்திரயான்-1 என்பதின் பயணமானது 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாள் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனத்தை (பி.எஸ்.எல்.வி) பயன்படுத்திச் செலுத்தப்பட்டு சந்திரனைச் சென்றடைந்த போது நிலவின் புறப்பரப்பில் தனது கொடியை நாட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
  • இந்தத் திட்டமானது நிலவில் மெக்னீசியம், அலுமினியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றுடன் நீர் இருப்பதற்கான தடயங்களையும் உறுதி செய்தது.
  • தற்போது ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின்னர், இந்தியாவானது சந்திரனுக்கான தனது இரண்டாவது பயணத்திற்காக சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று மீண்டும் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து மார்க் III புவி ஒத்திசைவு செயற்கைக் கோள் செலுத்து வாகனம் மூலம் செலுத்தியது.
  • 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 நாளன்று நாசாவின் அப்பல்லோ II விண்கலத்தால் நிலவில் முதல் தரையிறக்கம் நிகழ்ந்தது.

செலுத்தும் அமைப்புகள்

  • இந்த GSLV மார்க் III செலுத்து வாகனமானது முதலில் விண்கலத்தைப் பூமியின் தற்காலிக இருப்பு சுற்றுப் பாதையில் செலுத்தும் (170 கிமீ. X 40,400 கிமீ).
  • பின்னர் விண்கலமானது சந்திரனின் பரிமாற்ற சுற்று வட்டப் பாதையை அடையும் வரை விண்கலத்தின் சுற்றுப் பாதையின் உயரமானது அதிகரிக்கப்படும்.
  • சந்திரனின் கட்டுப்பாட்டுக் கோளத்தில் விண்கலமானது நுழையும் போது விண்கலத்தில் உள்ள செலுத்தும் அமைப்புகள் அதன் வேகத்தைக் குறைத்து அதனைச் சந்திரனின் பிடிக்குள் செல்ல அனுமதிக்கும்.
  • பின்னர் 100 கி.மீ. x 100 கி.மீ. என்ற அளவில் சுற்றுவட்டப் பாதையானது சிறியதாக்கப்படும். இந்தச் சுற்றுப் பாதையில் சுற்றும் அதன் சுற்று வாகனத்திலிருந்து தரையிறங்கும் வாகனம் மற்றும் ஊர்ந்து செல்லும் வாகனம் ஆகியவை ஒரு தனிப் பகுதியாக பிரிக்கப்படும். மேலும் தொடர்ச்சியான பிரிப்பு வழிமுறைகளின் மூலம் மேற்கண்ட இரண்டும் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 அன்று சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொள்ளும்.

சந்திரயான் 2ன் சிறப்பம்சங்கள்

  • சந்திரனின் தென் துருவத்தை அடைந்து ஆய்வு செய்யும் முதல் விண்கலம் சந்திரயான் 2 ஆகும்.
  • இப்பயணத் திட்டமானது ஒரு சுற்று வாகனம் (orbiter), இந்தியாவின் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியை தோற்றுவித்தவரான விக்ரம் A. சாராபாயின் நினைவாக விக்ரம் என பெயரிடப்பட்ட ஒரு தரையிறங்கு வாகனம் (lander) மற்றும் அறிவு எனும் பொருளையுடைய “பிரக்யான்” எனப் பெயரிடப்பட்ட ஒரு ஊர்ந்து செல்லும் வாகனம் (rover) ஆகியவற்றால் ஆனது.
  • 3,877 கிலோ கிராம் எடையுடைய இந்த விண்கலமானது இதற்கு முன்னதாக செலுத்தப்பட்ட சந்திரயான் 1-ஐ விட நான்கு மடங்கு அதிக எடையுடையதாகும்.
  • இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகப்பெரிய ஏவு வாகனமான ஜிஎஸ்எல்வி மார்க் III ஆல் செலுத்தப்பட்டதாகும்.
  • சந்திரயான் 1 ஆனது அதன் தரையிறங்கு வாகனத்தை நிலவின் தரை மீது மோதி தரையிறக்கம் செய்தது. ஆனால் சந்திரயான் 2 ஆனது சுமார் 70º தென் அட்ச ரேகையில் மான்சினஸ் - C மற்றும் சிம்பிலியஸ்-N ஆகிய இரண்டு பள்ளங்களுக்கு இடையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள ஒரு சாதகமான உயர் சமவெளிப் பகுதியில் பிரக்யான் ஊர்தியைக் கொண்டுள்ள விக்ரம் தரையிறங்கு வாகனத்தை ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெதுவாக தரையிறங்கச் செய்யும்.
  • இந்தத் தரையிறக்கமானது வரும் செப்டம்பர் 07 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு சுமார் 978 கோடி ரூபாயாகும்.
  • இந்த தரையிறங்கு மற்றும் ஊர்ந்து செல்லும் வாகன இணைகளின் பணிக் காலம் 14 நாட்கள் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அதே நேரத்தில் சுற்று வாகனத்தின் பணி ஓராண்டிற்குத் தொடரும்.

பிரக்யான் ஊர்தி வாகன செயல்பாடு மற்றும் பணிக் காலம்

  • சந்திரன் அதன் அச்சில் ஒரு முழு சுழற்சியை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் சுமார் 29.5 நாட்களுக்குச் சமமாகும்.
  • இது பூமியை அதன் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலத்திற்குச் சமமானதாகும்.
  • இதனால் எப்போதும் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே பூமியை எதிர்கொள்கின்றது.
  • ஆனால் சந்திரன் ஒரு சுற்றை முடிக்க 29.5 நாட்கள் ஆகும் என்பதால் அதன் மேற்பரப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளும் பகல் நேரத்தை 29.5 நாட்களில் பாதி நேரமாக அல்லது 14 நாட்களை விட சிறிதளவு அதிகமாக ஒரே நீட்சியில் அனுபவிக்கின்றன.
  • சந்திரனின் ஒருநாள் என்பது ஏறக்குறைய பூமியின் 14 நாட்களுக்கு இணையானதாகும். செப்டம்பர் 7 ஆம் தேதி தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ள நாளில் நாம் சந்திரனின் முதல் கால்பகுதியினை மட்டும் காண இயலும்.
  • எப்பொழுது தரையிறங்கு வாகனம் பூமியை எதிர்கொண்டுள்ள இந்த பகுதியில் தரையிறங்குகின்றதோ அப்பொழுது இப்பகுதியானது சூரிய ஒளியைப் பெறத் தொடங்கி இருக்கின்ற நாளாகும் (செப்டம்பர் 07).
  • இந்தப் பகுதி ஏறக்குறைய அடுத்த 15 நாட்களுக்கு சூரிய ஒளியைப் பெறும். இது தரையிறங்கு-ஊர்ந்து செல்லும் வாகன இணைகளின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலத்துடன் பொருந்துகின்றது.
  • விக்ரம் வாகனம் மற்றும் பிரக்யான் ஊர்தி ஆகியவை சூரிய ஒளியாற்றலால் இயங்குவதால் இந்தக் காலகட்டத்தில் சந்திரன் மீது விழும் சூரிய ஒளியால் அவை ஆற்றலைப் பெறும்.
  • எப்போது இரவு வருகின்றதோ அப்போது இவை இருள் மற்றும் -180ºC அளவிற்கு குளிர் சுற்றுச்சூழலில் மூழ்குவதால் இவற்றிற்கு ஆற்றல் கிடைக்காது.
  • ஒருவேளை மற்றொரு அரை சுழற்சிக்குப் பின்னர் பகல் நேரம் தொடங்கியவுடன் மீண்டும் இந்த வாகனம் மற்றும் ஊர்தி இணைகள் செயல்படத் துவங்கினால் அது இஸ்ரோவிற்கு கூடுதல் வெகுமதியாக அமையும்.
  • சந்திரனின் இருண்ட பக்கத்தில் அதன் சிறப்பு வெப்பத்தைப் பயன்படுத்திச் செயல்படும் சில சீன மற்றும் அமெரிக்க விண்கலங்களைப் போல் இந்தக் கருவிகளானது தீவிரக் குளிரைத் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப் படவில்லை.

சந்திரனை ஆய்வு செய்யும் விதம்

  • நிலவைச் சுற்றி வரும் விண்கலத்தில் (orbiter) உள்ள தரைத்தளப் படமிடல் புகைப்படக் கருவி 2ஐப் பயன்படுத்தி சந்திரனின் துருவ சுற்றுப் பாதையில் 100 கிமீ தொலைவில் இருந்து சந்திரனின் படங்களை அக்கருவி புகைப்படம் எடுக்கும்.
  • சந்திரன் அதன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் போது சந்திரனின் துருவ சுற்றுப் பாதையானது செங்குத்துத் திசையில் வடக்கிலிருந்து தெற்காக இருக்கும்.
  • இதனால் சந்திரன் சுழலும் போது இந்தச் சுற்று வாகனமானது சந்திரனின் முழு மேற்பரப்பு மீதான காட்சியை மேலிருந்துக் கிடைக்கப் பெறுகின்றது.
  • இந்த சுற்று வாகனத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளானது சந்திரனின் நிலப்பரப்பின் முப்பரிமாணப் படத்தை உருவாக்கப் பயன்படும்.
  • சுற்று வாகனத்தில் உள்ள 8 கருவிகள் அல்லது ஆய்வு உபகரணங்களில் இதுவும் ஒன்றாகும். தரையிறங்கு வாகனமானது இது போன்ற 3 கருவிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சில சந்திரனின் மேற்பரப்பில் உள்ள எலக்ட்ரானின் அடர்த்தி மற்றும் வெப்பநிலை, செங்குத்து வெப்பநிலைச் சரிவு மற்றும் தரையிறங்கு தளத்தைச் சுற்றி ஏற்படும் நில அதிர்வு ஆகியவற்றைக் கணக்கிடும்.
  • ஊர்தி வாகனமானது சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதித்து அவை என்னென்ன கூறுகளைக் கொண்டுள்ளன என்பதை அடையாளம் காணும் இரண்டு ஆய்வுக் கருவிகளைக் கொண்டு செல்கின்றது.
  • ஆறு சக்கரங்களைக் கொண்ட ஊர்தி வாகனத்தால் ஒருமுறை சந்திரனில் இறங்கி விட்டால் தரையிறங்கு வாகனத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு அதனால் பயணிக்க முடியும்.

சந்திரனில் மென்மையான தரையிறக்கத்திற்கான வெற்றி விகிதம்

  • இஸ்ரோவின் வலைதள தகவலின்படி, இதுவரை சந்திரனில் மென்மையான தரையிறக்கத்திற்காக 38 முயற்சிகள் நடந்துள்ளன. இதன் வெற்றி விகிதம் 52% ஆகும்.

இத்திட்டம் மற்றும் சந்திரன் குறித்த ஆய்வின் அவசியம்

  • இந்த ஆய்விற்குத் தேவையான அசலான சூழலை சந்திரன் வழங்குகின்றது. மேலும் இது மற்ற விண்ணுலக அமைப்புகளை விட குறைந்த தொலைவில் உள்ளது.
  • சந்திரன் எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு படிப்படியாக முன்னேற்றமடைந்தது என்பதை புரிந்துக் கொள்ளுதல் சூரியக் குடும்பத்தையும் பூமியையும் நன்கு புரிந்து கொள்ள உதவும்.
  • விண்வெளிப் பயணங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டும் புவிக்கு அப்பாலான கோள்கள் தினந்தோறும் கண்டறியப்படுவதால் பூமியின் அருகில் உள்ள வான்வெளிப் பொருளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்வது மேம்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு உதவும்.
  • இறுதியாக இது இந்த சூரியக் குடும்பமும் அதன் கோள்களும் எவ்வாறு உருவாகி வளர்ந்துள்ளன என்ற பெரிய புதிரின் ஒரு பகுதியாகும்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்